வடமாகாண சட்டத்தரணிகள் அனைவரும் ஆர்ப்பாட்டம்
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் மற்றும் மன்னார் நீதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் ஆகியவற்றை கண்டித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரியும் இன்று திங்கட்கிழமை காலை வடக்கு மாகாணத்தில் உள்ள சட்டத்தரணிகள் அனைவரும் ஒன்றிணைந்து மன்னார் நீதிமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
மன்னார் சட்டத்தரணிகளுக்கு வலு சேர்க்கும் முகமாகவும் மன்னார் நீதவானுக்கு ஆதரவு திரட்டும் முகமாகவும் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இன்று திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு முன் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் நின்று கோசங்களை எழுப்பினர்.
இதன் போது மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் முக்கிய சூத்திரதாரிகள் கைது செய்யப்பட வேண்டும், மன்னார் நீதவானை மிரட்டிய அமைச்சர் றிசாட் பதியுதீனை உடன் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதே சமயம் அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு எதிராக பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.
'அமைச்சர் றிஸாட் நீதியில் தலையிடாதே, அமைச்சரின் அராஜகம் ஒழிக, அமைச்சரை உடன் கைது செய்' போன்ற பல்வேறு கோசங்கள் எழுப்ப்பட்டன. இதன்போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என தெரிவித்த சட்டத்தரணிகள் உடனடியாக அமைச்சர் றிசாட் பதியுதீன் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அல்லது எமது பணிப்பகிஸ்கரிப்பு தொடரும் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
வடமாகாண சட்டத்தரணிகள் அனைவரும் ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
July 23, 2012
Rating:

No comments:
Post a Comment