வறுமையின் கீழ் தள்ளப்பட்டுள்ள ஜோசப்வாஸ் நகர் கடற்றொழிலாளர் குடும்பங்கள் _
கடந்த 10 வருடங்களாக மன்னார் கோந்தைப் பிட்டி கடற்கரையூடாக மீன் பிடித் தொழிலுக்காகச் சென்று வந்த ஜோசப்வாஸ் நகரைச் சேர்ந்த 350 மீனவர்கள் கடந்த 26ஆம் திகதியிலிருந்து தொழிலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வார காலமாக குறித்த மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாததன் காரணத்தால் அம் மீனவக் குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கையில்,
2006ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் அனுமதியுடன் கோந்தைப் பிட்டி ஊடாக கடலுக்குச் சென்று தொழிலில் ஈடுபட்டோம். இக் கடற் பிரதேசத்தின் நிலப் பகுதி இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமானது.
இந் நிலையில் கடந்த 26ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு மன்னார் அரச அதிபர் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மேலதிக அரச அதிபர், மன்னார் பிரதேச செயலாளர், மன்னார் உதவி மாவட்ட செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், மன்னார் மாவட்ட உதவி கடற்றொழில் பணிப்பாளர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கான மீன் பிடி தொடர்பான இக்கூட்டத்தில் அன்று பிற்பகல் 3 மணிக்கு முன்பாக குறித்த ஜோசப் வாஸ் நகரைச் சேர்ந்த 350இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 10 வருடங்களாக தொழில் செய்து வந்த கோந்தைப்பிட்டி துறையிலிருந்த படகுகள், வள்ளங்கள், வலைகள், இயந்திரங்கள் மற்றும் கடலுணவு கொள்வனவு நிலையங்கள் அனைத்தையும் அங்கிருந்து அகற்றுவதுடன் அனைத்து மீனவர்களும் வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை முடிவாக வெளியிட்டனர்.
மேலும் மன்னார், தலைமன்னார் பிரதான வீதியின் 2ஆம் கட்டை பிரதேசத்தில் வடக்குப் புறமான கடற்கரைப் பகுதியில் மேற்படி மீனவர்கள் தொழில் செய்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டு அதனை மன்னார் பிரதேச செயலாளர், மன்னார் மாவட்ட உதவி கடற்றொழில் பணிப்பாளர் ஆகியோர் நேரடியாக ஸ்தலத்திற்கு வந்து ஜோசப் வாஸ் நகர் மீனவ அமைப்பு பிரதிநிதிகளுக்கு அடையாளப்படுத்திக் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அம் மீனவர்கள் தாம் தொழில் செய்யும் நோக்குடன் அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை ஆரம்பித்த வேளை தனிநபர் ஒருவர் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினால் இப் பிரதேசத்தில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாத வகையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததுடன் ஜோசப்வாஸ் நகர் கிராமிய மீனவ அமைப்பின் தலைவர், செயலாளர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும் படி அழைப்பானைண விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி தொடக்கம் இன்று வரை இம் மீனவ மக்கள் தமது நாளாந்த ஜீவனோபாயத் தொழிலான மீன்பிடித் தொழிலைச் செய்ய முடியாத நிலையில் முடக்கப்பட்டுள்ளனர்.
இதனால் குறித்த ஜோசப்வாஸ் நகரைச் சேர்ந்த 350இற்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் சுமார் 1750 பேர் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் அவல நிலையில் உள்ளனர்.
இம் மக்களில் பெரும்பாலானோர் நிறுவனங்களிலும் வங்கிகளிலும் கடன் பெற்றே தமது தொழில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந் நிலையில் கடன் வழங்கிய நிறுவனங்களின் தவணைக் கட்டணங்களைச் செலுத்த முடியாத நிலை மற்றும் மன்னார் நகர் பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்கும் மாணவர்கள் பிரயாணம் செய்வதற்குப் பணமில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையை நன்கு அறிந்த அரச அதிகாரிகள், இம் மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்காமை மேலும் தம்மைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக இம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
வறுமையின் கீழ் தள்ளப்பட்டுள்ள ஜோசப்வாஸ் நகர் கடற்றொழிலாளர் குடும்பங்கள் _
Reviewed by Admin
on
July 03, 2012
Rating:

No comments:
Post a Comment