அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க தீர்மானம் உப்புச்சப்பற்றது; வடபகுதி சிவில் சமூகம் கருத்து

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிவிடும் செயற்பாடாகவே, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் உள்ளது. நாங்கள் சர்வதேசத்துக்கு எத்தனையோ விடயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லியுள்ளோம்.


ஆனால் அதில் ஒன்றைத்தானும் இதில் உள்ளடக்காமை எங்களுக்கு ஏமாற்றத்தையளிக்கின்றது. இவ்வாறு வடபகுதி சிவில் சமூகத்தினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் இரண்டாவது வருடமாகவும் அமெரிக்காவினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் தொடர்பில் வடக்கிலுள்ள சிவில் சமூகத்தினரிடம் கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இது குறித்து மன்னார் ஆயர் இராசப்பு யோசப் ஆண்டகை தெரிவிக்கையில், கள்ளனிடமே களவு தொடர்பில் விசாரிக்கச் சொன்னால் எப்படியிருக்கும்? நாங்கள் இங்குள்ள நிலைமை தொடர்பாகவும், சர்வதேச தலையீடு ஏன் என்பது தொடர்பிலும் தெளிவாக விளக்கியும் அவர்கள் அதனை தமது வரைபில் உள்ளடக்காதது ஏமாற்றம்தான் என்றார்.

தனது பெயரை வெளியிட விரும்பாத அரச உத்தியோகத்தர் ஒருவர் தெரிவிக்கையில், ஜெனிவா தீர்மானத்தால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அமெரிக்கா, இந்தியாவுக்கு எது தேவையோ அதைக் கொடுத்தால் சரி. எங்களைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.

தமிழக மாணவர்களிடம் இருக்கின்ற உணர்வுகள் எங்கள் இளைஞர்களிடம் இருக்கின்றதா என்பதை நாம் ஒருமுறை பார்க்க வேண்டும். நீங்கள் நடத்துவது ராஜதந்திரம். அமெரிக்கா நினைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அன்றே தடுத்திருக்கலாம் என்றார்.

வலி. வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அருணாச்சலம் குணபாலசிங்கம் தெரிவிக்கையில் :

இலங்கையின் மீள்குடியமர்வு நடவடிக்கைகளை அமெரிக்கத் தீர்மானம் பாராட்டியுள்ளது. இது எங்களுக்கு ஏமாற்றமாக இருக்கின்றது. இலங்கையில் உள்ளக இடப்பெயர்வு என்று சொல்வதைத் தொடக்கிவைத்தவர்கள் எங்கள் மயிலிட்டி, பலாலி மக்கள். முதன்முதலாக இடம்பெயர்ந்த இலங்கை மக்கள் நாங்கள். இன்னமும் சொந்த இடத்துக்குத் திரும்ப முடியாமல் இருக்கின்றோம். 

மீள்குடியமர்வு என்று சொல்லிக் காடுகளுக்குள் இரண்டு தடியும், தகரமும் வழங்கி மீளக்குடியமர்த்தினால் சரியா? எனவே அமெரிக்கத் தீர்மானம் எங்கள் மீள்குடியமர்வு பற்றிச் சொல்லத் தவறிவிட்டது  என்றார்.

காணாமற் போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவிக்கையில், காணாமற் போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெற்றால் மாத்திரமே நீதி நிலைநாட்டப்பட வாய்ப்பு இருக்கின்றது. எனவே இந்த விடயத்தில் ஐ.நாவின் தலையீட்டைக் கோரி நிற்கின்றோம்.

அமெரிக்கத் தீர்மானத்தில் காணாமற் போனோர் தொடர்பில் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்று கூறப்பட்டதை வரவேற்கின்றோம் என்றார். மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்தந்தை ஜெபமாலை தெரிவிக்கையில் :

அமெரிக்கத் தீர்மானம் பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிவிடும் செயற்பாடு போலுள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்கா தான் சமர்ப்பித்த வரைவுத் தீர்மானத்தில் உறுதியாக இருந்திருக்க வேண்டும் என்றார்.

வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவிக்கையில் :
எமக்கு ஏமாற்றமாக இருக்கின்றது. இந்தத் தீர்மானத்தில் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இருப்பினும் எங்களுக்காகக் குரல் கொடுக்கும் தாய்த் தமிழக மாணவர்களுக்காக நாங்கள் தலை வணங்குகின்றோம் என்றார். 

அமெரிக்க தீர்மானம் உப்புச்சப்பற்றது; வடபகுதி சிவில் சமூகம் கருத்து Reviewed by Admin on March 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.