சிறுபான்மை மதங்கள்மீதான மேலாண்மையை ஏற்றுக்கொள்ள முடியாது- தமிழ் நேசன் அடிகளார்
மிகவும் கொடுமையான ஓர் இனப்போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் நாம் நிம்மதிப் பெருமூச்சுவிடுகின்றோம். ஆனால் இனப்போர் முடிந்து மீண்டும் ஒரு மதப்போர் இந்த மண்ணில் உருவாகி விடுமோ என்று அச்சம் கொள்ளும் அளவுக்கு இன்று நிலமைகள் விரைவாக மாறிக்கொண்டிருக்கின்றன.
நாட்டின் யாப்பிலே அரசின் ஆதரவும் பாதுகாப்பும் பெற்றுள்ள பெரும்பான்மை மதம் இந்நாட்டில் உள்ள சிறுபான்மை மதங்கள்மீது மேலாண்மை செலுத்துகின்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல. இந்நிலைமை தொடருமானால் இந்த நாட்டில் மீண்டும் குழப்பமும் பி;ரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
நல்மனம் கொண்ட அனைத்து மக்களும் இது தொடர்பாக ஆழ்ந்த அக்கறை செலுத்த வேண்டும் என தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சர்வமதப் பேரவையினர் வட மாகாணத்திற்கான நல்லெண்ண சுற்றுலாவை மேற்கொண்டு கடந்த 30ஆம் திகதி (30.06.2012) மன்னாருக்கு வந்திருந்தபோது ஞானோதயத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவரும் மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனருமான தமிழ்நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது தமிழ் நேசன் அடிகளார் தொடர்ந்து கூறியதாவது, சமயத் தலைவர்கள் முதலில் தங்களுக்குள் உறவையும், தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மதங்களுக்கிடையில், மதவாதிகளுக்கிடையில் புரிந்துணர்வை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் எவ்வளவோ செய்யவேண்டி உள்ளது. மத நல்லிணக்கம் என்பது நீண்ட பயணம். அதை உடனடியாக நாம் எட்டிவிடமுடியாது. இப்படியான நல்லெண்ண விஜயங்கள், சந்திப்புக்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். இதன்மூலம் படிப்படியாக நாம் மத நல்லிணக்கத்திற்கான அடித்தளத்தைப்போட முடியும்.
மன்னாருக்கு வருகை தந்திருந்த கிழக்கு மாகாணக் குழுவினருக்கு மன்னார் பிரதிநிதிகள் நினைவுச் சின்னங்களை வழங்கினர். மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் குருனாகல் மாவட்டங்களைச் சார்ந்த 35 பேர்கொண்ட சமய மற்றும் சமூகத் தலைவர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
படங்களுக்கான விளக்கம்
தேசிய சமாதானப் பேரவையினரின் ஏற்பாட்டில் வட மாகாணத்திற்கான நல்லெண்ண சுற்றுலாவை மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண சர்வமதப் பேரவையினர் கடந்த 30ஆம் திகதி (30.06.2012) அன்று மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். அன்றைய தினம் மதியம் 2.30 மணிக்கு மன்னார் ஞானோதயத்தில் மன்னார் சர்வமதப் பேரவையினரோடு இக்குழுவினர் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். இச்சந்திப்பின்போது மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் மற்றும் குருநாகல் மாவட்ட சங். தேரர் ஆகியோர் உரையாற்றுவதையும், மன்னாருக்கு வருகை தந்திருந்த கிழக்கு மாகாணக் குழுவினருக்கு மன்னார் பிரதிநிதிகள் நினைவுச் சின்னங்களை வழங்குவதையும் படங்களில் காணலாம். மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் குருனாகல் மாவட்டங்களைச் சார்ந்த 35 பேர்கொண்ட சமய மற்றும் சமூகத் தலைவர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
சிறுபான்மை மதங்கள்மீதான மேலாண்மையை ஏற்றுக்கொள்ள முடியாது- தமிழ் நேசன் அடிகளார்
Reviewed by NEWMANNAR
on
July 02, 2012
Rating:
No comments:
Post a Comment