அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அரச அதிபர் இடமாற்றம் சிங்களக் குடியேற்றம் அமைக்கவா?; சந்தேகம் எழுப்புகிறார் செல்வம் எம்.பி.


தமிழ் மக்கள் வாழுகின்ற மன்னார் மாவட்டத்தில் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவரை அரச அதிபராக நியமித்தமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த நியமனம், மன்னாரில் சிங்களக் குடியேற்றங்களை அதிகரிப்பதற்கு ஏதுவான நிலையைத் தோற்றுவிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மன்னார் மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றி வந்த என்.வேதநாயகனை இடமாற்றம் செய்துவிட்டு சரத் ரவீந்திர அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மன்னார் மாவட்ட மக்களை கதிகலங்க வைத்துள்ளதுடன், இச் செயற்பாடு மன்னார் மாவட்டத்தில் மீள் குடியேறியுள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
சாதாரண குடிமகன் ஒருவருக்கு சிங்கள மொழியோ அல்லது ஆங்கில மொழியோ தெரியாத நிலையில், பெரும்பான்மை இன அரச அதிபர் நியமிக்கப்பட்டுள்ளமை, அரச அதிபர்  பொது மக்கள் தொடர்பாடலைச் சிக்கலானதாக்கும். இடையில் மொழிபெயர்ப்புத் தரகர்கள் செயற்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.
 
 மன்னார் முக்கிய மையம்
மன்னார் மாவட்டம் தற்போது இலங்கையில் முக்கிய மையமாக திகழ்கின்றது. மன்னார் வளைகுடா கடற்பரப்பில் எரிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலை மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான கடல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது. 
 
இந்த அபிவிருத்தி சார்ந்த திட்டங்களால் தமிழ் மக்கள் நன்மையடைய வேண்டும். பெரும்பான்மையின அரச அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதன் காரணத்தினால் அச்செயற்பாடு தலைகீழாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அபிவிருத்தித் திட்டங்களால் ஏற்படக்கூடிய வேலை வாய்ப்புகள் அனைத்தும் தமிழ் மக்களை விட்டு தென்பகுதி மக்களை சென்றடையக்கூடிய சாத்தியங்கள் அரச அதிபர் நியமனத்தால் ஏற்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்திற்கும் புதிய அரச அதிபரின் நியமனம் உந்து சக்தியாக காணப்படுவதாக மக்களும் அதிகாரிகளும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் என்றார்.   
மன்னார் அரச அதிபர் இடமாற்றம் சிங்களக் குடியேற்றம் அமைக்கவா?; சந்தேகம் எழுப்புகிறார் செல்வம் எம்.பி. Reviewed by Admin on November 17, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.