தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!, புலம்பெயர் உறவுகள் மற்றும் தொண்டு அமைப்புக்களிடம் அவசர உதவி கோரப்பட்டுள்ளது
நாட்டில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு மீட்புப் பணியில் பொலிஸாரும், முப்படைகளும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வெள்ளம், மற்றும் மண்சரிவு காரணமாக 46 ஆயிரத்து 627 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்தார்.
3430 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 625 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி 63 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம் இவ்வெள்ளம், மண் சரிவு காரணமாக கடந்த மூன்று தினங்களில் 23 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 34 பேர் காயமடைந்துள்ளதாகவும், 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இக்கடும் மழை காரணமாக காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, பொலன்னறுவை, பதுளை, மொனறாகலை, மட்டக்களப்பு, குருநாகல், புத்தளம், கேகாலை ஆகிய மாவட்டங்களியே வெள்ளம், மண்சரிவு நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக 172 வீடுகள் முழுமையாகவும், 676 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்து இருக்கின்றன. இம்மழை வெள்ளத்தினால் குருநாகல், மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, புத்தளம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக பெரும்பாலான பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
தெதுறு ஓயா பெருக்கெடுத்து அருகிலுள்ள குளங்கள் உடைப்பெடுத்ததால் சிலாபம் நகர் வெள்ள நீரில் மூழ்கியது. அதேநேரம் புத்தளம்- கொழும்பு நெடுஞ்சாலையிலுள்ள ஜயபிம, சவராண, மாதம்பை, மகாவெவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் வெள்ள நீர் நெடுஞ்சாலையை ஊடறுத்துப் பாய்ந்தது. இதனால் கொழும்பு - புத்தளம் நெடுஞ்சாலை ஊடான வாகனப் போக்குவரத்து நேற்று துண்டிக்கப்பட்டது.
இவ்வெள்ள நிலைமை காரணமாக புத்தளம், குருநாகல், தம்புள்ள ஆகிய பிரதேசங்கள் ஊடான வட பகுதிக்கான வாகன போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை மலை சார்ந்த பிரதேசங்களிலுள்ள நெடுஞ்சாலைகளின் ஊடாக இந்த நாட்களில் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு பயணத்தை மேற்கொள்ளுமாறு வாகன சாரதிகளிடம் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவென சுமார் ஐயாயிரம் பொலிஸார் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்தார்.
நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் உள்ள பொலிஸார் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பங்கதெனிய பிரதான வீதியில் சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் வண்டி நீரில் அடித்துச் சென்றதை அடுத்து உடனடியாக பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் அதிலிருந்த 50 பயணிகளையும் மீட்டெடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகள், நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் சேதமடைந்த வீடுகளை திருத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக சுமார் 2000 முப்படை வீரர்கள் அவசர சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளப் பாதிப்பு, மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்த பிரதேசங்களில் அவற்றை அகற்றும் பணிகளில் இராணுவத்தின் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
குளங்கள், நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுத்து வெடிப்பு ஏற்பட்டு தரை வழி போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள நிலைமையில் 106 கடற்படை வீரர்களைக் கொண்ட 15 கடற்படையின் விசேட குழுக்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர், கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கல்முனை, வாகரை, சிலாபம், பொலன்னறுவை, மன்னம்பிட்டி, வில்கமுவ, அரலகங்வில, மஹாஓயா, நாஉல, வாரியபொல, பக்கமூன, பத்துஹேன ஆகிய பிரதேசங்களில் கடற்படையினர் படகுகள் மூலம் பாதிக்கப்பட்டோரை மீட்டெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சகல பிரதேசங்களிலும் விமானப் படையின் ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் சிராஸ் ஜல்தீன் தெரிவித்தார்.
மட்டு. அம்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ புலம்பெயர் உறவுகள் மற்றும் தொண்டு அமைப்புக்களிடம் அவசர உதவி கோரப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட மழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களும் வெள்ளத்தால் மூழ்கியதால் 17 இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர் வீடுகளிலுமாக 34753 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 135464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் இறந்துள்ளனர். ஒருவர் காணாமல் போய் உள்ளார். மட்டக்களப்பில் செங்கலடி, கிரான், ஏறாவூர் ஆகிய பிரதேசங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இம்மக்களுக்கு அவசர உதவி வழங்கும் வகையில் மனிதநேயமிக்க புலம்பெயர் உறவுகள் மற்றும் அவர்களது மனிதநேய அமைப்புக்கள், புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள இந்து ஆலயங்கள், எம்நாட்டில் உள்ள மனிநேய அமைப்புக்கள், இந்து ஆலயங்கள், தர்மசிந்தையாளர்கள் போன்றோர் இயன்ற உதவிகளை வழங்க முன்வருமாறு பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உதவி செய்ய விரும்பும் அமைப்பு அல்லது தனி நபர்கள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பேரில் தங்களது ஆதரவை வழங்கலாம் என்பதையும் தெரிவிக்கின்றார்.
வழங்கப்படும் உதவிகளுக்கு பற்றுச்சீட்டு மற்றும் நன்றி நவிலல் கடிதம், உதவி வழங்கப்பட்டமைக்கான ஆவணங்கள் (புகைப்படங்கள்) உட்பட்டவை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதன் தொடர்புகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் கீழ்வரும் தொடர்புகளை பயன்படுத்த முடியும்.
தொலைபேசி இலக்கம் : 0094652228273, 0094652228018, 0094776034559, 0094653656608
தொலைநகல் இலக்கம் : 0094652228273
மின்னஞ்சல் முகவரி : btdymha@gmail.com / yoheswaran.mp@gmail.com
வங்கி சார்பான தகவல் : மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் (Federation of Young Men’s Hindu Association) என்ற பெயரில், மட்டக்களப்பு கொமர்ஷினல் வங்கி (Commercial Bank) கணக்கு இலக்கம் 1105040264. SWIFT CODE : CCEYLKLX, Bank Code : 7056-105 இதில் பணங்களை அனுப்பிவைக்கலாம். அத்தோடு உதவி வழங்குபவர்கள் மின்னஞ்சல் மூலம் தங்கள் விபரங்களை அனுப்பி வைத்தல் அவசியமானதாகும்.
தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!, புலம்பெயர் உறவுகள் மற்றும் தொண்டு அமைப்புக்களிடம் அவசர உதவி கோரப்பட்டுள்ளது
Reviewed by NEWMANNAR
on
December 20, 2012
Rating:

No comments:
Post a Comment