புதுக்குடியிருப்பு பச்சைபுல் மோட்டையில் கண்ணிவெடிக்குப் பலியாகியிருக்கின்ற பத்து வயது சிறுமியின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்- வினோ எம்.பி
புதுக்குடியிருப்பு பச்சைபுல் மோட்டையில் கண்ணிவெடிக்குப் பலியாகியிருக்கின்ற பத்து வயது சிறுமியின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். அதிர்ச்சி தருகின்ற இந்த சம்பவத்தைப் பத்தோடு பதினொன்றாக வெறுமனே புறந்தள்ளிவிட முடியாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
இடம்பெயர்ந்த மக்களையெல்லாம் மீள்குடியேற்றம் செய்தாகிவிட்டது.மீள்குடியேறிய மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள்இ உதவிகளைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள் என்று அரசாங்கம் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில்தான் ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டையில் பத்து வயது பாலகி ஒருவர் கண்ணிவெடிக்கு இலக்காகி உயிரிழந்திருக்கின்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கின்றது.
பூரணமாகக் கண்ணிவெடிகளை அகற்றாமல்,முறையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் மீள்குடியேற்றம் செய்யப்படுள்ள மக்கள் இன்று சொல்லொணாத் துயரங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதன் விளைவாகவே,ஜோசப் நிக்கலஸ் நிஷாந்தினி என்ற பாலகி கண்ணிவெடிக்குப் பலியாகியிருக்கின்றார்.
இந்தச் சம்பவத்தில் அருகில் வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்த அவரது 28 வயதுடைய சகோதரியும படுகாயமடைந்திருக்கின்றார்.
இறுதி நேரத்தில் கடும் சண்டைகள் நடைபெற்ற பகுதிகளில் ஆனந்தபுரம் மிகவும் முக்கியமான இடமாகும்.
பெருமளவிலான கண்ணிவெடிகளும் இனந்தெரியாத வெடிப்பொருட்களும் பரவிக்கிடக்கின்ற முக்கியமான இந்தப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு முன்னர்,அரசாங்கம் சரியான முறையில் கண்ணிவெடிகளை அகற்றவில்லை.
உடையாத அல்லது அரைகுறையாக உடைந்த வீடுகள், கிணற்றடி என்பவற்றைச் சுற்றிலும் மாத்திரம் - சிறிய இடத்தில் கண்ணிவெடிகளை அகற்றிவிட்டு, அங்கு மக்கள் சென்று பாதுகாப்பாக வாழ முடியும் என்று கூறி,அரசாங்கம் இறுதி நேர மீள்குடியேற்றத்தைச் செய்திருக்கின்றது.
இந்த நிலைமையில் தான்,முள்ளிவாய்க்கால் பகுதிகளில் ஷெல்லுக்கு பெற்றோரைப் பறிகொடுத்து விட்டு மூத்த சகோதரனின் பராமரிப்பில் வாழ்ந்தசிறுமி நிஷாந்தினி கண்ணிவெடிக்குப் பலியாகியிருக்கின்றார்.
ஏனோ தானோ என்று உப்புசப்பற்ற காரணங்களைக் காட்டிவிட்டுஇ இவருடைய மரணத்திற்குப் பொறுப்பு கூறுவதிலிருந்து அரசாங்கம் தப்பிவிட முடியாது.
யுத்தத்தில் சிக்கி உறவுகளின் உயிர்களையும்இ உடைமைகளையும் இழந்து வெறுங்கையுடன் வெளியேறி மனிக்பாம் முகாமுக்கு வந்த மக்கள் இன்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தாலும், இழப்புகளின் தாக்கத்தினால் வெந்து நொந்து போயிருக்கின்றார்கள்.
அவர்களிடம் இழப்பதற்கென்று உயிரைத் தவிர வேறு எதுவுமே கிடையாது.
அந்த உயிரையும் பறிக்கத்தக்க வகையில்தான் பூரணமாகக் கண்ணிவெடிகளை அகற்றி, சரியான முறையில் பாதுகாப்பை உறுதி செய்யாத வகையில் மீள்குடியேற்றத்தை அரசாங்கம் செய்திருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் மீள்குடியேற்றத்திற்காக,அரசாங் கம் கண்ணிவெடிகளை அகற்றி ரூடிக்கட்டும் என்று மக்கள் மூன்று வருடங்களாகக் காத்திருந்தார்கள்.
இருந்தும், கண்ணிவெடிகளில் சிக்கி கால்கைகளை இழக்கவும், உயிர்களை இழக்கவும் வேண்டிய அவலமான வாழ்வுக்குள்ளேயே இடம்பெயர்ந்த மக்களை அரசாங்கம் தள்ளிவிட்டிருக்கின்றது.
பொறுப்புள்ள அரசாங்கம் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டிருக்கக் கூடாது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில், நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு செலவினத்திற்கென பெருந்தொகையான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வெறும் கையுடன் மீள்குடியேறியுள்ள மக்களின் உடலுறுப்புக்களையும்,உயிர்களையு ம் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்களில் இருந்து பாதுகாப்பதற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் கணிசமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இன்னும் அகற்றப்படாமல் கோர யுத்தத்தின் எச்சங்களாகவும் சொச்சங்களாகவும்,வன்னிப்பிரதே சத்தில் பரவிக்கிடக்கின்ற கண்ணிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்களினால் மேலும் ஓர் உயிரோ பல உயிர்களோ காவு கொள்ளப்படாமல் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் முன்னெச்சரிக்கையோடு செயற்பட முன்வர வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினேத நோகராதலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
புதுக்குடியிருப்பு பச்சைபுல் மோட்டையில் கண்ணிவெடிக்குப் பலியாகியிருக்கின்ற பத்து வயது சிறுமியின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்- வினோ எம்.பி
Reviewed by NEWMANNAR
on
October 28, 2012
Rating:

No comments:
Post a Comment