அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பனம் பொருள் உற்பத்தி ஓர் விசேட ஆய்வு- என்.சிவரூபன்.


கள்ளு இறக்கும் தொழிலாளி ஒருவர் மாதாந்தம் ரூபா 40,000 - 60,000வரையில் சம்பளம் பெறுகின்றார் (இது இலங்கையில் உள்ள வைத்தியர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம்) எனினும், இந்த குடும்பங்கள் இடையே மிக மோசமான வாழ்கைத் தரம் காணப்படுவதும், இந்த தொழிலில் இளந் தலைகள் ஆர்வம் காட்டாத தன்மையினையும் அவதானிக்க முடிகின்றது. இது ஏன்? மன்னாரில் இருந்து ஓர் விசேட ஆய்வு.


வடமாகணத்தில் அதிகளவு பன வளம் கொண்ட மாவடங்களில் ஒன்றாக மன்னார் திகழ்கின்றது. இறுதியாக கிடைத்த தகவல்களின் படி (பனை அபிவிருத்திச் சபை, மன்னார் - 2010), சுமார் மூன்று மில்லியன் பனை மரங்கள் மன்னாரில் காணப்படுகின்றன. இவற்றில் பெரும் பங்கு (83%)மன்னார் தீவுப் பிரதேச செயலகத்திற்கு (பேசாலை - தலை மன்னார்) உட்பட்ட பகுதிகளிலேயே காணப்படுகின்றன. அத்துடன் மாந்தை மேற்கு (11.66%) மற்றும் நானாட்டான் பிரதேச செயலகங்களிற்கு உட்பட்ட பகுதிகளிலும் குறிப்பிட்டத்தக்க அளவு பனை மரங்கள் காணப்படுகின்றன. 

மன்னாரில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பனை வளத்தினை நம்பி வாழ்கின்றனர். எனினும் கூட இது ஒரு சாதியம் சார்ந்த தொழிலாக நோக்கப்படாத தன்மையினையும் மன்னாரில் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, மீன் பிடிப்பவர்கள் விவசாயம் செய்வதும், விவசாயம் செய்பவர்கள் மீன் பிடிப்பதும், இதே போல, தமக்கு அருகில் பனை வளம் இருந்தால் அதனை பயன்படுத்தி தொழிலாற்றும் பாங்கினை மன்னாரில் அவதானிக்கலாம். 

மன்னார் பனை அபிவிருத்திச் சபை

பனம் பொருள் உற்பத்திகளில் பெரும் பங்கு மன்னார் பனை அபிவிருத்திச் சபையினால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. தவிரவும், பனை தென்னை அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் தனியார் வியாபார அமைப்புக்களினாலும் ஊக்கமடைவதனை அவதானிக்கலாம். விசேடமாக மன்னார் பனை அபிவிருத்திச் சபையினால் பனங்கட்டி, பனங்களி மற்றும் பனந்தும்பு ஆகியன ஏற்றுமதித் தரத்தில் உற்பத்தி செய்யப்படுவதுடன், கடந்த சில ஆண்டுகளாக இவை வெளி நாடுகளிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் உள்ளன.

தவிர, சீவல் ஒடியல், ஒடியல் மா மற்றும் கைவினை அலங்கார பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களை பனை அபிவிருத்திச் சபை வழங்கி வருகின்றது. இதற்கென மன்னாரில் மூன்று பயிற்ச்சி நிலையங்களைக் கொண்டுள்ளதுடன், நாடு பூராகவும் உள்ள தனது (கற்பகம்) விற்பனை வலையமைப்பினையும் பயன்படுத்துகின்றது.  

மன்னார் பனை தென்ணை அபிவிருத்திச் சங்கம்

கள்ளு மற்றும் பதநீர் உற்பத்தியினை ஊக்குவிப்பதில் பனை தென்னை அபிவிருத்திச் சங்கங்கள் மட்டுமே காணப்படுகின்றன.  இங்கு சுமார் ஐந்து பனை தென்னை அபிவிருத்திச் சங்கங்கள் (மன்னார் தீவில் - 3, நானாட்டானில் - 01, மாந்தை மேற்கில் - 1) செயற்படுவதுடன் இவை மன்னாரில் மொத்தமாக பதினைந்து கள்ளுக் கடைகளையும் (தவறணை)கொண்டுள்ளன. இறுதியாக கிடைத்த தரவுகளின் படி (மாட்ட செயலகம் - 2010), சுமார் 864 அங்கத்தவர்கள் மேற்படி அபிவிருத்திச் சங்கங்களில் பதிவு செய்துள்ளனர். இதில் பெரும் பங்கு மன்னார் தீவுப் பகுதியிலும், இரண்டாம் நிலையில் மாந்தை மேற்கிலும் பதிவாகியுள்ளன. 

எவ்வாறாயினும், தற்போது செயற்பாட்டு நிலையில் உள்ள அல்லது தொழில் ஆற்றும் அங்கத்தவர்கள் சரி அரை வாசியிலும் குறைவாகவே காணப்படுகின்றனர். இதற்கு, குறைந்த மட்ட தொழில் ஆர்வம், இடப்பெயர்வு, உடல் நல அக்கறை, மூப்படைதல், கல்வி மற்றும் இதர அபிவிருத்தி என்பவற்றுடன் சில சமூக எதிர் பார்ப்புகளிற்கும் அமைவாக, தற்போது கள்ளு இறக்கும் தொழிலாளர்களின் ஆர்வம் மன்னாரில் குறைந்து வருவதாக அபிவிருத்திச் சங்கங்கள் கூறும் அதேவேளை, வருடாந்த கள்ளு உற்பத்தி அதிகரித்து வருவதனை தரவுகள் காட்டுகின்றன. இது, ஏற்கனவே உள்ள தொழிலாளர்கள், தாம் சீவும் மரங்களின் எண்ணிக்கையினை சிறியளவில் அதிகரிப்பதனால் ஏற்பட்ட உற்பத்தி அதிகரிப்பு என பனை தென்னை அபிவிருத்திச் சங்கங்கள் குறிப்பிடுகின்றன. 

மேலும், பனை தென்னை அபிவிருத்திச் சங்கங்கள் ஒரு போத்தல் கள்ளு 35 ரூபா என்ற விலையில் அங்கத்துவ தொழிலாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்து, ஒரு போத்தல் கள்ளு 50 ரூபா என்ற விலையில் தவறணைகளின் ஊடாக பொது மக்களிற்கு விற்பனை செய்கின்றன. இந்த விலையானது கடந்த பல மாதங்களாக உறுதியாகவே காணப்படுகின்றது.


    இதன் மூலம், கள்ளு இறக்கும் தொழிலாளி ஒருவர் மாதாந்தம் ரூபா 40,000 - 60,000 வரையில் சம்பளம் பெறுவதாக அறிய முடிகின்றது. எனினும்இ இது கள்ளு இறக்கும் தொழிலாளியைப் பொறுத்த வரையில் ஒரு பகுதி நேர (காலை/மாலை) வேலைச் சம்பளமே. மீதமுள்ள நேரங்களில் மீன் பிடித்தல் அல்லது விவசாயம் செய்தல் அல்லது கூலி வேலைக்குச் செல்லுதல் போன்ற முழு நேர வேலைகளிலும் கள்ளு இறக்கும் தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர்.
     
    எது எவ்வாறாயினும், இந்த குடும்பங்கள் இடையே மிக மோசமான வாழ்கைத் தரம் காணப்படுவதும், கள்ளு இறக்கும் தொழிலில் இளந் தலைகள் ஆர்வம் காட்டாத தன்மையினையும் அவதானிக்க முடிகின்றது. இது ஏன்? என்பது மேலதிக ஆய்வுக்குரிய ஓர் விடயமாகும்!

கள்ளு சந்தைப்படுத்தலில் உள்ள பிரச்சினைகள்

ஜனவரி - யூலை மாதம் வரையில் கள்ளு உற்பத்திக்கு ஏற்ற பருவ காலம் காணப்படுவதுடன், ஏனைய காலத்தில் இதற்கு மிகைக் கேள்வியும் நிலவுகின்றது. இந்தக் காலத்தில், மாதம்பை போன்ற பிற மாவட்ட பிரதேசங்களில் இருந்து மன்னாருக்கு கள்ளு இறக்குமதி செய்யப்படுகின்றது. 

மன்னாரில் தனியுரிமை நிலையில் கள்ளு சந்தைப்படுத்தலினை மேற்கொணடு வரும் பனை தென்னை அபிவிருத்திச் சங்கங்கள், சந்தைப்படுத்தலில் பல பிரச்சினைகளையும் எதிர் நோக்குகின்றன. குறிப்பாக, பருவ காலத்தில் மீதமாகும் கள்ளினை போத்தலில் அடைக்க அல்லது ஏனைய பிரதேசங்களிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதி பத்திரம் பெற வேண்டும். எனினும், இது ஒரு பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்திற்கு மட்டுமே மாவட்ட செயலகம் வழங்கியுள்ள நிலையில், ஏனைய நான்கு சங்கங்களும் அனுமதியளிக்கப்பட்ட சங்கத்திற்கே மிகையான கள்ளிளை வழங்க வேண்டும் என மாவட்ட செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனூடாக, சமூக பொருளாதார செயற்திறனை பாதுகாக்க முடியும் என மன்னார் மாவட்ட செயலகம் எதிர் பார்கின்றது. 

எனினும், மிகையான கள்ளினை விற்பனை செய்தல் அல்லது போத்தலில் அடைத்தல் அல்லது பரிமாற்றம் செய்தலில் உள்ள சிக்கல் நிலமைகள் தீர்ந்தபாடில்லை என சங்கங்கள் கவலை தெரிவிக்கின்றன. உதாரணமாக கடந்த ஜனவரியில்,300 போத்தல் கள்ளினை சந்தைப்படுத்த முடியாமல், நிலத்தில் ஊற்றியதாக மாந்தை மேற்கு பனை தென்னை அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஆய்வு,
என்.சிவரூபன்.


மன்னார் பனம் பொருள் உற்பத்தி ஓர் விசேட ஆய்வு- என்.சிவரூபன். Reviewed by NEWMANNAR on November 22, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.