யுவதியை கடத்திய இருவர் கைது
மன்னாரில் நேற்று புதன்கிழமை காலை வானொன்றில் வந்த இளைஞர்களினால் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் யுவதியொருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், இவ் யுவதியைக் கடத்தியதாகத் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் விடத்தல்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தெடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மன்னார் மடு கல்விப்பணிமனையில் கடமையாற்றுகின்ற யுவதி ஒருவர் நேற்றுக் காலை தனது வீடு அமைந்துள்ள இத்திக்குளம் ஆண்டாங்குளம் பகுதியில் இருந்து அலுவலகம் நோக்கி மேட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது காலை 9 மணியளவில் டொல்பின் ரக வேன் ஒன்றில் வந்து இடை மறித்த இரண்டு இளைஞர்கள் குறித்த யுவதியைக் கடத்திச் சென்ற நிலையில் நண்பகல் 11 மணியளவில் செட்டிகுளம் ஜயசிங்க புரம் பகுதியில் வைத்து குறித்த யுவதி மீட்கப்பட்டுள்ளதாக விடத்தல் தீவு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளம் ஆண்டாங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி மடு கல்வித்திணைக்களத்தில் கடமைக்காக வழமை போல காலை தனது வீட்டில் இருந்து அலுவலகம் நோக்கி மேட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சிறிது தூரத்தில் வைத்து வேன் ஒன்றில் வந்த இருவர் குறித்த யுவதியை இடை மறித்து கடத்திச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பொலிஸ் அவசர தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்தித் தெரியப்படுத்தினர்.
இந்த நிலையில் சகல இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காலை 11 மணியளவில் செட்டிகுளம் ஜெயசிங்க புரம் பகுதியில் குறித்த வேன் சென்று கொண்டிருந்த போது பொலிஸார் இடைமறித்து சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த யுவதி மீட்கப்பட்டதோடு குறித்த வேனில் இருந்த 23 மற்றும் 28 வயதுடைய இளைஞர்கள் இருவரையும் கைது செய்த நிலையில் அவர்களை விடத்தல் தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
விடத்தல் தீவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த யுவதியைக் காதலிப்பதன் காரணத்தினால் அழைத்துச் செல்வதாக குறித்த 28 வயதுடைய இளைஞர் தெரிவித்த நிலையில் அதனை யுவதி மறுத்துள்ளதோடு தனக்கு வேறு ஓர் இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த யுவதி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் விடத்தல் தீவு பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ___
யுவதியை கடத்திய இருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
July 19, 2012
Rating:

No comments:
Post a Comment