தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்க கடற்படையினர் தடை; நடவடிக்கை எடுக்குமாறு சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை

தலைமன்னார் கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் காலம் காலமாக தொழிலினை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கடற்படையினரின் தடை உத்தரவினால் நூற்றுக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி சுதந்திரமாக தொழிலில் ஈடுபட நடவடிக்கை எடுக்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பரம்பரை பரம்பரையாகத் தலைமன்னார் கடற்பரப்பிலுள்ள இலங்கைக் கடல் எல்லைக்குட்பட்ட தீடைகளில், தலைமன்னார் கிராம கடற்றொழிலாளர்கள் வள்ளங்களில் சென்று வலை வளைத்து மீன்பிடித்தொழிலை மேற்கொண்டு வந்தனர்
எனினும் கடந்த மூன்று தசாப்தகால யுத்த முன்னெடுப்புக்களால் இந்த பிரதேச மீனவர்கள் தமது வள்ளங்கள், என்ஜின்கள்,வலைகள் முதலான தொழில் உபகரணங்களை இழந்தும் வாடிகள் எரியூட்டப்பட்டும் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், வறுமையில் வாழ்ந்துள்ளனர்.
இந்திய தமிழ் நாட்டுக் கரையோரங்களில், தமது வள்ளங்கள் உட்பட தொழில் உபகரணங்களுடன் தஞ்சம் புகுந்தோர் அங்குள்ள தாசில்தார்களிடம் அவற்றினை ஒப்படைத்து அகதி வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
பின்னர் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பியபோது அந்த உபகரணங்கள் தொலைந்துவிட்டதாகவும் இலங்கையில் வைத்து அவற்றிற்கு பதிலீடு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு பல இன்னல்களுடனும் பாரிய பொருள் இழப்புக்களுடனும் சுமார் 500ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் தீடை மீன்பிடியில் ஈடுபட்டு வருமான மீட்டுகின்றனர்.
2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், தற்போது மீன்பிடி அனுமதி அட்டை நடைமுறை நீக்கப்பட்டு: கரையிலுள்ள கடற்படை அதிகாரிகளால் சுமுகமாக மீன்பிடிக்க இவர்கள் அனுமதிக்கப்படுகின்ற போதும் நடுக்கடலில் இந்திய - இலங்கை கடல் எல்லையில் ரோந்திலீடுபடும் இலங்கைக் கடற்படை அதிகாரிகளால் இவர்கள் தடுக்கப்படுகின்றார்கள்.
அத்துடன் தீடையில் மீன்பிடிக்கவும் இவர்களுக்கு தடை விதிக்கப்படுவதுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லுமாறும் பணிக்கின்றனர்.
இந்த புதிய நடைமுறையால் தமது வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தொழிலை தடையில்லாமல் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணிப்பதோடு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்க கடற்படையினர் தடை; நடவடிக்கை எடுக்குமாறு சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை
Reviewed by Admin
on
March 29, 2013
Rating:

No comments:
Post a Comment