தமிழ்க்கைதிகளை விடுவிக்கக் கோரி வவுனியாவில் பெரும் சத்தியாக்கிரகம்; நகரசபை மைதானத்தில் நாளை ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்வர்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நாளை வவுனியாவில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம் பெறவுள்ளது. சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இந்தக் கவனயீர்ப்புச் சத்தியாக்கிரகம் காலை 7 மணி முதல் நடத்தப்பட உள்ளது.
தம்மை விடுவிக்குமாறு கேட்டு தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நிபந்தனையற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்தச்சத்தியாக் கிரகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மகசீன் சிறைச்சாலை, கொழும்பு தடுப்புக்காவல் சிறைச்சாலை, அனுராதபுரம், களுத்துறை, வவுனியா, கண்டி சிறைச்சாலைகள் ஆகியன உட்பட நாட்டிலுள்ள பல்வேறு சிறைகளிலும் 800க்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் ஏதுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறுகின்றது.
இவர்களின் பலர் குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றியே ஐந்து, பத்து, பதினைந்து வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். "அரசியல் கைதிகள் தொடர்பில் நாம் பலமுறை நாடாளுமன்றத்தின் ஊடகாவும் வேறு முறைகளிலும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம். அரசியல் கைதிகளும் பல முறை தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்திருக்கின்றனர். இவர்கள் விடயத்தில் ஜனாதிபதி, அமைச்சர்கள் வழங்கிய உறுதி மொழிகள்கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை'' என்று கூட்டமைப்பு நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் அரசியல் கைதிகள் பலர் அங்கவீனமுற்றவர்களாக உள்ளனர். பல பெண்கள் திருமணம் முடித்து குழந்தை உள்ளவர்களாகச் சிறையில் வாடுகின்றனர். குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டிய பல இளைஞர்களும் சிறைகளிலேயே அடைபட்டுக் கிடக்கின்றனர். அதனால் அவர்களின் குடும்பங்கள் வாழவழியின்றி வாடுகின்றன.
எந்தவித விசாரணைகளும் இன்றி தமிழ் அரசியல் கைதிகளை சிறைகளில் அடைத்து வைத்திருப்பதனால் அவர்களது முழு வாழ்க்கையுமே அழிந்து சின்னாபின்னமாகி உள்ளது. போர் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இந்தக் கைதிகளின் விடுதலை பற்றி இலங்கை அரசு சிந்திக்காமல் இருப்பதானது வேதனைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமாகும்'' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்க்கைதிகளை விடுவிக்கக் கோரி வவுனியாவில் பெரும் சத்தியாக்கிரகம்; நகரசபை மைதானத்தில் நாளை ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்வர்
Reviewed by Admin
on
May 23, 2012
Rating:

No comments:
Post a Comment