சிவபூமியும் ஆக்கிரமிக்கப்பட்டது (பட இணைப்பு)
போர் முடிவடைந்துள்ள நிலையிலும்கூட அரசு அவர்களை இன்னும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தவில்லை. கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்ற புராணத்தை ஓதி அங்கு வாழ்ந்து வந்த மக்களை வெளியிடங்களில் அலைய விடுகின்றது.
திருக்கேதீச்சர ஆலயம் அமைந்துள்ள வளாகத்திலிருந்து 300 மீற்றர் தொலைவிலேயே இராணுவத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இங்கு மேற்கொள்ளபட்ட தொல்லியல் ஆய்வுகள் தமிழர் சார்பான வரலாற்றெழுத்தியலை முன்னிலைப்படுத்துவதாக இருப்பினும் இப்போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் கீழ் பணியாற்றும் தொல்லியலாளர்கள் அது சிங்களவர்களுக்கும், பௌத்த மதத்தற்கும் உரியது என்று நிரூபிக்க கூடியளவிலான ஆய்வு முடிவுகளை முன்வைத்தாலும் வியப்பில்லை.
போருக்குப் பின்னர் இலங்கைஅரசு தமிழர் வாழும் பகுதிகளை சிங்களமயப்படுத்துவதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. நில அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம், விகாரைகள் அமைப்பு எனப் பல வடிவங்களிலும் தமிழர் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு கட்டவிழ்த்து வருகின்றது.
அந்தப் பின்னணியில் 10 ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த தமிழர்களின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான சிவ பூமி எனப் போற்றப்படும் திருக்கேதீச்சரம் ஆலயம் அமைந்துள்ள சூழலிலும் பௌத்த மதத்தை நிலைநாட்டும் முயற்சியில் பௌத்த அடிவருடிகள் செயற்பட்டு வருகின்றனர்.
இதற்குத் தீவிரமான அரசின் ஆதரவும் உண்டு. அங்கு, சுமார் 1,500 கிலோ எடைகொண்ட புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நின்றுவிடவில்லை அரசின் அராஜகம். அதற்கு ஒருபடி மேலேசென்று திருக்கேதீச்சர ஆலய கிராமத்தில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றும் நடவடிக்கையிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
திருக்கேதீஸ்வர ஆலயக் கிராமத்தில் சுமார் 185 குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன. போர்க் காலத்தில் அந்தக் குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தன. எனினும், போர் முடிவடைந்துள்ள நிலையிலும்கூட அரசு அவர்களை இன்னும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தவில்லை.
கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்ற புராணத்தை ஓதி அங்கு வாழ்ந்து வந்த மக்களை வெளியிடங்களில் அலைய விடுகின்றது.
ஆலய கிராமத்தில் சிங்களக்
குடியேற்றம்
ஆனால், ஆலயக் கிராமத்தில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றும் நோக்கிலேயே அரசும், இராணுவமும் செயற்பட்டு வருகின்றன என்று மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
மன்னார் மாட்டத்தில் உள்ள சரித்திர முக்கியத்தும்வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வரலாறு பழைமை வாய்ந்ததாகும்.
திருக்கேதீஸ்வர புனித ஸ்தலம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. ஆனால், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கான சான்றுகள் தற்போது ஆலயத் திருப்பணிச் சபையிடம் உள்ளது.
இவ்வளவு நூற்றாண்டுகளுக்குமான தொடர்ச்சியான சைவ சமய வராலற்றுப் புலத்தை திருக்கேதீச்சரம் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் சிதம்பரத்தைப்போல திருக்கேதீச்சர ஆலயம் 48 ஹெக்டேயர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அத்துடன், ஆலயத்தைச் சூழவுள்ள கிராமம் பரந்த நிலப்பரப்பைக் கொண்டது.
ஒல்லாந்தர், போர்த்துகீசரின் ஆட்சிக் காலத்தில் திருக்கேதீச்சர ஆலயம் உடைக்கப்பட்டு அதிலிருந்து பெறப்பட்ட கருங்கற்களில் தேவாலயம் மற்றும் மன்னார் கோட்டை அமைக்கப்பட்டது எனவும் வரலாறு கூறுகின்றது.
![]() |
தற்போது அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை |
இதற்குமுன்னர் அந்தப் பகுதியில் போர்க் காலத்தில் விகாரையொன்று கட்டப்பட்டுள்ளது. இந்த விகாரை 2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்க் காலத்தில் மக்கள் ஆலயக் கிராமத்திலிருந்து வெளியேறியிருந்த நிலையிலேயே, இராணுவத்தின் உதவியுடன் இந்த விகாரையை அரசு நிர்மாணித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகின்றது.
(எற்கனவே படையினரால் அமைக்கப்பட புத்த கோவிலின் புகைப்படங்களை பார்வையிட..)
(எற்கனவே படையினரால் அமைக்கப்பட புத்த கோவிலின் புகைப்படங்களை பார்வையிட..)
அத்துடன், திருக்கேதீச்சர ஆலயத்திலிருந்த ஆயத்த மணியும் தற்போது விகாரையில்தான் இருக்கின்றது எனவும் அறியமுடிகின்றது. தேவாரப் பாடல்பெற்ற புனிதத் தலங்களுள் ஒன்றான திருக்கேதீஸ்சரம் புனித பூமி அமைந்துள்ள வளாகத்தை ஆக்கிரமித்து அங்கு பௌத்த மதத்தை நிலைநாட்டுவதற்கு இலங்கை அரசு பல நடவடிக்கைகளை மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுத்து வருகின்றது.
![]() |
திருக்கேதீச்சர ஆலயத்திலிருந்த ஆயத்த மணி |
திருப்பணிச்சபை நடவடிக்கை
அதேவேளை, திருக்கேதீச்சர ஆலய சூழலில் புத்தர் சிலை அமைக்கப்படும் விவகாரத்திற்குத் திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச்சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அகில இலங்கை இந்து மாமன்றமும் இதனைக் கண்டித்துள்ளது.
அத்துடன், இது விடயம் தொடர்பில் அந்தச் சபையினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நல்லிணக்க செயற்பாடுகளுக்கான ஆலோசகர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க எம்.பியை நியமித்தார்.
எனினும், இதனால் நடக்கப்போகும் மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது தமிழர்களுக்கு நன்கு தெரியும். இலங்கை அரசு பெயரளவில் மட்டும்தான் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கின்றது என்பது அவர்களுக்கு நன்கு புரியும். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி மஹிந்த அரசு அங்கே புத்தர் சிலையை அமைத்தே தீரும் என சிலர் அடித்துக்கூறுகின்றனர்.
இதற்கு அவர்கள் தகுந்த காரணிகளைக் கோடிட்டுக் காட்டுகின்றனர். திருக்கேதீச்சரத்தில் மட்டுமல்ல, திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலை அகற்றுவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. வீதி அபிவிருத்தி என்ற போர்வையிலேயே இந்தத் திட்டமிட்ட செயல் அரங்கேற்றப்படுகின்றது.
அத்துடன், தம்புள்ளையிலும் புனித பூமி எனக் கூறி இரண்டு கோவில்களை அங்கிருந்து அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது. புனித பூமியிலிருந்து பள்ளிவாசலையும் அகற்றுமாறு பௌத்த பிக்குகள் கோஷமிடுகின்றனர்.
பௌத்த மதத்திற்கு அப்பால்
செல்லும் பிக்குகள்
இலங்கையிலுள்ள சில பிக்குகள் பௌத்த மதத்தின் போதனைகளுக்கு அப்பால் சென்றே செயற்படுகின்றனர். அரசியல்,அடாவடி என அனைத்துவித செயல்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். புனிதமானதொரு மதத்தின் குருக்களான இவர்கள் இவ்வாறு நடந்துகொள்வது அவர்களின் மதத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும். காவி உடை தரித்து காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடக்கூடாது.
அரசின் போலிப் பிரசாரம்
அதேவேளை, இலங்கைத் தீவில் சிறுபான்மையின மக்கள் பூரண சுதந்திரத்துடனேயே வாழ்கின்றனர் என உலகுக்குப் போலிப்பிரசாரங்களைச் செய்யும் மஹிந்த அரசு, நாட்டில் சிறுபான்மையின மக்களை அடக்கி ஓடுக்கி ஆள்வதற்கே முயற்சிக்கின்றது. நாட்டில் அண்மைக்காலமாக அரங்கேறும் சம்பவங்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
குறிப்பாகத் தமிழினத்தின் மீது ராஜபக்ஷ அரசு கடும் கோபத்தில் உள்ளது. அதனால்தான் தமிழர்களை அனைத்து வழிகளிலும் துன்பப் படுத்திவருகின்றது. தழிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை அழித்து வருகின்றது.
நாட்டில் நல்லிணக்தை ஏற்படுத்தி சகல இனங்களுக்கும் சம உரிமை வழங்குமாறு இலங்கை அரசை சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்றது. ஆனால், அதுகுறித்து அரசு கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. மாறாக, அசுரவேகத்தில் இனமத சுத்திகரிப்பு நடவடிக்கையையே அது மேற்கொண்டு வருகின்றது.
அன்று இன ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் இன்று மத ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைளை மஹிந்த அரசு கைவிடாவிட்டால் உலக நாடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பயங்கரமாகவே இருக்கும் என்பதை இலங்கை அரசு உணரவேண்டும்.
நன்றி -உதயன்
படங்கள்- மன்னார் இணையம்(Newmannar.com)
தொடர்பு பட்ட செய்திகள்
படங்கள்- மன்னார் இணையம்(Newmannar.com)
தொடர்பு பட்ட செய்திகள்
மன்னார் திருக்கேதிஸ்வர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்காண அனுமதிப்பத்திரம் இரத்து ! - புத்தர் சிலை அகற்றப்படுமா ???
சிவபூமியும் ஆக்கிரமிக்கப்பட்டது (பட இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
May 08, 2012
Rating:

No comments:
Post a Comment