அண்மைய செய்திகள்

recent
-

குஞ்சுக்குளம் மக்களால் மன்னார் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு


மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும்  வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட உலர் உணவு பொருட்களில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி மன்னார் மாவட்டச் செயலகத்தினால் வழங்கப்பட்ட ஒரு தொகை உலர் உணவுப்பொருட்களை குஞ்சுக்குளம்,
மாதாகிராமம் மற்றும் பெரிய முறிப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த  மாதர்,கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதி நிதிகள் இணைந்து நேற்று  வியாழக்கிழமை(3-1-2013) மதியம் குறித்த பொருட்களை மன்னார் மாவட்டச் செயலகத்தில் திருப்பி ஒப்படைத்ததோடு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர அவர்களிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்..

மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட  குஞ்சுக்குளம், மாதாகிராமம், பெரியமுறிப்பு , கிராமங்களானது  மன்னார் வவுனியா பிரதான பாதையில் இருந்து 12 கி.மீ தூரத்தில் தனிமைப்படுத்தப் பட்டு இருக்கும் ஒரு கிராமமாகும்.

 குஞ்சுக்குளம் பாலமானது இக்கிராமத்திற்கான பிரதான நுளைவாயிலாக இருப்பதுடன் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் இருக்கின்றது. 

அருவி ஆறானது பெருக்கெடுத்து ஓடும் போது இப்பாதை முற்றாக துண்டிக்கப்பட்டு விடுகின்றது.
 இவ் வேளைகளில் நாம் வேப்பங்குள பாதையை பயன்படுத்துகின்றோம் .

ஆயினும் 26 கி. மீ தூரம் கொண்ட இப்பாதையானது பாது காப்பற்ற காட்டு வழி பாதையாகும்.
 இருப்பினும் வெள்ளத்தின் நீர் மட்டம் அதிகமாகும் போது இப்பாதையும் துண்டிக்கப்பட்டு விடுகின்றது.

 இதனால் இக்கிராமத்திற்கான அனைத்து பாதைகளும் துண்டிக்கப்பட்டு கிட்டத் தட்ட 250 குடும்பங்கள் நிர்க்கதியாகி நிற்க நேரிடுகின்றது. 
இது இவ்வாறு இருக்க கடந்த மாதம் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கின் போது எமது கிராமம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது.

 இதனால் கடந்த  23ம் திகதி முதல் தை மாதம் முதலாம் திகதி வரை எமது கிராமம்  வெளி தொடர்புகள் அனைத்தும்  முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தது. 
250 குடும்பங்கள் நிற்கதியாகி நின்ற அதே வேளை மருத்துவ வசதிகள் தொடர்பாடல் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை இழந்து நின்றதோடு  ஒரு நேர உணவு கூட இன்றி பட்டினி சாவை எதிர் நோக்கி இருந்தோம். 

ஆயினும் எமக்கு எந்த வகையான உதவிகளும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்திடம் இருந்தோ அல்லது வேறு நிறுவனங்களிடம் இருந்தோ கிடைக்கப் பெறவில்லை.

 இதற்கான காரணமும் என்ன என்று எமக்கு தெரியவில்லை. 

இது இவ்வாறு இருக்க பாதிக்கப் பட்ட எமது மக்களுக்கு பல படகுகள் மூலம் பொருட்கள் வழங்கப் பட்டதாக பல பத்திரிகைகள் உண்மைக்கு முரணான செய்திகளை வெளியிட்டிருந்தது எமக்கு இன்னும் ஏமாற்றத்தை அளிக்கின்றது.

 மன்னார் மாவட்டத்தை பார்வையிட வந்த  அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கூட குஞ்சுக்குள பிரதான பாலத்தை மட்டும் பார்வையிட்டு சென்றிருக்கின்றார்.

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வை இடவேண்டியவர் ஏன் பாலத்தை மட்டும் பார்வை இட்டார் என்பதும் ஓர் ஆச்சரியமாகவே இருக்கின்றது. 

மன்னார் மாவட்டத்தை பொறுத்த வரையில் வெள்ள அனர்தம் என்பது புதிதல்ல ஒவ்வொரு வரிடமும் ஏற்படும் வெள்ளத்தால் அதிக அளவாக பாதிக்கப்படுவது எமது கிராமமாகும். 
இதற்கு கடந்த கால வரலாற்று பதிவுகள் சான்றாகும். 

ஆயினும் இதுவரை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் எமது கிராமத்திற்கு வராததன் பின்னணி என்ன? 
இதில் ஏதும் பிரிவினை வாத செயற்பாடுகள் நடைபெறுகின்றதா என்று சிந்திக்க வைக்கின்றது.

தற்கால நிலமையும் கடந்த கால வரலாறும் இவ்வாறு இருக்க கடந்த மாதமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நாம் எமது பங்குதந்தையின் ஊடாக பலரிடமும் அவசர உதவிகளை செய்யுமாறு தொலைபேசி மூலம் கேட்டிருந்தோம் .

இதன் பலனாக மடு உதவி அரசாங்க அதிபரின் பணிப்பினைக்கு அமைய மன்னார் மேலதிக அரசாங்க அதிபரினால் படகுகளின் மூலம் ஒரு தொகுதி உணவுப் பெருட்கள் அரிப்பு  வரை அனுப்பி வைப்பதாக கூறப்பட்டது. 

நாம் 5 உழவு இயந்திரங்களின் உதவியோடு பலத்த சிரமங்களுக்கு மத்தியில் சிதைவடைந்து கிடந்த காட்டு பாதையை துப்பரவு செய்து கிட்டத்தட்ட 7 மணித்தியால பிரயாணத்தின் பின்னர் அரிப்பிற்கு சென்றோம்.

 ஆயினும் அங்கும் எமக்கு ஏமாற்றமே காத்திருந்தது. 250 குடும்பங்களுக்கும் பகிர்ந்து கொடுக்குமாறு எமக்கு  வழங்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு.
அரிசி 750 கிலோ கிராம்,பருப்பு 25 கிலோ கிராம்,மீன் ரின் 50,நெத்தலி 50 கிலோகிராம்,உருளைக்கிழங்;கு 45 கிலோ கிராம்,வெங்காயம் 30 கிலோ கிராம்,உப்பு 40 பக்கட்,செஞ்சிலுவை சங்க பொதி 30 ( துவாய் பற்பசை சவற்காரம் சம்போ  போன்ற பொருட்கள்)

நாம் எவ்வாறு இவற்றை மக்களுக்கு கொடுப்பது? இவற்றை வாங்கி   தம்பட்டம் காட்டுவதை விட வாங்காமல் இருப்பது மேல் என்பது எமது மக்களின் கருத்து.

இறுதியாக நாம் உரிய அதிகாரிகளிடம் கேட்பது என்னவென்றால் நாமும் இலங்கையின் பிரஜைகளாக இருப்பதால் பாராபட்சமற்ற முறையில் உரிய அதிகாரிகள் நிவாரண பொருட்களை பகிர வேண்டும். 

அனர்த்தம் கூடிய பிரதேசங்களுக்கு முன்உரிமை கொடுக்கப்பட வேண்டும். 

எமக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக எமக்கான போக்குவரத்து பாதைகள் மிக விரைவில் புணரமைக்கப்பட்டு பிரதான பாலத்தையும் கட்ட ஆவனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றோம்.

இதனால் வெறும் பிரச்சாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அதிகாரிகளினால் எமக்கு வழங்கப்பட்ட பற்றாக்குறையான உணவு பொருட்களை நாம் உங்களிடமே கையளிக்கின்றோம். 

இது பாதிக்கப்பட்ட மக்களின் தேவை கருதி எமக்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் அல்ல வெறும் அரசியல் இலாபத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பொய் நாடகமாகும்.

 தயவு செய்து இனி இவ்வாறான கண்துடைப்பு செயற்பாடுகளை நிறுத்தி உரிய அரச அதிகாரிகள் மக்களின் நலன் கருதி தங்கள் அரச கருமங்களை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றோம்.

உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் உரிமை ரீதியாகவும் பாதிக்கப்பட்டு ஏக்கத்தோடு வாழும் எமக்கு விடிவு கிடைக்கும் என நம்புகின்றோம்.என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரதிகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்,மடு உதவி அரசாங்க அதிபர்,மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் அவர்களிடம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவிக்கையில்,,,

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த கிராம மக்களுக்கு பாரிய கஸ்டத்தின் மத்தியில் படகுகள் மூலம் கொண்டு சென்று ஒபபடைத்தோம்.
இதன் போது பிரதேச செயலாளர்கள்,கிராம அலுவர்கள்,உற்பட திணைக்கள அதிகாரிகள் பல்வேறு சிறமங்களுக்கு முகம் கொடுத்தனர்.
குறித்த உலர் உணவுப்பொருட்கள் குறிப்பிட்ட சில தினங்களுக்கே வழங்கப்பட்டது.

இந்த பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டமை எமக்கும் மனிதாவிமான பணியில் ஈடுபடும் சக அதிகாரிகளுக்கு மண வேதணையை ஏற்படுத்தியுள்ளது.குறித்த செயற்பாடுகளின் நிமித்தம் பாதீக்கப்பட்ட அதிகாரிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட நடவடிக்ககைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


(மன்னார் நிருபர்)
குஞ்சுக்குளம் மக்களால் மன்னார் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு Reviewed by NEWMANNAR on January 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.