அமெரிக்க பிரேரணை நியாயமற்றது: உறுப்புரிமை நாடுகளுக்கு இலங்கைத் தூதுவர்கள் ஜெனீவாவில் விளக்கம்
ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப் போவதாக கூறியிருக்கும் பிரேரணை நியாயமற்றதென அதன் உறுப்புரிமை நாடுகளுக்கு அங்கிருக்கும் இலங்கைத் தூதுவர்கள் விளக்கமளித்து வருவதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைகான நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஜெனீவா உயர்மட்ட அமர்வின் போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரை தொடர்பிலான மேலதிக விளக்கத்தை அளித்து வருவதாகவும் தெரிய வருகிறது.
மேலும் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் கொன்சுயுலர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தலைமையில் அண்மையில் நாட்டின் ஆரசியல் நிலவரம், அபிவிருத்தி, நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இந்த சந்திப்புக்களின் போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படும் விதம் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கம் அளித்திருந்தார்.
அதேவேளை, ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
மோதல் தவிர்ப்பு வலய காணொளி தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு உண்மை விளக்கம் - இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு
ஜெனீவாவின் மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு வலயம் காணொளி தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கவிருப்பதாக இலங்கையின் வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது ஜெனீவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரிய சிங்க இந்த பணிகளை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்
இந்த காணொளியில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் மற்றும் கூறப்பட்ட விடயங்கள் என்பன போலியானவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் அதன் உண்மைத் தன்மை தொடர்பில் வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரேரணை நியாயமற்றது: உறுப்புரிமை நாடுகளுக்கு இலங்கைத் தூதுவர்கள் ஜெனீவாவில் விளக்கம்
Reviewed by Admin
on
March 05, 2013
Rating:
No comments:
Post a Comment