றிசாத் பதியூதீன் தனது அதிகாரபூர்வ தொலைபேசி மூலமே நீதிவானை அச்சுறுத்தியுள்ளார்: சண்டே ரைம்ஸ்
அமைச்சர் றிசாத் பதியூதீன், மன்னார் நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பான குற்றச்சாட்டையடுத்து, அமைச்சரின் தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சேகரித்து வருகின்றனர்.
அமைச்சர் றிசாத் பதியூதீன், தனது அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கத்தில் இருந்தே மன்னார் நீதிவானின் கைத்தொலைபேசிக்கு அழைத்துள்ளமை அறியப்படுவதாக ‘சண்டே ரைம்ஸ்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், கைத்தொலைபேசி இணைப்பு வழங்குனரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களை தாம் கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
இதேவேளை உதவி கண்காணிப்பாளர் சோமரத்ன தலைமையிலான மூன்று பொலிஸ் குழுக்கள், போராட்டம் தொடர்பாகவும், மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சம்பவ இடத்தில் இருந்த ஊடகவியலாளர்களின் காணொளி ஆதாரங்களை வைத்து இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், மன்னார் நீதிவான் யூட்சன், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில், கடந்த 17 மற்றும் 18ம் திகதி, றிசாத் பதியூதீன் என்று அறிமுகப்படுத்தியவரிடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்ததாக கூறியுள்ளார்.
தனது ஆதரவாளர்களை விடுவிக்காவிட்டால், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தாம் மிரட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ணவைச் சந்தித்து மன்னார் நீதிவானை இடமாற்றம் செய்யும்படியும் றிசாத் பதியுதீன் கோரியுள்ளார்.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள மஞ்சுள திலகரட்ண, “அமைச்சர் பதியூதீன் என்னை சந்தித்து நீதிவானை இடமாற்றம் செய்யுமாறு கோரினார்.
இடமாற்றம் செய்வது நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் வேலை என்று நான் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தான் நீதிமன்றத்தின் மீதான தாக்குதலை நடத்தவோ அல்லது நீதிவானுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கவோ இல்லை என்று றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தினால் அமைச்சர் றிசாத் பதியூதீனுக்கு ஆதரவாகவும் எதிர்ப்புத் தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
றிசாத் பதியூதீன் தனது அதிகாரபூர்வ தொலைபேசி மூலமே நீதிவானை அச்சுறுத்தியுள்ளார்: சண்டே ரைம்ஸ்
Reviewed by Admin
on
July 22, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment