பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு துணை புரியும் பொலிஸார்: சாடுகிறார் குகவரதன்
மன்னாரில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தி சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவமானது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உதவிப் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ். குகவரதன் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மன்னாரில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் ஏனைய மூன்று இளைஞர்களுடன் இணைந்து நேற்றைய தினம் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்திச் சென்ற மாணவியை மடுப்பகுதியில் வைத்து மயக்கமடையச் செய்த பின்னர் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்களும் மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
எனினும் மன்னார் பொலிஸார் குறித்த மாணவியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்காது பொலிஸ் நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தார்.
அதன்பின் குறித்த சம்பவத்தை மறைப்பதற்காக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான சந்தேக நபரிடம் சுமார் 3 இலட்சம் ரூபாய் லஞ்சம் கோரியுள்ளார்.
அத்துடன் குறித்த மாணவியின் பெற்றோர்களும் உறவினர்களும் பொலிஸ் நிலையததில் வைத்து அச்சுறுத்தப்பட்ட பின்னர் இரவு 9.30 மணியளவிலேயே மாணவி மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சமாதான சூழலில் வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் இவ்வாறான சம்பவமானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டிய பொலிஸார் லஞ்சம் கோருவதும், சந்தேக நபர்களை கைது செய்யாது அவர்களை விடுதலை செய்வதும் மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.
இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் இடம்பெறுவதை தடுப்பதற்கு கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் பொலிஸ் மா அதிபர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுதந்திரமாதக நடமாடக் கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனையை வழங்குவது தொடர்பில் நீதியமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என எஸ். குகவரதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு துணை புரியும் பொலிஸார்: சாடுகிறார் குகவரதன்
Reviewed by NEWMANNAR
on
December 02, 2012
Rating:

No comments:
Post a Comment