சொந்த மண்ணில் மீளக்குடியமர காட்டினுள் குடியமர்ந்து காத்திருக்கும் முள்ளிக்குள மக்கள். படங்கள் இணைப்பு

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக இடம் பெயர்ந்து சென்றனர்.
போர் ஓய்ந்த பின்னர் இவர்கள் தமது கிராமத்தில் மீள் குடியமரச் சென்ற போது அங்கு நிலை கொண்டிருக்கும் கடற்படையினர் அந்த மக்களை முள்ளிக்குளம் கிராமத்தில் குடியமர அனுமதிக்கவில்லை.
இந்த கிராமத்தை கடற்படையினர் அதியுயர் பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இதனால் தமது சொந்தக்கிராமத்தில் மீள் குடியமரும் எண்ணத்துடன் நீண்ட நாள் போராட்டத்தின் மத்தியில் முள்ளிக்குளத்திங்கு சற்று தொலைவில் உள்ள மலங்காடு எனும் காட்டுப்பிரதேசத்தினுள் அடிப்படை வசதிகள் எவையுமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் 145 குடும்பங்கள் இவ்வாறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கான குடி தண்ணீரை இராணுவத்தினர் வழங்கி வருகின்றனர்.
குளிப்பதற்கும்,ஏனைய தேவைகளுக்கும் அருகில் உள்ள குளத்தை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணத்தினால் குளம் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.
இதனால் இவர்கள் ஏனைய தேவைகளுக்கு தண்ணீரைப்பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.
காட்டு யானைகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனி வரும் காலம் மழைக்காலம் என்பதினால் தற்போது வசிக்கும் குடிசைகள் தாக்குப்பிடிக்குமா? எனவும் இந்த மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே எவ்வளவு கஸ்டங்கள் வந்தாலும் தாம் தமது சொந்தக்கிராமத்தில் மீளக்குடியமர்வதில் எந்த மாற்றமும் இல்லை என அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களுடைய நிலை தொடர்பாக முசலி பிரதேசச் செயலாளர் திரு.கேதீஸ்வரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,,
கடந்த மாதம் 24 ஆம் திகதி இங்கு வருகை தந்த மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் தலைமையில் வருகை தந்த குழுவினர் நிலைமையினை ஆராய்ந்துள்ளனர்.
வன திணைக்களத்தினரும்,இந்த மக்கள் தற்போது வசிக்கும் இடத்தில் தொடர்ந்து வசிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.எனவே இவர்கள் தற்போதுள்ள இடத்தில் இருக்க உடன்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
( மன்னார் நகர நிருபர்)
சொந்த மண்ணில் மீளக்குடியமர காட்டினுள் குடியமர்ந்து காத்திருக்கும் முள்ளிக்குள மக்கள். படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
September 14, 2012
Rating:

No comments:
Post a Comment