அண்மைய செய்திகள்

recent
-

இயேசு ஏன் இந்த உலகத்திற்கு வர வேண்டும்?-சிறப்புக் கட்டுரை

பயிர்த் தொழில் செய்து கொண்டிருந்த ஓர் சமயவாதியைக் குறித்த நவீன உவமைக்கதை ஒன்றை வாசித்தேன். ஒரு குளிர்கால இரவு வேளையில் சமயலறைக் கதவின் மீது ஏதோ விட்டுவிட்டு படபடவென்று அடிக்கும் சத்தம் அந்த சமய வாதிக்கு கேட்டது. அவன் ஜன்னல் வழியாகப் பார்த்தான். அங்கே நடுங்கிக் கொண்டிருந்த சிறு குருவிகளைக் கண்டான். குளிரைத்தாங்க முடியாத அவை சமையலறையின் வெப்பத்தை நாடி அவை வந்து கண்ணாடிக் கதவின் மேல் மோதிக் கொண்டிருந்தன.
அவற்றின் நிலைமைக் கண்டு அவன் உள்ளத்தில் தொடப்பட்டான்.
வெளியே கடுமையான உறைபனி விழுந்து கொண்டிருந்தது. ஆனாலும் அவன் குளிரைத் தாங்கும் உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தான். வைக்கோல் போட்டுவைத்திருக்கும் நீண்ட அறையைத் திறந்து வைத்தால் பறவைகள் இரவு வேளையில் அதற்குள் தங்குமே என்பது அவனது எண்ணம். ஆனால் அவன் கதவைத் திறந்தவுடன் குருவிகள் பறந்தோடி இருளில் மறைந்து கொண்டன. அவன் அந்த அறையின் விளக்கைப் போட்டு, ஒரு மூலையில் கொஞ்சம் வைக்கோலைப் போட்டு வைத்தான். என்றாலும் எந்தப் பறவைகளும் அதற்குள் வரவில்லை. அவனைக் கண்டு அவை பயந்து போய்விட்டிருந்ததே அதற்கு காரணம்.
அந்தப் பறவைகளை அறைக்குள் கொண்டுவர தன்னால் முடியுமானவற்றை எல்லாம் செய்து பார்த்தான். குருவிகளுக்கு வழிகாட்டும்படி அந்த வாசல் வரை வழியில் ரொட்டித் துண்டுகளைப் போட்டு வைத்தான். பறவைகளுக்குப் பின்னால் சென்று அவைகளை உள்ளே விரட்ட முயன்றான். எதுவுமே பலனளிக்கவில்லை. அந்தக் குருவிகளுக்கு அன்னியனாகத் தெரிந்த அவனது பெரிய உருவம் அவற்றின் பயத்தை அதிகரிக்கச் செய்தது. உண்மையில் அவன் அவைகளுக்கு உதவவே முயலுகிறான் என்பதை அந்தப் பறவைகள் புரிந்துகொள்ள முடியவில்லை.
தன் வீட்டிற்குத் திரும்பிய அவன், யன்னல் வழியே கடும்குளிரால் விறைத்துச் சாகும் நிலையில் இருந்த அந்த குருவிகளை நோக்கிப் பார்த்தான். அப்போது மின்னல் போன்ற ஓர் எண்ணம் அவன் உள்ளத்தைத் தாக்கியது. நானும் ஓரே ஒரு கணம் அந்தக் குருவிகளைப் போல ஆகக் கூடுமானால்? அப்போது என்னைக் கண்டு அவை அஞ்சப்போவதில்லை! பாதுகாப்புக்கு என்னால் அவைகளை வழிநடத்திச் செல்ல முடியும்.
அதே வேளையில் அவன் மற்றோர் உண்மையையும் உணர்ந்து கொண்டான். இயேசு ஏன் மனிதனாகப் பிறந்தார் என்ற உண்மையும் அவனுக்குப் புலனாயிற்று.
தேவன் இந்தப் பூமிக்கு வந்தபோது…..
தேவன் மனிதனாகப் பிறப்பது என்பதோடு ஒப்பிடும் போது, மனிதன் பறவையாகுவது என்பது ஒன்றுமில்லை. பிரபஞ்சத்தைப்படைத்த ராஜரீகமான தேவன் தம்மை ஒரு மனித உருவிற்குள் அடக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை விசுவசிப்பது அன்று மட்டுமன்றி, இன்றும்கூட – சிலருக்கு கடினமானதாகவே இருக்கிறது. அப்படியானால் எப்படி தேவன் நம்மோடு உண்மையான தொடர்பு கொள்ள முடியும்?
தேவ சாயலாக படைக்கப்பட்ட மனிதன், தேவகட்டளையை மீறி பாவம் செய்த போது தேவனுடன் வாழ்ந்த ஏதேன் தோட்டத்தில் இருந்து கலைக்கப்பட்டான். அதன் பின்னர் பாவசாயல் என்கிற மனித சாயலை உடையவனாக மாறினான்.(ஆதியாகமம் 5:3). இந்த பாவசாயல் என்னும் மனிதசாயலில் வாழும் மனிதர்களை, அவர்களின் பாவசாயலில் இருந்து மீட்டு (அதாவது விடுவித்து – விடுதலை அளித்து) மீண்டும் தேவசாயலை உடையவர்களாக மாற்றும்படியாக தேவகுமாரன் என்கிற இயேசு மனிதனாக இந்தப் பூமிக்கு வந்தார்.
இந்த உண்மையை உணர்ந்து கொள்வோமாக.
தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
லில்லி ஜெயசீலி பிரான்சீஸ்.
கோல்டிங், டென்மார்க்
இயேசு ஏன் இந்த உலகத்திற்கு வர வேண்டும்?-சிறப்புக் கட்டுரை Reviewed by Admin on December 25, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.