இந்து சமயமும் அன்பு நெறியும் -கு. நர்மிலராஜ்

'அன்பே சிவம்' என்ற தத்துவத்தின் மூலம் இந்துசமயம் அன்பு நெறிக்கு வழங்கியிருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். சமயங்கள் அனைத்திலும் அன்பு நெறி வலியுறுத்தப்படகிறது. எனினும் இந்து சமயத்தில் இறைவனையே அன்பு மயமாக்கிக் கொள்வது தனித்துவமானதே.
இந்து சமயத்தின் ஆதார நூல்களான வேதம், உபநிடதம், பன்னிரு திருமுறை, சைவ சித்தார்ந்தம், புராணம், இதிகாசம் அனைத்திலும் அன்பு நெறிபற்றிப் பல்வேறு கோணங்களில் பேசப்படுகின்றது.
'அன்பு' என்பதன் பொருள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. இறைவன் மக்கள் மேல் சொரியும் அன்பு அப்பழுக்கற்றது. மக்கள் இறைவன் மேல் செலுத்தும் அன்பு பக்தி, காதல், சரனாகதி என்று பல்வேறு அர்த்தங்களைக் கொண்டது. இதனை இந்து சமயத்தின் நாயன்மார் வரலாறுகள் தெளிவாக காட்டுகின்றன.
அவ்வாறே ஸ்ரீ ஆண்டாள், பக்தை மீரா, காரைக்காலம்மையார், துளசிதாசர் முதலியோரது வரலாறுகளும் உண்மை அன்பை எடுத்துக்காட்டுகின்றன.
இறைவன் மேல் மட்டுமல்லாது மக்கள் மேலும் இவ்வகையான அன்பு செலுத்தப்பட வேண்டும். அதுவே வாழ்வியலில் அன்பு நெறியாக அமையும். பகவான் ஸ்ரீராம கிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா, ரமண மகரிஷி முதலியோரது வாழ்வில் இத்தகைய அன்புநெறி பிரதிபலிப்பதை நாம் காணலாம்.
இவ்வகையில் அன்புநெறி என்பது தன்னலம் ஒறுத்தல், பிறர்நலம் பேணுதல், தியாகம், பணிவு, அர்ப்பணிப்பு முதலிய ஆழமான விழுமிய உட்பொருளைக் கொண்டிருப்பதை அறியலாம். ஒரு தாயின் அன்பு இத்தகையதாக அமைகிறது.
பன்னிரு திருமுறை
இந்து மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட சமய இலக்கியம் 'பன்னிரு திருமுறை' ஆகும். இதில் முதல் 7 திருமுறைகள் தேவாரம், 8ம் திருமுறை திருவாசகம், திருக்கோவையார், 9ம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, 10ம் திருமுறை திருமந்திரம், 11ம் திருமுறை பன்னிருவர் அருளிய 40 நூல்கள், 12ம் திருமுறை சேக்கிழாரின் பெரியபுராணம் ஆகும். இவை அனைத்திலும் அன்புநெறி பேசப்படுகிறது.
தேவார திருவாசகத்தில் மட்டும் சுமார் பத்தாயிரம் பாடல்கள் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் அன்பு வழி நின்ற அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நெக்குருகிப் பாடிய பாடல்களாகும்.
தேவாரங்களில் (அ) காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, (ஆ) அன்புறு சிந்தையர் ஆகி அடியவர், (இ) தாயினும் நல்ல தலைவரென்றடியார், முதலிய நூற்றுக்கணக்கான பாடல்கள் இறைவனை அன்புமயமாகக் காட்டுகின்றன. திருவாசகத்தில் - (அ) அம்மையே அப்பா, ஒப்பிலா மணியே (ஆ) அன்பினால் அடியேன் ஆவியோடாக்கை (இ) அரைசனே அன்பர்க்கு அடியனே முதலிய நூற்றுக்கணக்கான பாடலக்கள் அன்புநெறியைக் எடுத்துக் காட்டுகின்றன.
திருவாசகத்தை பு.ரு போப் என்னும் கிறிஸ்தவப் பாதிரியார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதனை டீழசn ஆநடவiபெ ளுழபெ எனக்குறிப்பிட்டது இங்கு நினைவு கூறத்தக்கது.
தேவார, திருவாசகம் முதலியன சாதாரண பாடல்கள் அல்ல. இவை ஒவ்வொன்றும் தெய்வத்தின் குரல் என்பதை நாம் உணர வேண்டும். அனுபூதிமான்களான நாயன்மார்கள் அவற்றை வெளிப்படுத்தும் கருவிகளாக மட்டுமே பயன்பட்டனர்.
தவிரவும் இப்பாசுரங்கள் தெய்வபக்தியை வளர்த்து மனித நேயத்தை புகட்டி தியாக உணர்வூட்டி அன்புநெறியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு தலைமுறை, தலைமுறையாக உதவி வருகின்றன என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டும்.
திருமூலர் திருமந்திரம்.
அன்பே சிவம் என்ற தத்துவத்தை அடி நாதமாகக் கொண்டது திருமூலரின் திருமந்திரமாகும். இது பன்னிரு திருமுறைகளில் 10ம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. திருமூலர் ஒரு சித்தர். எனவே சித்தர் பாணியிலேயே திருமந்திரப் பாடல்கள் அமைந்துள்ளன. (30 அத்தியாயங்களில் 3000 பாடல்களைக் கொண்டது இந்நூல்)
பன்னிரு திருமுறைகளில் உள்ள பாடல்கள். அனைத்துமே திருமந்திரங்கள் தான் எனினும் திருமூலர் திருமந்திரத்தில் உள்ள பாடல்கள் மந்திரங்கள் போன்ற சுலோக வடிவில் அமைந்துள்ளன.
உதாரணம் - 'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே' (270)
இந்நூலில் (அ) அன்புடைமை, (ஆ) அன்பு செய்வாரை அறிவன் சிவன் என அன்பைப் பற்றிய இரு அதிகாரங்கள் இடம் பெறுகின்றன. நூற்பொருளைப் பொறுத்தவரை, திருமந்திரத்திற்கும் திருக்குறளுக்கும் சில ஒற்றுமைகள் உள. அவற்றும் அன்புநெறியும் ஒன்றாகும்.
'மந்திரம் என்பதற்கும் தொல்காப்பியந் தரும் வரைவிலக்கணம் வருமாறு: நிறைமொழிமாந்தர் ஆணையிற்கிளர்ந்த மறைமொழிதானே மந்திரம் என்ப' இச்சூத்திரத்திற்கமைவாகவே திருமந்திரப் பாடல்கள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளன.
திருமூலரின் வாழ்க்கையே அன்புநெறியை அடிப்படையாகக் கொண்டது. இடையன் ஒருவன் திடீரென்று உயிர்துறக்க திக்குத் தெரியாமல் திகைத்து நின்ற மாடுகளை வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக, இறந்து போன இடையன் மூலனின் உடலில் புகுந்து, மாடுகளை வழிநடாத்திச் சென்று, பின்னர் தன்னுடல் இல்லாமற் போகவே, வாழ்வில் மூலனாக வாழ்ந்து பின்னர் திருமூலர் ஆனவர் இவர்.
திருக்குறள்.
உலகப் பொதுமறையான 'திருக்குறள்' ஒரு வாழ்வியல் நூல் என்பதால் இந்து சமய இலக்கியங்களில் அது இடம்பெறவில்லை. ஆனாலும் இந்துக்களின் வாழ்வியலை வெளிப்படுத்துவதில் சமய இலக்கியங்களைவிட அதிகளவில் பங்களிப்புச் செய்வது 'திருக்குறள்' என்றால் மிகையாகாது. திருக்குறள
இந்நூலில் 'அன்புடைமை' ஒரு தனி அத்தியாயமாக இருந்தபோதும், நூல் முழுவதிலும் அன்புநெறி பற்றிப் பேசப்படுகிறது. ஒரு சில வருமாறு.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
என்பு தோல்போர்த்த உடம்பு.
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
இவ்வாறு இந்து சமயத்தில் அன்புநெறி மலர்வதற்கு ஆதார சுருதியாக அமைந்தது திருக்குறள் எனலாம். திருக்குறளில் சொல்லப்படும் தத்துவங்கள், கோட்பாடுகள், கருத்துக்கள் பல திருமூலரின் திருமந்திரத்தில் எதிரொலிப்பதை காணலாம்.
சைவ சித்தாந்த இலக்கியங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் ' திருவருட்பயன்' நூலின் செய்யுட்கள் திருக்குறள் செய்யுட்களின் வடிவில் குறட்பாவாக அமைந்திருப்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
133 அதிகாரங்களில் 1330 குறட்பாக்களைக் கொண்ட இந்நூல் ஆங்கிலம் உட்பட பல பிற மொழிகளில் பெயர்க்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்து சமயத்தில் 'பகவத்கீதை', 'திருக்குறள்' ஆகிய இரண்டும் அன்புநெறியின் பாற்பட்ட இரு முக்கிய நூல்களாகும்.
பகவத்கீதை
மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் இடம்பெறும் கிளைக்கதையான பகவத்கீதை, இந்து சமயத்தின் விஞ்ஞான பூர்வமான தத்துவத்தை உள்ளடக்கியுள்ளது. 18 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் கடவுள், மனிதன், வாழ்க்கை பற்றிய உண்மைகளை விளக்குவதுடன் மனிதன் தர்ம நெறியில்(அன்புநெறியில்) வாழவேண்டிய அவசியத்தையும் தர்க்க ரீதியாக எடுத்துக் கூறுகிறது.
மனிதன் உலக ஆசாபாசங்களினால் அலைக்கழிக்கப்படாது மன உறுதியுடன் தன் கடமைகளைச் செய்யவும் அதில் தன் முனைப்பு (நுபழ) இல்லாமல் செயற்படவும், இறை அர்ப்பணமாக சகல காரியங்களிலும் ஈடுபடவும் இந்நூல் வழிகாட்டுகிறது. இத்தெளிவு மனிதனை அன்புநெறியில் இட்டுச்செல்கிறது. கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் எனும் படிமுறை வளர்ச்சியில் இந்நூல் மக்களை வழிநடத்துகிறது.
கீதையின் சாரம் இப்படி அமைகிறது.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்கஇருக்கின்றதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையது எதை நீ இழந்தாய், எதற்காக அழுகின்றாய்?
எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொருநாள் அதுவே வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாரம்சமாகும்.
(பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்)
இது கீதாசாரம் மட்டுமல்ல, அன்புநெறியின் அடிப்படைத் தத்துவமாகும்.
புராண, இதிகாசங்கள்
திருத்தொண்டர் புராணம், திருவிளையாடற் புராணம், திருவாதவூரடிகள் புராணம், கந்தபுராணம், விநாயகர் புராணம், முதலிய பல புராண நூல்களும், இராமயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாச நூல்களும் இந்துக்களிடம் உள்ளன.
இவற்றில் வரும் பாத்திரங்கள் மனித விழுமியங்களின் உருவங்களாக அமைந்திருப்பது கண்கூடு. இந்துக்கள் மத்தியில் அன்புநெறியை வளர்ப்பதில் இப்புராண இதிகாசங்கள் பெரும் பங்களிப்புச் செய்திருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.
இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களும் வெறுமனே ஒரு கதையை மட்டும் சொல்லவில்லை. கதையினூடே மனித விழுமியங்களைப் பொதிந்து தருகின்றன. இவற்றில் வரும் ஒவ்வொரு பாத்திரமும், ஒவ்வொரு மனித விழுமிய த்தின் உருவகமாகச் செயற்படுகின்றன. சில பாத்திரங்கள் தெய்வ மூர்த்தங்களாக்கப்பட்டுள்ளன. இராமாயணத்தில் வரும் இராமன், அனுமான் முதலியோரும் மகாபாரதத்தில் வரும் ஸ்ரீ கிருஷ்ணர் திரௌபதி ஆகியோரும் தெய்வ மூர்த்தங்களாக்கப்பட்டுள்ளனர்.
இராமாயணத்தில் வரும் இலட்சுமணன், பரதன், ஊர்மிளை, விபீஷணன், குகன் முதலிய பாத்திரங்களும், மகாபாரதத்தில் வரும் தர்மர், கர்ணன், விதுரன் முதலிய பாத்திரங்களும் அன்புநெறியில் நடைபோடுகின்றன.
இப்பாத்திரத்தில் கூத்து, நாடகம் மூலம் இந்துக்களின் வாழ்வோடு இரண்டறக்கலந்து தலைமுறை தலைமுறையாக மக்களை வழிநடாத்துவது வரலாறு. பாமர மக்கள் மத்தியில் சமய இலக்கியங்களைவிட இதிகாச புராணங்களே அன்புநெறியை வளர்த்து வருகின்றன எனலாம்.
ஆன்மீகப் பெருமக்கள்
இறைவன் அன்பு மயமானவன் என்பதை வெளிப்படுத்த நாயன்மார் வாழ்க்கையில் நடந்த பல அற்புதங்களையும் எடுத்துக்கூறலாம். சில உதாரணங்கள்:
(அ) கண்ணப்பநாயனார் சரிதம்.
(ஆ) மார்க்கண்டேயர் சரிதம்.
(இ) அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் சரிதங்கள்.
(ஈ) ஸ்ரீ ராம கிருஷ்ணர், விவேகானந்தர், சாரதாதேவி வாழ்க்கைகள்.
(உ) ஸ்ரீ ரமண மகரிஷி வாழ்க்கை.
ஆன்மீகவாதிகளின் ஆற்றலை அறியாதவர்கள் இவற்றை கட்டுக்கதை என்று கூறுவர். ஆனால் அன்று மட்டுமல்ல இன்றும் கூட ஆத்மஞானிகள் அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றார்கள். அதற்கு உதாரணமாக ஸ்ரீ ராம கிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், சாரதாதேவியார், ஸ்ரீ ரமண மகரிஷி, அரவிந்தர் முதலியோர் நிகழ்த்திய அற்புதங்களைக் கூறலாம். இன்றைய விஞ்ஞான உலகில் ஆன்மீக சக்தியால் எத்தனையோ அற்புதங்கள் நிகழ்கின்றன. இவை அன்பு நெறியில் மக்களை வழிநடத்துகின்றன.
விஞ்ஞானத்தில் ஊறித்திளைத்த மேற்குலக நாடுகளில் சுவாமி விவேகானந்தர் புகுந்து இந்து சமயத்தின் தத்துவங்களை விளக்கி அன்பு நெறியில் மக்களை வழிநடத்துவதற்கு வழிவகுத்தது அவருடைய ஆத்மீக பலம் என்பதை யார்தான் மறுக்கமுடியும்?
இந்து சமயத்தின் அன்பு நெறிக்கு ஆன்மீகமே அடித்தளமாக உள்ளது என்பது வரலாறு. எனவே அன்பு நெறியின் அடுத்த படி ஆன்மீக நெறியாகின்றது. ஆன்மீக நெறியில் நின்று இறைவனுடன் இரண்டறக்கலப்பதை இலக்காக கொண்டதே இந்து சமயம்.
நடைமுறை வாழ்க்கையின் அன்புநெறி
அன்பு நெறிபற்றிச் சமய இலக்கியங்களும் சமூக இலக்கியங்களும் நிறையவே எடுத்துக் கூறுகின்றன. இவற்றைப் பற்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நம்மிடையே ஏராளமான அறிஞர் பெருமக்களும் இருக்கின்றார்கள்.
ஆனால் இந்த அன்பு நெறியை வாழ்க்கையில் கடைப்பிடிப்போர் எத்தனை பேர்? விரல் விட்டு எண்ணிவிடலாம்.
எனவே நமது நடைமுறை வாழ்க்கையில் அன்பு நெறியை எவ்வாறு கடைப்பிடிக்கலாம் என்பதனை அறிதல் அவசியம். வாழு, வாழவிடு என்ற கொள்கையின் அடிப்படையில் அன்பு நெறி என்பது தர்ம நெறியாகும்.
ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, மக்கள், சகோதரர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது இயல்பானது. ஆனால் அயலவர்கள் மீதும் அன்பு செலுத்த நாம் பழகிக்கொள்ள வேண்டும். பாரபட்சம் இல்லாது தர்ம நெறியில் நின்று அனைவரையும் அரவணைத்துச் செல்வது அவசியமாகும்.
தியாக உணர்வு, தர்ம சிந்தை, இறை பக்தி ஆகியவற்றின் மூலமே இது சாத்தியமாகும். நாம் அன்பு நெறியில் நடக்கின்றோமா என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம்? நமது வாழ்க்கையில் நிம்மதியும் மனநிறைவும் ஏற்படுவதைக் கொண்டு அதை அறியலாம்.
உள்ளம் நல்லதானால் மண்ணும் பொண்ணாகும் என்பது பொன்மொழி. விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்வு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் மனநிறைவும் சந்தோஷமும் ஈடு இணையற்றது. வாழ்க்கையில் இவற்றைக் கடைப்பிடிப்பதே அன்பு நெறியின் அடிப்படையாகும்.
'வெள்ளத் தனைய மலர்நீட்டம், மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு'
அன்பு நெறியைக் கடைப்பிடிப்பதன் மூலம் இதன் உண்மையை நமது வாழ்வில் நிதர்சனமாகக் காணலாம்.
நன்றி.
கு. நர்மிலராஜ், B.A , M.A (Jaffna)
நிகழ்சித்திட்ட உதவியாளர்,
கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம், மன்னார்.
இந்து சமயமும் அன்பு நெறியும் -கு. நர்மிலராஜ்
Reviewed by NEWMANNAR
on
March 15, 2013
Rating:

No comments:
Post a Comment