அண்மைய செய்திகள்

recent
-

சிறு வணிகம் ஒன்றில் பணப் பிரச்சினையா? முகாமை செய்வது எப்படி?

பல பில்லியன்களுடன் புரளும் பில்கேட்ஸ் ஆனால் என்ன?, பக்கத்து தெருவில் வெற்றிலை விக்கும் பாட்டி ஆனால் என்ன? கையில் கிடைக்கும் பணத்தினை சரியாக முகாமை செய்யத் தவறும் போது "நஷ்ரம் - கடன் - அவமானம் - தற்கொலை!" என வணிக வாழ்கை மாறிப் போய்விடுகின்றது. 

பெரும் ஏற்ற - இறக்கங்களை காட்டி வரும் இன்றைய பொருளாதார சூழலில் நிதியினை சரியாக முகாமை செய்யத் தவறும் நிறுவனங்கள் நிலை குலைந்து திசை மறந்து கால வெள்ளத்தில் காணமலே போய் விடுகின்றன. ஒரு ஆய்வின் படி, புதிதாக தொடங்கும் தொழில் முயற்சிகளில் 63 சதவீதமானவை ஆறு வருடங்களிற்கு மேல் நின்று நிலைப்பதில்லை என்பதுடன், பெரும்பாலான சிறு வணிக முயற்சிகள் தொடங்கி ஆறே மாதங்களிற்குள் மூடு விழா கொண்டாடி விடுவதாக தெரிய வந்துள்ளது. இவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக உள்ள ஒரே ஒரு காரணம்........? சரியாக முகாமை செய்யப்படாத காசுக் கொடுக்கல் வாங்கல்களே!

இதனால், சிறு வணிக முயற்சியாளர்களிடம் உள்ள பெரிய கேள்வி...? காசுக் கொடுக்கல் வாங்கல்களை எப்படி முகாமை செய்வது? இதனை பாமரத்தனமான வார்த்தையில் சொன்னால் காசை கையில் பிடிப்பது எப்படி? இதற்கு நாம் பின்வரும் மூன்று விடயங்களில் கண்டிப்பாக கவணம் செலுத்தியாக வேண்டும். 

அ).வாடிக்கையாளர்களிடம் இருந்து விரைவாக கடனை வசூழிப்பது எப்படி?
ஆ).கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகளை எப்போது செலுத்த வேண்டும்?
இ).வங்கி கணக்கை பராமரிப்பது எப்படி?

அ).விரைவாக கடன்களை வசூழித்தல்

கடனுக்கு வியாபாரம் செய்வதாலேயே பல தொழில்கள் மாண்டு போகின்றன! எனினும், கடன் கொடுக்காமல் வியாபாரம் செய்ய முடியுமா? முடியவே முடியாது! ஆகவே என்னதான் செய்யவது? இதற்கு பின்வரும் சில வழிகளை கையாண்டு கடன் ஆபத்துக்களை தவிர்க்கலாம். 

1.கடன் கொடுப்பது சிறிய தொகை ஆயினும் கடனாளியின் பெயர், முகவரி, தொடர்பு இலக்கம் போன்றவற்ரை பிரத்தியேக குறிப்பேடு ஒன்றில் பதிவு செய்து வாராந்தம் நோட்டமிட வேண்டும்.

2.கடன் கொடுக்க முன்னதாக கடனாளியின் நிதி நிலமையை நன்றாக மதிப்பிட வேண்டும்.

3.கடனாளியிடம் இருந்து குறைந்தது மூன்று கடன் உத்தரவாதிகளின் பெயர், விபரங்களை பெற்று அவர்களிற்கும் அறிவிக்க வேண்டும். 

4.கடன் கொடுக்கும் விலைப் பட்டியலில் கடன் மீளளிப்பு செய்ய வேண்டிய காலமும், தவறும் பட்ஷத்தில் விதிக்கப்படும் தண்டப் பணத்தின் அளவினையும் குறிப்பிட வேண்டும். 

5.கடன் மீளளிப்பிற்கான இறுதித் திகதி நெருங்கியுள்ளமையை கடிதம் அல்லது தொலைபேசி அல்லது நேரில் கடனாளிக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். 

6.கடன் விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிகப்படியான விலைக் கழிவுகளை அறிவித்தல் கூடாது. இது, 1 - 2சதவீதத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதே சாலச் சிறந்தது. 

7.மீள முடியாத கடன்கள் தொடர்பில் சட்ட ஆலோசகரின் உதவியை நாடலாம். 

பலர் இவற்றை செய்யாமலேயே தான்பட்ட கடனையும் அடைக்க முடியாது தன்னையும், தன் தொழிலையும் மாய்த்துக் கொள்கின்றனர். 

ஆ).கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்துதல்

மின்சாரம், தொலைபேசி, வாடகை, வட்டி, காப்புறுதி மற்றும் கடன் தவணை போன்ற கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகளை ஆரம்பத்திலேயே தீர்த்து விடுவது நல்லது என சிலர் நினைக்கின்றார்கள். ஆறுதலாக தீர்ப்பதுதான் நல்லது எனப் பலர் கருதுகின்றார்கள். ஆனால் இவை இரண்டுமே பிழையான முகாமைதான்! 

சரியான நிதி முகாமை என்னவெனில், கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகளில் குறிக்கப்பட்டுள்ள சாத்தியமான இறுதித் திகதி என்னவோ அந்த நாளில் தீர்த்துக் கட்டுவதுதான். ஒரு ரூபாயேனும் முந்திக் கட்டுவதால் அதனைக் கொண்டு முதலிட்டு அல்லது வாங்கிய கடனை மீளளித்து பெறக் கூடிய இலாபத்தினை இழக்கின்றோம். அல்லது பிந்திக் கட்டுவதால், குறித்த காலப் பகுதியில் உழைக்கும் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையே சமனிலை காணாது கடன்களிற்காய் அலைகின்றோம் இல்லையா?

இ).வங்கிக் கணக்கை பராமரித்தல்

பலர் பல வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதனை ஒரு கௌரவமாகவே கருதுகின்றனர். போதாக் குறைக்கு வங்கிச் சேவை சந்தைப்படுத்துனர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி அங்கொன்றும் இங்கொன்றுமாக கணக்குகளை ஆரம்பிக்கின்றனர். கடைசியில் கடன் தாருங்கள் என்று போனால் கையை விரித்து விடுவார்கள் வங்கியாளர்கள். காரணம், ஒரு கணக்கில் காசு சுழன்று கொண்டு இருந்தால்தானே நாமும் பணக்காரர் என்பதனை வங்கி அறிய முடியும். அங்கொன்றும் இங்கொன்றுமென சில சில்லறைகள் சுழன்று கொண்டு இருந்தால்... பிச்சைக்காரன் என்றுதான் கருதுவார்கள்!

இதேபோல, பலர் நடைமுறை கணக்கில் தேவைக்கும் அதிகமான ஒரு தொகையினை வங்கிச் சேவைக் கட்டணங்களிற்கென ஒதுக்குகின்றார்கள். இந்த மேலதிக பணத்தினை கொண்டு நாம் பட்ட கடன்களை அடைத்து, வட்டிச் செலவைக் குறைக்கலாம் அல்லது சிறந்த முதலீட்டு திட்டம் ஒன்றில் போட்டு பயனீட்டலாம். இவை எல்லாம் எல்லோருக்கும் தெரிந்திருந்தும் கூட, மேலதிகமாக பணத்தை கணக்கில் போட்டு வைப்பதற்கு காரணம் என்ன? வங்கிச் சேவைக் கட்டணமாக மாதாந்தம் எவ்வளவு செலவாகிறது, நடைமுறை வட்டி வீதங்கள் எப்படி போகின்றன என்பவை பற்றிய ஓர் அறியாமைதான். ஆனால், இவற்றை இலவசமாக அறிவிக்க வங்கிகள் தயாராகவே இருக்கின்றன. ஆனாலும், அவை ஒரு நிபந்தனையும் போடுகின்றன. அது என்ன தெரியுமா? கேளுங்கள் தரப்படும்!, தட்டுங்கள் திறக்கப்படும்!! 

இவை ஒரு புறமிருக்க, வங்கி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வங்கி வைப்பு, மீதிகளை பலர் பரிசோதிப்பதில்லை. காரணம், வங்கிகள் நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஒரு போதும் ஒரு சதம் அளவிலும் கூட பிழை விடுவதில்லை என்பது பலரது மனதிலும் ஆழமாகப் பதிந்துபோய் உள்ளது. ஆனால், யதார்தம் என்ன தெரியுமா?, வங்கிகள் தெரிந்தும், தெரியாமலும்  பல சந்தர்பங்களில் கணக்குப் பிழை விடத்தான் செய்கின்றன. எனவே, மாதாந்தம் ஒரு வங்கி கூற்று அறிக்கை ஒன்றை தரும் படி வங்கிக்கு விண்ணப்பிப்பதுடன், அவற்றை எமது கணக்குப் பதிவுகளுடன் நன்றாகப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக, எந்த சேவைக்காக வங்கி அதிக கட்டணங்களை அறவிடுகிறது என தெரிந்து அவற்றை இயன்றளவு குறைந்த மட்டத்தில் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். 

இவ்வண்ணமும், இவற்றுக்கு மேலாகவும் உங்களின் தனிப்பட்ட அறிவு, ஆற்றல், அனுபவம் என்பவற்றுக்கினங்க கையில் கிடைக்கும் பணத்தினை சரியாக முகாமை செய்து வணிக வாழ்கையிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

என்.சிவரூபன்
சிறு வணிகம் ஒன்றில் பணப் பிரச்சினையா? முகாமை செய்வது எப்படி? Reviewed by NEWMANNAR on January 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.