மன்னாரில் 40 கிலோ கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி கைப்பற்றல்!!
மன்னாரில் பெரும் தொகையான கஞ்சா போதைப்பொருளை ஏற்றிச் சென்ற நிலையில் முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மன்னார் பிரதான பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட நகரப்பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்துச்செல்லப்பட்ட நிலையிலேயே இது கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் அண்மைக் காலங்களாக அதிகரித்துச்செல்லும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மன்னார் பிராந்தியத்திற்கான பிரதி பொலிஸ்மா அதிபர் பணிப்புரையினை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மன்னார் நகரப்பொலிஸார் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் பொருட்டு பொலிஸார் வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு முச்சக்கர வண்டிகளின் நடமாட்டம், அவற்றின் செயற்பாடுகள், அவற்றில் பயணிப்போர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இம்மாதம் முதலாம் திகதி (01.12.2011) அதிகாலையில் சுமார் 2.30 ற்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒரு தொகுதி கஞ்சா போதைப்பொருட்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியினை பொலிஸார் மடக்கிப் பிடித்திருக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட முச்சக்கர வண்டியினுள் சுமார் 40 கிலோகிராம் கஞ்சா என சந்தேகிக்கப்படும் பொருள் மூடைகளாக இருந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
வீதி ரோந்து கடமையில் ஈடுபட்ட மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள் உத்தியோகத்தர்களே சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியினை சோதனையிட்டு சாரதியினை கைது செய்திருக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளை அடுத்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டிருப்பதோடு சிறிய அளவில் பொதிகள் செய்யப்பட்ட மாற்றுவகையான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே சந்தேக நகபர்களை மன்னார் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் 40 கிலோ கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி கைப்பற்றல்!!
Reviewed by Admin
on
December 02, 2011
Rating:

No comments:
Post a Comment