மன்னார் நீதிபதிக்கான தொலைபேசி அழைப்புகள் குறித்த ஆதாரங்களை திரட்டுகிறது சி.ஐ.டி
நீதிமன்ற தீர்ப்பொன்றை மாற்றுமாறு மன்னார் நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான அந்தோனிப்பிள்ளை ஜூட்சனுக்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக தொலைபேசி அழைப்பு விபரங்கள் மூலம் 'விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப' ரீதியான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தொலைபேசிச் சுட்டியில் பட்டியலிடப்பட்டுள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ தொலைபேசியிலிருந்து நீதிபதியின் செல்லிட தொலைபேசிக்கு அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸுக்கு அறியக்கிடைத்துள்ளது.
இத்தொலைபேசி உரையாடல்களின் விபரங்கள் செல்லிட தொலைபேசி சேவை வழங்குநரின் மூலம் திரட்டப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.
இதேவேளை, மன்னார் நீதிமன்ற கட்டிடத்தொகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ம்.சோமரட்ண தலைமையில் மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
அமைச்சர் பதியுதீன் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவரிடமிருந்து ஜூலை 17, 8 ஆம் திகதிகளில் தனக்கு அச்சுறுத்தலான இரு தொலைபேசி அழைப்புகள் கிடைத்ததாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிடம் நீதிபதி ஜூட்சன் முறைப்பாடுசெய்துள்ளார்.
மீன்பிடி பிரச்சினை தொடர்பாக வழங்கபப்பட்ட தீர்ப்பை மாற்றாவிட்டால் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அத்தொலைபேசி அழைப்பு விடுத்தவரால் எச்சரிக்கப்பட்டதாகவும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது ஆதரவாளர்கள் சிலர் விடுவிக்கப்படாவிட்டால் மோசமான நிலைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் தான் அச்சுறுத்தப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வமைச்சர் பின்னர் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்னவை சந்தித்து, நீதிபதியை இடம்மாற்றுமாறு கோரியுள்ளார்.
"அமைச்சர் பதியுதீன் என்னைச் சந்தித்து, நீதிபதியை இடம்மாற்றுமாறு கோரினார். நீதிபதிகளின் இடம் மாற்றமானது நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்குரிய விடயம் என்ற அடிப்படையில் அக்கோரிக்கையை நான் நிராகரித்தேன்" என மஞ்சுள திலகரட்ன தெரிவித்தார்.
எனினும், நீதிமன்றம் மீதான தாக்குதலை தான் தூண்டவில்லை எனவும் இந்நீதிபதிக்கு தான் தொலைபேசி அழைப்பு எதையும்விடுக்கவில்லை எனவும் தமிழ் மிரரின் சகோதர ஆங்கில வார இதழான சண்டே டைம்ஸுக்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
"நான் கொழும்பில் இருந்தபோது மன்னார் பிரச்சினை குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நான் அழைப்பு விடுத்து மன்னாருக்கு செல்வதற்காக ஹெலிகொப்டர் ஒன்றை கோரினேன். அங்கு நான் இப்பிரச்சினையை தீர்ப்பது குறித்து அரசாங்க அதிபர் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டேன். நீதிபதிக்கு ஒருபோதும் நான் தொலைபேசி அழைப்பு விடுக்கவில்லை" என அவர் தெரிவித்தார். (சண்டே டைம்ஸ்)
மன்னார் நீதிபதிக்கான தொலைபேசி அழைப்புகள் குறித்த ஆதாரங்களை திரட்டுகிறது சி.ஐ.டி
Reviewed by NEWMANNAR
on
July 23, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment