அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் பேசுவோரை மீளக் குடியேற அனுமதிக்காது உல்லாச ஹோட்டல் அமைக்க அரசு முயற்சி -சிவசக்தி ஆனந்தன் எம்.பி.கண்டனம்

தலைமன்னார் பியர் பகுதியிலிருந்து 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் 600 முஸ்லிம் தமிழ்க் குடும்பங்கள் மீளக் குடியேற அனுமதி மறுக்கும் அரசாங்கம் அப்பகுதியில் நட்சத்திர உல்லாச விடுதியை அமைப்பதில் தீவிரமாகச் செயற்படுவதாகக் குற்றஞ் சாட்டியுள்ள வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தால் எவ்வாறு இந்நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.


இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
1914 ஆம் ஆண்டு பாலா என்ற தமிழருக்கு இப்பகுதியில் 121 ஏக்கர் காணி சொந்தமாக இருந்துள்ளது. இதனை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் விலைக்கு வாங்கி தமக்குரித்தாக்கியுள்ளனர். யுத்தத்தினால் இடம்பெயர்ந்த இவர்கள் மீண்டும் தமது சொந்த வாழ்விடங்களுக்குச் சென்று வீடுகட்ட முற்படுகையில், அரசால் தடுத்து நிறுத்தப்பட்டு இன்று கதியற்று நடுத்தெருவில் நிற்கின்றனர்.
காணிச்சீர்திருத்த ஆணைக்குழு இக்காணி பாலா என்பவருக்குரியதல்ல என்றும் அவரிடம் இருந்தது போலி ஆவணம் என்றும் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுற்றுலா அபிவிருத்தி சபை இந்நிலத்தை ஆக்கிரமித்து நட்சத்திர உல்லாச விடுதி ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த உல்லாச விடுதியை நிர்மாணிப்பதில் அரசின் உயர்மட்டத்திலுள்ளோர் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிகின்றது.
இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்குச் சொந்தமான 17 ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலத்தில் இஸ்லாமிய மக்கள் நெருக்கமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேற்குறித்த பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் நிலைகுறித்து எதுவிதத் தகவலும் இல்லை. இவ்வாறு நாதியற்றவர்களாக்கப்பட்டிருக்கும் மக்களுக்குக் குறைந்த பட்சம் தலா ஒரு குடும்பத்திற்கு ஒன்றரை பரப்பு அதாவது பதினைந்து பேர்ச் வீதம் மொத்தம் நாற்பது பரப்பு நிலத்தை வழங்கிக் குடியேறுமாறு மன்னார் மாவட்ட அரச நிர்வாகத்தால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அதனைக்கூட பரிசீலிக்க மறுத்து, அம்மக்களை விரட்டி உல்லாச விடுதி கட்டுவதிலேயே குறியாக இருப்பவர்களின் உண்மையான நோக்கம் என்ன? இடம்பெயர்ந்த அப்பாவி மக்களை தமது சொந்த நிலத்தில் மீள்குடியேற மறுத்து, அவர்களின் நலனை உதாசீனப்படுத்தி உல்லாசத்துறைக்கு விடுதி கட்ட முன்னுரிமை வழங்கும் அரசு எத்தகைய நல்லிணக்கத்தை இந்நாட்டில் ஏற்படுத்தப் போகின்றது.
பாலஸ்தீனம் தனிநாடாக உதயமாவதற்குப் பூரண ஆதரவையும் பாலஸ்தீன அரசின் தூதுவராலயத்திற்குரிய அலுவலக அந்தஸ்தை அங்கீகரித்து அதன் அலுவலகத்தைக் கொழும்பில் அனுமதித்திருக்கும் இவ்வரசு இஸ்ரேல் பாணியில் தமிழ் பேசும் மக்களின் குடிமனைக் காணிகளையும், வாழ்வுரிமையையும் பறித்து அம்மக்களை நாடோடிகளாகத் திரியவிட்டிருக்கின்றது.
1990 களில் தமிழ் நிலப்பரப்பிலிருந்து இஸ்லாமிய மக்கள் வெளியேற்றப்பட்டதைக் காரணம் காட்டி இதுவரை காலமும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து நிதியுதவியினைப் பெற்றுக் கொண்டு அதனைத் தமிழ் மக்களுக்கு எதிராகப் போராயுதங்களாகப் பயன்படுத்தி தனது அரசியலை ஸ்திரப்படுத்தி வந்த இவ்வரசு மன்னார் பியரில் அம்மக்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் மீளச்சென்று குடியேறிவாழ அனுமதிக்காததுடன் தாங்களாகவே தங்களது வாழ்நிலங்களில் குடியேறச் சென்றவர்களையும் தடுத்துள்ளது. மேலும் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள வேண்டிய அத்துறை அமைச்சரான குணரட்ன வீரக்கோன் இம்மக்கள் நிர்க்கதியான நிலையில் இருப்பதாகத் தான் அறியவில்லை என்று தெரிவித்திருப்பதானது, அரசின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எவரும் வடக்கு  கிழக்கு மக்களின் நலன்களில் கிஞ்சித்தும் அக்கறை அற்றவர்கள் என்பதையே நிரூபித்துள்ளது.
எத்தகைய கொள்கை அடிப்படையில் இவ்வரசு இத்தகைய மக்கள் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்ற கேள்வி எமது மக்களிடம் நிரந்தரமாக எழுந்துள்ளது. மன்னார் அரசாங்க அதிபராகத் தென்னிலங்கை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவரை, நியமித்தவுடன் ஆரம்பக் கைங்கரியமாக இந்த அநீதியான செயல் இடம்பெற்றுள்ளதால் மேலும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து தங்களது வாழ்வுரிமை பறிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அரசியல் அநாதைகளாக்கப்பட்டு விடுவோமோ என்று மக்கள் கவலைகொண்டுள்ளனர். ஆகவே இந்த அரசு உண்மையிலேயே தனது நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் நிலைநாட்ட விரும்பினால் தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் அவர்களது சொந்த இடத்தில் காலம் தாழ்த்தாது குடியமர்த்தி அம்மக்களுக்கு மீள்குடியேற்றக் கொடுப்பனவுகள் அனைத்தையும் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசுவோரை மீளக் குடியேற அனுமதிக்காது உல்லாச ஹோட்டல் அமைக்க அரசு முயற்சி -சிவசக்தி ஆனந்தன் எம்.பி.கண்டனம் Reviewed by Admin on November 19, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.