அண்மைய செய்திகள்

recent
-

இன்று மறைந்த ஆகம நட்சத்திரம் மனோகர ஐயாவின் 31ம் நாள் நினைவஞ்சலி

’யாதும் ஊரே யாவரும் கேளீர் ..’ என்ற தத்துவம் மனோகரக் குருக்களின் 
தாரக மந்திரமாக இருந்ததை அறியாதார் இல்லை. முகங்களை நேசித்தார்,
நெஞ்சங்களை மகிழ்வித்தார், சமூகத்தில் உயிர் வைத்தார். இனம், மதம், கீழோர், மேலோர் என்ற பேதங்கள் அவரின் அகராதியிலேயே கிடையாது.

வற்றாத எளிமையும், மாறாத புன்னகையும், குறைவற்ற இன்சொல்லும்
சகல மதத்தையும் இணைத்தது .. சகல இனத்தையும் அணைத்தது.
கிரியைகளும், மந்திரங்களுமே வாழ்வென்று பணியாற்றிய அந்தண குலத்தோரின் வாழ்க்கையில் சமூகத்திற்கென்றும் வியர்வை சிந்திய சிவாச்சார்யர் இவராகத்தான் இருக்க முடியும். தெய்வத்தின் சேவகராகவும், சமாதான போஷகராகவும் இவரால் ஒளி பரப்ப முடிந்தது எப்படியென்ற கேள்விக்கு அந்த தெய்வம்தான் பதில் சொல்ல முடியும்.

ஈடில்லா இவரின் இடத்தை நிரப்புவதும், தாங்கொணா இவரின் பிரிவை சுமப்பதும் உண்மையிலேயே அனைத்து மன்னார் மக்களுக்கும் ஒரு சோதனைதான் .. தமது பலகால வாழ்க்கையை இவரையே நம்பி வாழ்ந்த
நிலையில், இல்லக்குறைகள் நீக்க ஆன்மீகத் தலைவனில்லாத அனாதையாகி விட்டார்கள். தம்மோடுதான் ஐயா இப்பொழுதும் இருக்கிறார் என்ற உறுதி மக்களிடம் தெரிகிறது.

“தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலால்,
 தோன்றலின் தோன்றாமை நன்று“  
என்ற குரலோடு மனோகர ஐயாவின் ஒவ்வொரு நாட்களும் பொருந்தியிருந்தன. சேவைகளால் இவர் ஈட்டிய பெரும்புகழால் மன்னார் மாவட்டமே பெருமிதம் கொண்டது. தனது நாற்பது வருடகால சேவையை மன்னாருக்கு காணிக்கையாக்கினார். 

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லனு
ஊதியம் இல்லை உயிர்க்கு“
என்றும்,   
“நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்,
பண்பு பாராட்டும் உலகு“ என்றும் குறள்கள் சிந்தும் அமுதங்களுக்கு உயிரூட்டி வாழ்ந்தவாராக இருந்த எங்கள் ஐயாவை இனி காண்பது எப்போது என்று நினைக்கும்போது நெஞ்சமே குலுங்குகிறது. 

“அறன் எனப்பட்டதே இழ்வாழ்க்கை அஃதும்,
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று“  எனும் குறள் வரிகளில் ஐயாவின் மணவாழ்க்கையும், இல்லச்சிறப்பும், புத்திரர்க்கான கல்வி வழியும், வழிகாட்டலும் தெளிவாக தெரிகிறது, தெளிவையும் தருகிறது. அதுமட்டுமின்றி, குறள்வழியே வாழ்வென வாழ்ந்த இந்த மகானின் சகல நித்திய கருமங்களும் திருக்குறளையே சார்ந்திருப்பதை உணரலாம் ..

“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்ப செயல்”
“பிறர்மனை நோக்காத பேரண்மை சான்றோர்க்கு
அதன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு“
“பெரியோரை பேணாது ஒழுகின் பெரியோரால்
பேரா இரும்மை தரும்“
என்ற வரிகளின் பதங்களை அழங்கரிப்பதைப்போல் அமைந்த ஐயாவின் வாழ்வுத்தடங்களை கதைப்போமானால் அதற்கு முடிவேயிருக்காது. அந்த அளவுக்கு சேவை, சமூகம், தொண்டு, இல்லறம், ஆகமம், அனுஷ்டானம், மனித நேயம், இன மத ஒற்றுமை, அன்பு என்ற அத்தனை அறவழிகளிலும் வாழ்ந்தார், வாழ்ந்து வழிகளும் காட்டினார். இன்றும் தெய்வமாக வாழத்தான் செய்கிறார்.
அதனால்தான் அவரை குருதேவராக ஏற்று பின்தொடரும் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையினர் ஒரு பெரும் மணிவிழாவை எடுத்து, பார் சிறக்கும் வண்ணம் கௌரவித்தனர். பாராட்டி மகிழ்வடைந்து,
மன்னார் மக்களுக்கும் மனநிறைவை பகிர்ந்தனர்.

“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞானத்தின் மாணப்பெரிது“ என்று குறள் தந்த நன்றிக்கடமையை குருதட்சணையாக அர்ப்பணித்தனர். 
“சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு“ என்பதுபோல அறநெறி தவறாமல், அன்பே உருவாக வாழ்ந்து மறைந்துவிட்ட இந்த மனித தெய்வத்தின் 31வது நாள் நினைவஞ்சலி நிகழ்வுக்கு இக்கட்டுரை அர்ப்பணமாகிறது.

பிரம்மஸ்ரீ ம. தர்மகுமார சர்மா, 
பிரதம குரு, ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பேசாலை.


இன்று மறைந்த ஆகம நட்சத்திரம் மனோகர ஐயாவின் 31ம் நாள் நினைவஞ்சலி Reviewed by Admin on April 15, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.