சிறைச்சாலையில் பதற்றம்: 12 பேர் பலி, 35 பேர் காயம், கைதிகள் சிலர் தப்பியோட்டம்
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர மோதலில் 12 பேர் பலியாகியுள்ளதோடு 35 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். மேலும் சிறைச்சாலையின் பின்னாள் உள்ள மதில்களை உடைத்து கைதிகள் சிலர் தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவத்தில் 10 படையினரும், சிறைச்சாலை காவலாளி ஒருவரும் தைதிகள் இருவரும் காயமடைந்துள்ளதோடு, இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பகல் இரண்டு மணியளவில் விசேட அதிரடிப் படையினர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சென்று தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது கோபமுற்ற கைதிகள் குறித்த படையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் முறுகல் நிலை ஏற்பட்டு அது பின்னர் கலவரமாக மாறியுள்ளது.
இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் கைதிகள் சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியசாலையை உடைத்து ஆயுதங்களை எடுத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இப்பகுதியில் தற்போது பெரும் பதற்றம் நிலவிவருவதுடன் பேஸ்லைன் வீதியூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு03
- சிறைச்சாலையின் ஒரு பகுதி கைதிகளின் கட்டுபாட்டுக்குள் இருப்பதாகவும் மேலும் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளதாகவும் படையினரின் கவசவாகனங்கள் சிறைச்சாலையை சுற்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து துப்பாக்கி சூட்டு சத்தங்கள் இடம்பெற்று வருவதாகவும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
- அதிரடிப்படையின் ஆணையாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சி.ரணவனவும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பதற்கு அதிரடிப்படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருதாக எமது செய்தியாளர் தெரிவிப்பதோடு தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
- சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட படை வீரர்கள் வெலிக்கடை சிறைச்சாலை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதோடு கவச வாகனங்கள் பலவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- தப்பிச் செல்ல முற்பட்ட கைதியொருவர் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
- தற்போது இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு சிறைச்சாலைக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு சிறைச்சாலையை சுற்றி கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டுள்ளதுடன் கனரக ஆயுதங்களுடன் இராணுவத்தினர் சிறைச்சாலையின் உள்ளேயும் வெளியேயும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அம்பியூலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் துப்பாக்கி வேட்டுக்கள் இடம்பெறுவதோடு இராணுவத்தினர் சிறைச்சாலையை உடைத்து உள் நுழைவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
- அப்பகுதியில் கடும் மழை பெய்துகொண்டிருப்பதால் சிறைச்சாலையை உடைப்பதற்கான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- தாக்குதலுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள அதிரடிப்படையின் ஆணையாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சி.ரணவனவுக்கு தற்போது சத்திரசிகிச்சை பெற்று வருகின்றது.
நன்றி -வீரகேசரி
சிறைச்சாலையில் பதற்றம்: 12 பேர் பலி, 35 பேர் காயம், கைதிகள் சிலர் தப்பியோட்டம்
Reviewed by NEWMANNAR
on
November 09, 2012
Rating:

No comments:
Post a Comment