காணி அதிகாரத்தை கையில் எடுத்து மாகாண அதிகாரத்தை சூறையாட திட்டம்:-தடுத்து நிறுத்துமாறு சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை
வட மாகாணத்தில் காணி வழங்கும் அதிகாரத்தை கையிலெடுத்து மாகாண அதிகாரத்தைச் சூறையாடும் அரசின் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று(7-02-2013) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தற்போது மாகாண அரசின் கீழுள்ள காணி அதிகாரம் மறுக்கப்பட்டு ஆளுநரே நேரடியாக காணி வழங்கும் செயலானது தடுத்து நிறுத்தப்படவேண்டும். ஏற்கனவே, திவிநெகும- வாழ்வின் எழுச்சி - சட்டத்தின் மூலம் அரசானது மாகாணத்தின் கீழ்வரும் 15 அதிகாரங்களை தன்வயப்படுத்தியுள்ளது.
இத்தகைய சம்பவத்தின் சூடுதணியும் முன்னர் அரசானது தற்போது மாகாணத்தின் கீழுள்ள காணி அதிகாரத்தையும் கபளீகரங்கம் செய்துள்ளது. தமிழ் மக்களை நேரடியாக இன ரீதியாகப் பாதிக்கும் இத்தகைய நடவடிக்கை உடன் கைவிடப்பட வேண்டும்.
அத்துடன் மாகாண சபையின் 13வது திருத்தச்சட்டத்தின் செடியூள் 9, றூள் 1, அபென்டிக்ஸ்2 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறான காணி அதிகாரத்தை மைய அரசு தன்வசப்படுத்த முடியாது. அரசியல் யாப்பினை மாற்றமுடியாது. அவ்வாறு காணி அதிகாரம் தொடர்பாக மாற்றம் செய்வதாயின் இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளின் ஒப்புதல் பெறப்படுவதோடு, அதனைப் பாராளுமன்றத்தில் சட்டமாக்கி அந்த சட்ட ஏற்பாட்டை வர்த்தமானியில் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
வடமாகாணத்தை பொறுத்தவரை இங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம் கிடையாது. அரசின் நேரடியான பிரதிநிதியாக ஆளுநரே செயற்படுகின்றார். மாகாண நிர்வாகம் அரச இயந்திரத்தினால் செயல்படுத்தப்படுகின்றது. இவ்வாறிருந்தும் இம் மாகாணத்தின் அனைத்து அதிகாரங்களையும் 13வது திருத்தச்சட்ட மூலத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள. அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களை இல்லாதொழித்து அதனை மையப்படுத்தும் நிகழ்ச்சி நிரலையே தற்போதைய ஆளும் அரசு செயற்படுத்தி வருகின்றது.
இம்மாகாணத்திற்குச் சொந்தமான அரச மற்றும் தனியார் காணிகளை கைப்பற்றுவது, திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்வது மற்றும் இன மோதலைத் தூண்டிவிடுவதன் மூலம் இங்குள்ள இன விகிதாசாரத்தை மாற்றுவதையே தற்போது அரசு அவசர அவசரமாக அரங்கேற்றுகின்றது.
அதிகார பரவலாக்கல் நிர்மூலமாக்கப்படுவதோடு, தமிழ் மக்களின் சுதந்திர அரசியல் இறைமையைக் கூண்டோடு அழித்தொழிக்கும் வேலையையே இதன் மூலம் அரசு திட்டமிட்டு கனகச்சிதமாக மேற்கொள்கின்றது.
இம் மாகாணத்தில் காணி ஆணையாளர் ஊடாக மாகாண காணி ஆணையாளருக்கு பணிக்கப்பட்டு அதன் பின்னர் பிரதேச செயளாலரால் அமுல்படுத்தப்படும் காணி வழங்கலில் பாரிய மோசடிகளும் அரசியல் அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காடழிப்பு, தனியார் காணி அபகரிப்புக்கள் மற்றும் வீட்டுத்திட்ட வழங்கலில் பாதிக்கப்பட்ட மக்களின் தெரிவில் திட்டமிடப்பட்ட புறக்கணிப்பு இவைகள் மூலம் இம்மாகாணத்தில் இனவிகிதாசாரம் மாற்றியமைக்கப்படுகின்றன. அடுத்துவரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டு, சகல குறைந்தபட்ச அதிகாரங்களையும் அழித்தொழித்து ஒன்றுமேயில்லாத தீர்வை முன்வைத்து தமிழ்மக்களை நிரந்தர அடிமைகளாக்கவே அரசின் இத்தகைய சட்டபூர்வமற்ற செயற்பாடுகள் வழிகோலுகின்றன.
எல். டீ. ஓ. ஓர்டினன்ஸ் செக்சன்ஸ் 3, ஸ்ரேட் லான்ட் 91-92 ஓர்டினன்ஸ் புறக்கணிக்கப்படுகின்றன. காணி ஆணையாளருக்கு தற்துணிவு அதரிகாரம் கிடையாது. அவர் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அரச காணிகளை கையாளும் அதிகாரம் ஜனாதிபதி அவர்களுக்கு உண்டு. அதன் அமுல்படுத்தலானது காணி அமைச்சின் ஊடாக காணிஆணையாளர் நாயகத்தின் பின்னர் மாகாணக் காணி ஆணையாளர் ஊடாக பிரதேச செயலாளர் என்ற வரிசையில்தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எமது வட மாகாணத்தில் அத்தகைய சட்ட ரீதியான ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுவதில்லை காணி, குடியேற்றம் முதலானவற்றுக்கு மீள்குடியேற்றம், அபிவிருத்தி பாதுகாப்பிற்கான ஜனாதிபதியின் செயலணியின் அனுமதி, காணி ஆணையாளரின் அனுமதி, வன இலாகா விடுவிப்பு அமைச்சரின் அத்துமீறல்கள் முதலான வகைதொகையில்லாத வழிகளில் எமது பிரதேச காணிகள் அபகரிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன.
13வது அரசியல் திருத்தத்தின்படி காணி அதிகாரம் 100 வீதமும் மாகாணசபை வசமேயுள்ளன. மாகாணத்திற்குட்பட்ட காணி நிர்வாகம் மாகாணத்திற்கே உரியது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்படாமல் இங்குள்ள காணிகளை பறித்தெடுத்து அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்.
அரசியல் தீர்வின் பின்னர் இங்குள்ள மாகாண நிர்வாகத்தின் கீழ் வரும் காணி அதிகாரம் செயல்வடிவம் பெற உண்மையான ஜனநாயக வழிமுறையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
இரவோடிரவாக இம் மாகாண காணிகளை அபகரிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டபூர்வமற்ற வழிமுறைகள் தடுக்கப்படவும் இயற்கை நீதிச்சட்டத்தின் அடிப்படையில் பொது மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படவும் வேண்டும் என சிவசக்தி ஆனந்தன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
(மன்னார் நிருபர் வினோத் )
காணி அதிகாரத்தை கையில் எடுத்து மாகாண அதிகாரத்தை சூறையாட திட்டம்:-தடுத்து நிறுத்துமாறு சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
February 08, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment