றிசாத் பதியுதீனினால் இழைக்கப்படும் கொடுமைகள்- தமிழ் மக்கள் இனியும் பொறுமை காப்பதா-இரா.துரைரத்தினம்
வடக்கு கிழக்கில் போரினால் தமிழர்கள், முஸ்லீம்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டிருந்தாலும் தமிழ் மக்களே பெரும் உயிரழிகளையும் சொத்தழிவுகளையும் சந்தித்தார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. முக்கியமாக இறுதிப்போரில் வன்னி பெருநிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் உயிரழப்புக்களை சந்தித்தது தொடக்கம் வீடு வாசல்கள் அனைத்தையும் இழந்து உடுத்த உடுப்புடனேயே மனிக்பாம் முகாமுக்கு வந்திருந்தனர்.
ஆனால் அவர்கள் மீள்குடியேற்றப்பட்ட போதிலும் வீடமைப்பு திட்டத்திலும், மீள தொழிலை ஆரம்பிப்பதற்கான தொழில் உபகரணங்களை வழங்குவதிலும், அப்பட்டமாக பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதே உண்மையாகும்.
இந்த பாரபட்டமான நடவடிக்கைகள் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையிலான உறவுகளிலும் விரிசல்களையே ஏற்படுத்தி வருகிறது.
ஆளும் கட்சியில் அமைச்சராக இருக்கிறேன் என்ற பலத்தை வைத்துக்கொண்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கொண்டுவரும் அடாவடியான அநீதியான செயல்களை அரசாங்க உயர்மட்டம் தட்டிக்கேட்பதாக தெரியவில்லை. தமிழ் மக்களுக்கு எதிராக றிசாத் பதியுதீன் மேற்கொண்டுவரும் அநீதிகளால் மன்னார் வவுனியா மட்மன்றி வடக்கில் உள்ள அனைத்து பிரதேச தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாகாண ஆளுநர் சந்திரசிறியை தன் கைக்குள் போட்டுக்கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் தமிழ் அரச அதிகாரிகளை பழிவாங்குவது தொடக்கம் இந்திய வீடமைப்பு திட்டத்தில் பாரபட்டம் காட்டுவது வரை தமிழ் மக்களுக்கு எதிரான கொடுமைகளை ஈவிரக்கமின்றி செய்து வருகிறார்.
ஆட்சி அதிகார மமதையில் பாமர தமிழ் மக்களை மட்டுமன்றி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப், மன்னார் மாவட்ட நீதிபதி ஆகியோரை அச்சுறுத்தும் அளவிற்கு கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுள்ளது. மன்னார் பகுதியில் மீள்குடியேறிய தமிழ் மக்கள் மீன்பிடி தொழிலை ஆரம்பித்த போது அவர்கள் அங்கு தொழில் செய்யவிடாது தடுக்கப்பட்டனர் என்பதும் அவர்களின் வாடிகள் தொழில் உபகரணங்கள் எரிக்கப்பட்டது என்பதும் நாம் ஏற்கனவே அறிந்த விடயங்கள் தான். இதன் பின்னணியில் றிசாத் பதியுதீனின் ஆட்களே இருந்தனர்.
இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு உதவிகளில் மட்டுமன்றி இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் வீடமைப்பு உதவி திட்டம் மற்றும் புனர்வாழ்வு மீள்கட்டுமான உதவிகளிலும் றிசாத் பதியுதீன் தலையிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கே வழங்கி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அமைச்சர் என்ற அதிகாரமும் வடமாகாண ஆளுரின் செல்வாக்கும் இருப்பதால் வடக்கில் உள்ள அரச அதிகாரிகள் றிசாத் பதியுதீனின் கட்டளைப்படியே பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். றிசாத் பதியுதீனின் கட்டளையை நடைமுறைப்படுத்த தவறும் அதிகாரிகள் இடமாற்றப்படுவார்கள் அல்லது பதவி இறக்கப்படுவார்கள்.
தான் கூறியபடி தீர்ப்பை மாற்றி அமைக்காததால் நீதிபதியையே மாற்றுமாறு நீதிச்சேவை ஆணையாளரிடமே நேரடியாக கூடிய றிசாத் பதியுதீனுக்கு தன் கட்டளைக்கு பணியாத அரச அதிகாரிகளை இடமாற்றுவது பெரிய வேலை இல்லையே.
இதனால் வவுனியா மன்னார் முல்லைத்தீவு ஆகிய வன்னி மாவட்டங்களில் வீடமைப்பு திட்டங்கள், காணிப்பகிர்வு, தொழில்முயற்சிகளுக்கான உதவிகள், நிவாரணங்கள், தொழில்வாய்ப்புக்கள் அனைத்தும் றிசாத் பதியுதீனின் சிபார்சின் பேரிலேயே வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையியே உள்ளனர்.
இந்தியா வன்னி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு ஒரு தொகுதி படகுகள், இயந்திரங்கள், வலைகளை வழங்கியிருந்தது. இதில் 175படகுகள், அவைகளுக்குரிய 15குதிரை வலுகொண்ட இயந்திரங்கள், வலைகள் ஆகியன அடங்கியிருந்தன. இவை ஒவ்வொன்றும் 6இலட்சம் பெறுமதியானவையாகும்.
ஒருபடகு இயந்திரம் வலை அடங்கிய தொகுதி இரு மீனவர்களுக்கு என்ற அடிப்படையிலேயே வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய தூதரகம் இவற்றை கடற்தொழில் அமைச்சுக்கே வழங்கியுள்ளன. அவர்களே பயனாளிகளை தெரிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
வன்னி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கும் நிலையில் றிசாட் பதியுதீன் தெரிவு செய்த 350 பேருக்கே இது வழங்கப்பட்டிருக்கிறது.
றிசாத் பதியுதீன் தெரிவு செய்த 350 பயனாளிகளில் 326பேர் முஸ்லீம்கள், 34பேர் மட்டும் தமிழர்கள். தெரிவு செய்யப்பட்ட தமிழர்களும் போரினால் பாதிக்கப்பட்டு தமிழ் தொழில் உபகரணங்களை இழந்தவர்கள் என்ற ரீதியில் தெரிவு செய்யப்படவில்லை. முழுக்க முழுக்க அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு பின்னால் திரிபவர்களே இதில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். 175படகுகளில் 17படகுகள் மட்டும் தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது. மிகுதி 158 படகுகள் மற்றும் இயந்திரங்கள் வலைகள் முஸ்லீம்களுக்கே வழங்கப்படுகிறது.
றிசாத் பதியுதீன் தெரிவு செய்தவர்களில் பல முஸ்லீம்கள் மீன்பிடி தொழில் செய்யாதவர்கள் என மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொற்கேணி, அல் ஜசீரா, அகத்திமுறிவு, மன்னார் மாவட்டத்தில் உள்ள மாங்குளம், ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களும் இதில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீன்பிடித்தொழிலே செய்வதில்லை. கடந்த காலங்களில் இவர்களிடம் மீன்பிடி படகுகளோ வலைகளோ இருந்ததில்லை.
கடந்த கால யுத்தத்தால் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் மீனவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். போர் இடம்பெற்ற காலத்தில் தமது படகுகளுடன் வங்காலை, மன்னார் பகுதியை சேர்ந்த தமிழ் மீனவர்கள் தமிழகத்திற்கு சென்றிருந்தனர். இவ்வாறு சென்றவர்களில் சுமார் 300படகுகளை தமிழக கரையோர காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். மீண்டும் அவர்கள் இலங்கைக்கு திரும்பி செல்லும் போது அவற்றை திருப்பி தருவதாக இராமநாதபுரம், மண்டபம் பகுதி ஆட்சியாளர்கள் கடிதங்களையும் வழங்கியிருந்தனர். ஆனால் மன்னார் பகுதி மீனவர்கள் இலங்கைக்கு திரும்பிய போது அவர்களிடம் படகுகள் ஒப்படைக்கப்படவில்லை. அதனை தமிழக மீனவர்களுக்கு வழங்கிவிட்டோம். அதற்கு பதிலாக நஷ்டஈடு தருவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த 300க்கும் மேற்பட்ட மன்னார் தமிழ் மீனவர்கள் தமிழக அரசிடம் தமது படகுகளை இழந்து விட்டு தொழில் செய்ய வழியின்றி தவிக்கும் போது இந்தியா வழங்கிய படகுகள் பாதிக்கப்படாத முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
2006ஆம் ஆண்டு பேசாலையில் கடற்படை மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை நடத்தியதை அடுத்து 100க்கு மேற்பட்ட வாடிகளும் படகுகளும் வலைகளும் கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு கூட இந்தியாவினால் வழங்கப்பட்ட படகுகள் வழங்கப்படவில்லை.
அண்மையில் 10ஆயிரம் சைக்கிள்களை இந்தியா வழங்கியிருந்தது. அதுவும் றிசாத் பதியுதீன், மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் சிபார்சு செய்த சிலருக்கும் வடமாகாண ஆளுநர் சிபார்சு செய்த வெலிஓயா போன்ற இடங்களில் உள்ள சிங்களவர்களுக்குமே வழங்கப்பட்டது.
அது போல முன்றுசக்கர உழவு இயந்திரங்கள் கூட வெலிஓயா மற்றும் வவுனியா தெற்கில் உள்ள சிங்களவர்களுக்கும் இராணுவ தேவைகளுக்குமே வழங்கப்பட்டது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென வெளிநாடுகளும் சிறிலங்கா அரசாங்கமும் வழங்கும் உதவிகள் 90வீதமானவை வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை ஊக்குவிப்பதற்கும் முஸ்லீம்களுக்குமே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகளும் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மட்டுமே கிடைத்து வருகிறது.
இதேபோன்றுதான் இந்திய வீடமைப்பு திட்டத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என செட்டிக்குளம் மீளக்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பு கடந்த புதன்கிழமை வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வவுனியா அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றையும் கையளித்திருக்கிறது.
செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பல கிராமங்களில் யுத்தம் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டவர்கள். முள்ளிவாய்க்கால்வரை சென்று மெனிக்முகாமிலிருந்து மீண்டு வந்தவர்கள். பாரிய துன்பங்களைச் சந்தித்து வீட்டுத் திட்ட உதவி வரும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருபவர்கள். இந்திய அரசின் உதவியுடனான 50 000 வீட்டுத் ;திட்டத்தில் தமக்கும் வீடுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள்.
ஆனால் இந்திய அரசின் உதவியுடனான 1ம் 2ம் கட்டக் கிராம பயனாளிகள் தெரிவில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவு செய்த முஸ்லிம் குடும்பங்கள் பெருமளவு எண்ணிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றும் தாம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் மீள்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
போரினால் பாதிக்கப்படாத குடும்பங்களும், வெளிமாவட்டங்களில் வசித்து வந்த குடும்பங்களும் இதற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். செட்டிகுளம் மற்றும் வவுனியா பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்ட வவுனியா பிரதேசத்தில் 8120 தமிழ்க்குடும்பங்களுக்கும், 1483 முஸ்லிம் குடும்பங்களுக்கும் வீடுகள் தேவையாக இருக்கின்றன. எனினும், இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 1400 வீடுகள் தமிழ்க் குடும்பங்களுக்கும், 1634 வீடுகள் முஸ்லிம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்று மாவட்ட மீள்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பு விபரம் தெரிவித்திருக்கின்றது.
மீள்குடியேற்ற நிவாரணங்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவது போலவே தொழில் வாய்ப்பு வழங்குவதிலும் புறக்கணிக்கப்பட்டு றிசாத் பதியுதீன் சிபார்சு செய்பவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கப்பட்ட பட்டதாரிப் பயிலுநர் நியமனத்தில் றிசாத் பதியுதீனின் தலையீடு இருந்துள்ளது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முல்லைத்தீவு அரச அதிபருக்கு வழங்கிய அழுத்தத்தின் பேரில் 50பேருக்கு அவர் சிபார்சு செய்தவர்களுக்கு தனியாக நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டு நியமனம் வழங்கப்பட்டது. இது போன்று மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் பெயர் பட்டியல் ஒன்றை அனுப்பி அவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரியிருந்தார்.
அண்மையில் மன்னாருக்கு விஜயம் செய்த இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்ரி றொயிஞ்சோம் அவர்களிடம் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அட்டகாசங்கள், மோசடிகள், தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் பற்றி மன்னார் நகரசபை தலைவர் மற்றும் உறுப்பினர்களம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் முறைப்பாடு செய்தனர்.
நீதித்துறையில் தலையிட்டது, தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வருவது, மன்னாருக்கு ஒதுக்கப்படும் நிவாரங்கள் அனைத்தையும் பறித்தெடுத்து தனக்கு வேண்டிய முஸ்லீம்களுக்கு வழங்குவது போன்ற குற்றச்செயல்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஈடுபட்டு வருகிறார் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
மன்னார் நகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டுமன்றி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் டிலானும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் குற்றச்செயல்கள் குறித்து பிரான்ஸ் தூதுவரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
அண்மையில் மன்னார் மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் பாகுபாடும் அரசியல் செல்வாக்கும் காட்டப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
மன்னார் மாவட்டத்திற்கென அனுப்பட்ட பெருந்தொகையான நிவாரணப்பொருட்கள் அமைச்சர் றிசாத் பதியுதீன் சிபார்சு செய்த முஸ்லீம் கிராமங்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் கிராமங்கள் புற்கணிக்கப்பட்டிருந்தது.
முக்கியமாக மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடுமையாக பாதிப்படைந்திருந்தனர்.
எனினும் இக்கிராமத்திற்கு மிகச்சொற்பமான நிவாரணப்பொருட்களே அனுப்பி வைக்கப்பட்டதால் அவற்றை பகிர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதனால் அவற்றை திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகவும் குஞ்சுக்குளம் கத்தோலிக்க தேவாலய பங்குத்தந்தை லக்டன் டி சில்வா தெரிவித்தார்.
ஆனால் பெருந்தொகையான நிவாரணங்கள் முசலி பிரதேசத்திற்கே அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிப்பின் பேரில் வழங்கப்பட்டது. அரச நிர்வாகம், நிவாரண உதவிகள் மீள்குடியேற்றம் என அனைத்து விடயங்களிலும் தலையீடு செய்து இனங்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்தி வரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் நீதிச்சேவையிலும் தன் கைவரிசையை காட்டியிருந்தார். நீதிச்சேவைக்கும் அரச மட்டத்திற்கும் முறுகல் ஏற்படுவதற்கான ஆரம்ப புள்ளியை அமைச்சர் றிசாத் பதியுதீனே இட்டிருந்தார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர் மஞ்சுளா திலகரட்னாவை நேரில் சந்தித்து மன்னார் நீதவானை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர் மஞ்சுளா திலகரத்னா நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது என அவரை தனது அலுவலகத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்.
மன்னார் நீதவானுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்தார் என தொடரப்பட்ட வழக்கில் நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர் மஞ்சுளா திலகரட்னா சமர்ப்பித்திருக்கும் சத்திய கடதாசியும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவானை இடமாற்றுமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் நேரில் வந்து அழுத்தம் கொடுத்தார் என்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு இவர் இடையூறு விளைவித்துள்ளார் என்றும் நீதிமன்றிற்கு சமர்ப்பித்துள்ள சத்தியகடதாசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர் மஞ்சுளா திலகரட்ணாவும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் கண்டன அறிக்கைகளையும் விடுத்திருந்தன. இந்நிலையில் நான்கு பேர் கொண்ட குழு மஞ்சுளா திலகரட்ணா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இத்தாக்குதலின் பின்னணியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இருப்பதாக கூட சட்டத்துறை வட்டாரங்கள் நம்புகின்றன.
இந்த குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் சப்பை கட்டு காரணம் ஒன்றையே கூறிவருகிறார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை தான் மீள்குடியேற்றம் செய்யும் போது தன்மீது குற்றம் சாட்டிவருகிறார் என அவர் கூறிவருகிறார்.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் 1990ஆண்டு ஓக்டோபர் மாதத்தில் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை தமிழர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றபடுவதை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களோ அல்லது அரசியல்வாதிகளோ ஒருபோதும் எதிர்த்ததில்லை.
1996ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய பின்னர் இன்றுவரை ஸ்ரீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. இந்த 17வருடகாலமாக முஸ்லீம்களை மீள்குடியேற்றம் செய்யவில்லை என்றால் அதற்கு புனர்வாழ்வு அமைச்சர்களாக இருந்த முஸ்லீம் அமைச்சர்களும் அரசாங்கமும் தான் பொறுப்பே அன்றி தமிழ் மக்கள் அல்ல.
யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போதிலும் அவர்களின் வீடுகள் வர்த்தக நிலையங்கள் பள்ளிவாசல்கள், பாடசாலைகள் எதனையும் தமிழர்கள் ஆக்கிரமிக்கவில்லை. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் முஸ்லீம் பள்ளிவாசல்களும் பாடசாலைகளும் இயங்கி வருகின்றன. மீள்குடியேறிய மக்கள் தமிழ் மக்களால் எந்த தொந்தரவும் இன்றி வாழ்ந்து வருகின்றனர் என்பதை அனைவரும் அறிவர்.
அப்படி யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறாது இன்னமும் இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் இருப்பார்களானால் அவர்கள் தாம் வேறு தேவைகளுக்கான யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற விருப்பம் அற்றவர்களாகத்தான் இருக்க முடியும்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறுவது போல யாழ். முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்திற்கு யாரும் தடைபோட்டதாக தெரியவில்லை.
அமைச்சர் பதவியும், ஆட்சியாளர்களின் செல்வாக்கும் தமக்கு இருக்கிறது என்பதை வைத்துக் கொண்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் தமிழ் மக்களுக்கு எதிராக செய்து வரும் அநீதிகளை தடுத்து நிறுத்த அரசு முன்வர வேண்டும். இல்லையேல் அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது சுயநலத்திற்காக செய்து வரும் காரியங்கள் தமிழ் முஸ்லீம் இன உறவுக்கு பெரும் கேடாக அமைந்து விடும்.
தமிழ் முஸ்லீம் தரப்புக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீன் விடயத்தில் இனியும் மௌனம் காக்க கூடாது.
கிருமிகளை ஆரம்பத்திலேயே இனங்கண்டு அழித்து விட வேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த இனங்களுக்கும் அது ஆபத்தாக முடிந்து விடும்.
(இரா.துரைரத்தினம்)
றிசாத் பதியுதீனினால் இழைக்கப்படும் கொடுமைகள்- தமிழ் மக்கள் இனியும் பொறுமை காப்பதா-இரா.துரைரத்தினம்
Reviewed by NEWMANNAR
on
February 02, 2013
Rating:

1 comment:
Post a Comment