அண்மைய செய்திகள்

recent
-

எப்போது வருவார் அப்பா?; வவுனியா சத்தியாக்கிரகத்தில் கண்ணீர் வடித்த தாயிடம் ஏக்கத்துடன் கேட்டான் மகன்-படங்கள் இணைப்பு

அப்பா எப்போது வருவார்? நான் அப்பாவை பார்க்கமுடியாதா?'' என கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்த தாயிடம் கவலையுடன் கேட்டான் நான்கு வயது மகன். இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நேற்று வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இடம்பெற்றது.

இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு இளம் தாய் ஒருவர் தனது நான்கு வயது மகனுடன் வருகை தந்திருந்தார். காணாமற் போன தனது கணவரை விடுவிக்குமாறு அந்தத் தாய் கண்ணீர் மல்கியவாறு கோரிக்கை விடுத்தார். கணவரின் படத்தையும் அவர் கையில் தாங்கியிருந்தார்.
இலங்கையின் அனைத்துச் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரியும், காணாமல் போனோர் தொடர்பில் அரசு விரைவில் உரிய பதிலளிக்கக் கோரியும் நேற்று வவுனியாவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்தனர். 
"எமது பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள்?, பல வருடங்களாக சிறையில் இருக்கும் அவர்களை மனமிரங்கி விடுவியுங்கள்." என்று சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட பெற்றோர்கள், இளந்தாய்மார்கள் அனைவரும் உருக்கத்துடன் கோரிக்கை விடுத்தனர். காணாமல் போன உறவுகளின் புகைப்படங்களையும், சுலோகங்களையும் இவர்கள் தாங்கிநின்றனர். இந்தப் போராட்டத்திலாவது தமக்கு ஒரு உறுதியான முடிவு கிடைக்க வேண்டும் என அவர்கள் அங்கு வலியுறுத்திக் கோரினார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஆரம்பமான போராட்டம் மாலை 4 மணிவரை நீடித்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ்.க.பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், ஈ.சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சிறிரங்கா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரும் வடக்கு  கிழக்கைச் சேர்ந்த அனைத்து உள்ளுராட்சி அமைப்புக்களின் தலைவர்கள், உபதலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரும்  கலந்து கொண்டனர்.
சத்தியாக்கிரகத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆயிரக் கணக்கான மக்கள் பங்குபற்றினார்கள். இவர்களில் பெரும்பாலானோர் காணாமற்போன மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள உறவுகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆவர். இவர்களில் காணாமற்போனோரின் பெற்றோர் தமது பிள்ளைகளின் புகைப்படங்களை தாங்கியிருந்தனர். அத்துடன் தமது பிள்ளைகளின் விடுதலையை விரைவு படுத்துமாறு கோரும் சுலோகங்களையும் வைத்திருந்தனர். 
இந்த சத்தியாக்கிரகத்தின் இறுதியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அரசு தமிழர்களை போராட்டம் நடத்த வேண்டும் என்று ஊக்குவிக்கிறது. அது தான் அவர்களின் விரும்பம் என்றால் போராடுவதற்கும் நாம் தயார். சிறைகளில் உள்ள உறவுகளை விடுவிக்க அரசுக்கு விரும்பம் இல்லை. இதனை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்றார்.
இதில் உரையாற்றிய மனோ கணேசன், சிறையில் வாடும் உறவுகளை ஜூன் 24ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நாம் நாடுதழுவிய ரீதியில் போராட்டங்களை மேற்கொள்வோம் என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோரும் உரையாற்றினர். மாலை 4 மணிக்கு சத்தியாக்கிரகப் போராட்டம் முடிவடைந்தது.
சத்தியாக்கிரகத்தை ஒட்டி வவுனியா நகரப் பகுதி எங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பெரும் எண்ணிக்கையான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். 











எப்போது வருவார் அப்பா?; வவுனியா சத்தியாக்கிரகத்தில் கண்ணீர் வடித்த தாயிடம் ஏக்கத்துடன் கேட்டான் மகன்-படங்கள் இணைப்பு Reviewed by Admin on May 25, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.