அண்மைய செய்திகள்

recent
-

சர்வமதப் பேரவை மற்றும் பிரஜைகள் குழுவின் முயற்சியில் மன்னார் கரிசல் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு-படங்கள் இணைப்பு,


மன்னார் மாவட்டம் கரிசல் பகுதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருந்த இன ரீதியான முறுகல் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. மன்னார் சர்வமதப் பேரவையும், மன்னார் பிரஜைகள் குழுவும் இணைந்து சம்மந்தப்பட்ட இரு தரப்பினரோடும் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொண்டதன் விளைவாக கடந்த சனிக்கிழமை (15.09.2012) மாலை இந்த சுமுகமான சமாதானத் தீர்வு எட்டப்பட்டுள்ளது.


  இது தொடர்பாக மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்ததாவது,
  கரிசல் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மக்கள் பல ஆண்டுகளாக மிகவும் அன்னியோன்னியமாக, சகோதரர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் அண்மை ஆண்டுகளில் இந்த இரண்டு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் இவர்கள் மத்தியில் இருந்துவந்த ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பதாக மாறியது. பெரிய கரிசலில் அமைந்துள்ள புனித கப்பலேந்தி மாதா ஆலய வழிபாடுகளின்போது முஸ்லிம் தரப்பைச் சார்ந்த சில இளைஞர்களால் இடையூறு விளைவிக்கப்படுவதாக கத்தோலிக்க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. சில சந்தர்ப்பங்களில் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெளிவந்த சந்தர்ப்பங்களும் உண்டு. அவ்வேளைகளில் பாதுகாப்புத் தரப்பினர் அங்கு சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த சந்தர்ப்பங்களும் நடைபெற்றுள்ளன.
   தொடர்ந்து பதட்டமும், முறுகல் நிலமையும் நிலவிவந்தாலும் கடந்த செப்ரம்பர் 7ஆம் திகதி குறிப்பிட்ட கத்தோலிக்க ஆலய வழிபாட்டின்போது இடையூறு விளைவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இப்பிரச்சினை எழுந்தது. இந்நிலையில் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு இரண்டு சமூகத்தவர்கள் மத்தியிலும் ஒற்றுமையை, சமாதானத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை மன்னார் சர்வமதப் பேரவையிடமும், மன்னார் பிரஜைகள் குழுவிடமும் முன்வைக்கப்பட்டது.
  இந்த இரண்டு அமைப்புக்களும் கரிசல் பகுதி இஸ்லாமிய தரப்பினரையும், கத்தோலிக்க தரப்பினரையும் தனித்தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கடந்த செப்ரம்பர் 15ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு கரிசல் பாடசாலையில் இந்த இரண்டு தரப்பினரையும் ஒன்றுகூட்டி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொலிஸ் அதிகாரிகளும் உடன் இருக்க இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
  இக்கலந்துரையாடலின்போது கடந்தகாலத் தவறுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றிற்காக வருத்தமும் தெரிவிக்கப்பட்டது. எதிர்காலத்தில் கத்தோலிக்க ஆலய வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை கரிசல் பள்ளி;வாசல் நிர்வாகம் பொறுப்பேற்றுக்கொண்டது. அத்துடன் இனிவரும் காலங்களில் குழப்பத்திற்கு காரணமாக இருக்கக்கூடியவர்களை சட்டத்தின்முன் நிறுத்தும் பொறுப்பையும் பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. இதேவேளை கத்தோலிக்க தரப்பினரும் ஏற்கனவே இப்பிரச்சினையோடு தொடர்புபட்டவர்களுக்கு எதிராக போட்டிருந்த பொலிஸ் முறைப்பாடுகளை வாபஸ் பெற முன்வந்தனர். ஆயினும் அம்முறைப்பாடுகள் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு சென்றுதான்  சமாதானமாக இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரமுடியும் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி நீதிமன்றத்தில் தமது சமாதான முயற்சியைத் தெரிவித்து தொடர்ந்து வழக்கைத் தொடராமல் முடிவுக்குக்கொண்டுவர இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
  அத்துடன் கரிசல் பள்ளிவாசல் நிர்வாகமும், கரிசல் கத்தோலிக்க ஆலய நிர்வகமும் அடிக்கடி சந்தித்து எதிர்காலத்தில் எழக்கூடிய சிறுசிறு பிரச்சினைகளை வளரவிடாமல் உடனுக்குடன் தீர்த்துவைக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
  மன்னார் சர்வதமதப் பேரவையின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இக்கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. சர்வமதப் பேரவையைச் சார்ந்த மௌலபி எஸ். ஏ. அசீம்,  பொறியியலாளர் திரு. எஸ். இராமகிருஸ்ணன், சட்டத்தரணி ஜனாப் எம். எம். சபுறுதீன், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்திரு. இ. செபமாலை, செயலாளர் திரு. சிந்தாத்துரை, உறுப்பினர்கள் வைத்திய அதிகாரி எஸ். செல்வமகேந்திரன்,  திரு. எஸ். புண்ணியலிங்கம் ஆகியோரும் தோட்டவெளிப் பங்குத்தந்தை அருட்திரு. நேரு, முன்னாள் பங்குத்தந்தை அருட்திரு. யூட் குரூஸ் அடிகளாரும் இன்னும் இப்பகுதியைச்சார்ந்த பெரியவர்களும், கரிசல் கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினரும் கரிசல் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் ஊர் மக்களும் இக்கலந்துரையாடல்களில் பங்கேற்றிருந்தனர்.




படங்களுக்கான விளக்கம் :
 மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் மற்றும் மௌலவி எஸ். ஏ. அசீம்,  மன்னார் பிரிஜைகள் குழுவின் செயலாளர் திரு. சிந்தாத்துரை ஆகியோர் உரையாற்றுகின்றனர். கூட்டத்திற்கு வந்திருந்த மக்களில் ஒரு பகுதியனரையும் காணலாம்.

சர்வமதப் பேரவை மற்றும் பிரஜைகள் குழுவின் முயற்சியில் மன்னார் கரிசல் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு-படங்கள் இணைப்பு, Reviewed by NEWMANNAR on September 17, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.