மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரக்கோறி பிரான்ஸ் நாட்டு உயர்ஸ்தானிகருக்கு கடிதம் அனுப்பி வைப்பு.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,,

மேலும் வன்னிப்போரின்போது வன்னியில் குடியிருந்தவர்களாக அரசு பதிவேடுகளில் காணப்பட்டவர்களின் தொகைக்கும் போரின் பின் முகாம்களில் தடைப்படுத்தி வைக்கப்பட்ட மக்களின் தொகைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசம்; 146,000 பேருக்கும் மேலானதாகும்.
இந்த 146,000 பேரும் காணாமல் போனவர்களில் அடங்குவர். இவர்களுள் எமது மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளும் அடக்கப்பட்டுள்ளனர். இக்கணக்கின்படி மன்னார் மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் 1990 முதல் 2012 வரை காணாமல் ஆக்கப்பட்டோர் 600க்கு மேற்பட்டோர் என கணக்கிடப்பட்டுள்ளது.300 இற்கும் மேட்பட்டோர் கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
சிறைச்சாலையில் 100 இற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.சுமார் 200 இற்கும் மேற்பட்டோர் இன்னமும் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் தடுப்பு முகாம்களில் உள்ளனர்.சுமார் 30 இற்கும் மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிமித்தம் சிறையில் உள்ளனர்.
கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக, இவர்களை மீட்கும் முயற்சியாக நாம் பொலிஸ், படைத்தரப்பு, அரச அதிபர்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை ஆணைக் குழுக்கள், ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், என்பவற்றிற்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளும் அவர்களால் அழைக்கப்பட்டு நாம் பல தடவைகளில் முகம்கொடுத்த விசாரணைகளும் இதுவரை எவ்வித பயனையும் தராமையால் மனைவிகள் கணவர்களை இழந்தும், பெற்றோர், பிள்ளைகளை இழந்தும், நண்பர்கள் உறவுகளை இழந்தும், இவர்கள் கண்ணீரும் கவலையுமாக வாழ்ந்து வருகின்றார்கள்
இந்த இழப்புகளுக்கு காரணமான யுத்தமும் அதனை முன்னெடுத்த அரசும் அப்பாவி மக்களின் இக்கவலைகளையிட்டு எவ்வித அக்கறையுமில்லாதுள்ளனர். இவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதைக் கூட மூடி மறைத்து மக்களை அங்கலாய்ப்பில் தவிக்க விட்டுள்ளனர். எம்மால் இழக்கப்பட்ட இந்த உறவுகள் பற்றிய எமது கவலையைத் திசைதிருப்பவோ என்னவோ அரசு எம்மீது வேறு பல சுமைகளையும் தொடர்ந்தும் சுமத்தி வருகிறது. இந்த நிலையில் மீளக்குடியமர்ந்தவர்களுக்கு உரிய நிவாரணமோ வேலை வாய்ப்புக்களோ வழங்கப்படவில்லை.
பல நூற்றுக்கணக்கானோருக்கு அவர்களது சொந்த நிலத்தில் மீள்குடியமர அனுமதி வழங்கப்படாது காடுகளிலும் வளமற்ற தரிசு நிலங்களிலும் அந்தரிக்க விடப்பட்டுள்ளனர். காணியுரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதுடன் வளமான நிலங்களும் இராணுவத் தேவைக்கும் தென்பகுதி மக்கள் குடியேற்றத்திற்குமாக கையகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி கரையோரங்களில் படையினரின் உதவியுடன் வேற்றிடத்தவர்கள் குடியமர்த்தப்பட்டு தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்பட்டுள்ளது.
தமிழ்ப்பகுதிகளில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்தை ஏற்படுத்தி மக்களது இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டள்ளது. பொது மக்களின் வீடுகளும் வணக்கஸ்தலங்களும் படைத் தரப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டு யுத்தம் முடிந்த பின்னரும் அகதி வாழ்க்கை வாழும் அவல நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் அன்றாட பொது விடயங்களில் கூட படைத்தரப்பின் தலையீடு இருப்பதால் மக்களின் இயல்;பு நிலை முழுமையாக தடைப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக ஒரு இன அழிப்பு மௌன யுத்தம் படைத்தரப்பு மூலம் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்த நாட்களில் சிறியதொரு நிலப்பரப்புள் முடக்கப்பட்ட மக்கள் கொத்துச் கொத்தாக குடும்பம் குடும்பமாக அழிக்கப்பட்டபோது அடைந்ததைவிட மிக அதிகமான துயரத்தை எமது உறவுகளின் இருப்பையோ, இறப்பையோ அறியாமல் இருப்பதன் மூலம் அனுபவித்து வருகிறோம்.
இந்த துன்பத்தை நீக்க நாட்டின் அதி உயர் அதிகார தலைவராகிய தாங்கள் உண்மை நிலையைத் தெளிவுபடுத்தி எமது அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பணிவுடன் இரந்து வேண்டுகின்றோம். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வினோத்
மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரக்கோறி பிரான்ஸ் நாட்டு உயர்ஸ்தானிகருக்கு கடிதம் அனுப்பி வைப்பு.
Reviewed by NEWMANNAR
on
January 25, 2013
Rating:
No comments:
Post a Comment