அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச மது ஒழிப்பு தினத்தையொட்டி மன்னாரில் குறுந்திரைப்பட வெளியீட்டு விழா-படங்கள் இணைப்பு,

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுபோதைக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வளிக்கும் 'திருப்புமுனை புதுவாழ்வகம்' என்ற அமைப்பினால் இன்று (26.06.2012) செவ்வாய் கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலய மண்டபத்தில் குறுந்திரைப்பட விழாவும், கண்காட்சியும் இடம்பெற்றது.
மன்னார் தோட்டவெளியில் இயங்கும் திருப்புமுனை புதுவாழ்வகத்தின் இயக்குனர் அருட்திரு. வின்சன்ற் பற்றிக் (அமதி) அடிகளார் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம். எம். சியாம், மன்னார் வர்த்தக வங்கி முகாமையாளர் திரு. ஜே. அருள் ஞானசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

  ஏ. நிசாந்தன், ஏ. சசிதரன் ஆகிய சகோதரர்களினால் இயக்கப்பட்ட 'வல்லூறு' என்ற 20 நிமிட குறும்படத்தை மன்னார் ஆயர் அவர்கள் வெளியிட்டு வைத்தார். இக்குறும்படத்திற்கான விமர்சன உரையினை மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் வழங்கினார். மதுபோதைக்கு அடிமையானவர்களால் எப்படி சிறுவர் துஷ்பிரயோகம் நடைபெறுகிறது என்பதை இக்குறுந்திரைப்படம் தெளிவாக எடுத்துரைக்கின்றது என தமிழ் நேசன் அடிகளார் தனது உரையில் குறிப்பிட்டார். குறும்படத்திற்குரிய பல யுக்திகளை சிறப்பாகக் கையாண்டு தான் சொல்லவரும் செய்தியினை இயக்குனர் அழுத்தம் திருத்தமாக, வெளிக்கொண்டுவருகின்றார். குடிபோதைக்கு அடிமையான தகப்பன் பக்கத்து வீட்டு சிறுமியை வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி கொலை செய்கின்றான். இக்கொடிய தந்தையை உருவகப்படுத்தும் வகையில் இக்குறும்படத்திற்கு 'வல்லூறு' எனப் பெயரிட்டது பொருத்தமாகவும், சிறப்பாகவும் உள்ளது என தமிழ் நேசன் அடிகளார் மேலும் தெரிவித்தார்.



நிகழ்வில் பங்குகொண்ட தமிழ் நேசன் அடிகளார், மன்னார் பங்குத்தந்தை யேசுராஜா அடிகளார், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. எம். எம். சியாம் ஆகியோர் நிற்கின்றனர். 

அருட்தந்தை வின்சன்ற் பற்றிக்

எழுத்தாளர் மன்னார் அமுதன்



குறும்படத்தின் முதல் பிரதியை இயக்குனர் திரு. நிஷாந்தன் அவர்களிடமிருந்து மன்னார் ஆயர் பெற்றுக்கொள்கின்றார்.


அருந்தலாகத் தோன்றுகின்ற படைப்பூக்க எண்ணங்களின்
அற்புதமான வெளிப்பாடே குறும்படங்கள்
- தமிழ் நேசன் அடிகளார்


  குறும்படம் எடுப்பது மிகவும் இலகுவான ஒரு விசயம் என்ற எண்ணம் இன்று அனேகமானவர்களிடத்தில் காணப்படுகின்றது.  ஒரு வீடியோ கமராவும், நடிப்பதற்கு சில நபர்களும் கிடைத்துவிட்டால் குறும்படம் எடுத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் பெரும்பாலான இளைஞர்கள் இன்று குறும்படத் துறையில் குதிக்கின்றார்கள். ஒரு படைப்பாளியிடத்தே அருந்தலாகத் தோன்றுகின்ற படைப்பூக்க எண்ணங்களின் அற்புதமான வெளிப்பாடாக குறும்படங்கள் விளங்குகின்றன. உண்மையில் முழு நீளத்திரைப்படம் ஒன்றைவிட படைப்பாளியின் எல்லாத் திறன்களையும் அதிகமாகக் கோரிநிற்கும் வடிவம் குறும்படம்தான் என அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
  சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுபோதைக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வளிக்கும் 'திருப்புமுனை புதுவாழ்வகம்' என்ற அமைப்பினால் கடந்த 26.06.2012 செவ்வாய் கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலய மண்டபத்தில் 'வல்லூறு' என்ற குறுந்திரைப்பட வெளியீட்டு விழாவில் திறனாய்வு உரை நிகழ்த்தியபோதே தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
  அவர் தனது திறனாய்வு உரையில் மேலும் தெரிவித்ததாவது, நவீன தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் உள்நுளைவு முன்னைய காலங்களைவிட இன்று வேகமாக அதிகரித்திருருக்கின்றது. இதனால் இணையத்தின் துணையுடன் பல குறும்படங்களை பார்க்கின்;ற வசதி உள்ளது. நாம் எடுக்கின்ற குறும்படங்களை யு ரியூப் போன்ற வீடியோ காட்சிகளுக்கான இணையத்தளங்களில் தொடுப்புக்கொடுப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுக்கொள்ளும் நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பல இளஞர்கள் குறும்படங்களை நோக்கி இழுக்கப்படுகின்றனர்.

  குறும்படங்களுக்கான அடிப்படை அம்சங்கள் எதுவுமே இல்லாமல், வெறும்; ஆர்வக் கோளாறுகளால் காட்சிகளை நிரப்பி, குறும்படம் என்ற லேபிளை ஒட்டி வெளியீடும் செய்துவிடுகின்ற நிலை இன்று பொதுவாக நாம் காண்கின்ற யதார்த்தமாகும். குறும்படத்தின் அடிப்படை என்ன என்பதை அறியாமல், அதன் உயிர்ப்பான தன்மைகள் எவை என்பவற்றை விளங்கிக்கொள்ளாமல் பலர் குறும்படம் எடுக்க கிளம்பிவிடுகின்றனர்.
  ஒரு முழு நீளத் திரைப்படத்தில் 3 மணி நேரத்தில் தான் சொல்ல வந்ததை இயக்குனர் வெளிப்படுத்த அவருக்கு கால அவகாசம் கிடைக்கின்றது. ஆனாhல் குறும்படத்தில் ஆகமிஞ்சிப் போனால் வெறும் 30 நிமிடங்களுக்குள் இயக்குனர் தான் சொல்ல வந்த கருத்தை சுருக்கமாக, இறுக்கமாக, நெஞ்சில் படும்படி சொல்லிவிடவேண்டும்.

  குறும்படம் என்பதற்கு விதிக்கப்பட்ட சில வரையறைகள் எதுவும் இல்லாவிட்டாலும், அது தனக்கென எழுதப்படாத சில அம்சங்களைக்கொண்டிருக்கின்றன. 30 நிமிடத்திற்கு மேலாக குறும்படத்தின் நேரத்தைச் நகர்த்திச்செல்லக்கூடாது. தேவையற்ற விபரிப்புக்களைத் தவிர்க்க வேண்டும். 'விசயம் எவ்வளவு பெரிதாலும், சில நிமிடங்களில் சொல்லிவிடவேண்டும். குறும்படம் என்பது குறள் மாதிரி, இரண்டு வரியில் அருமையா கருத்தை உள்ளடக்கி;ய திருக்குறளைப்போல, நாம் சொல்லவரும் கருத்தை மூன்று நிமிடங்களில் சொல்வதுதான் குறும்படத்தினுடைய சவால்' என விவேக் மோனிஷ் என்னும் இளம் இந்திய குறும்படத் தயாரிப்பாளர் கூறுகின்ற வார்த்தைகளில் இருந்து ஒரு குறும்படம் எப்படி அமைய வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாhம்.

சர்வதேச மது ஒழிப்பு தினத்தையொட்டி மன்னாரில் குறுந்திரைப்பட வெளியீட்டு விழா-படங்கள் இணைப்பு, Reviewed by NEWMANNAR on June 27, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.