முன்னெப்போதும் இருந்திராத வகையான அரசியல் வெளி ஒன்றில் தமிழ் தேசிய இனம் தற்போது நின்றுகொண்டிருக்கின்றது - அடைக்கலநாதன்
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் 8 ஆவது தேசிய மகாநாடு கடந்த 06 ஆம் திகதி 07 ஆகிய இரு தினங்களும் வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது. இதன் போது தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் தலைவராக மீண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டார்.
ஆதன் போது அவர் ஆற்றிய உரை.....
தமிழீழ விடுதலை இயக்கம்
06-07, ஏப்ரல் 2013
எமது அன்புக்குரிய தோழர்களே, தமிழீழ விடுதலை இயக்கத்தின், எட்டாவதாக நடைபெறும் ஆண்டு மாநாட்டில் நாம் கூடியிருக்கின்றோம்.
ஓர் ஆயுதப் போராட்ட இயக்கமாகத் தோற்றம் பெற்ற எமது இயக்கம், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலான வளர்ச்சியில், கால மாற்றங்களுக்கு ஏற்பத் தனது நிலைப்பாடு களிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முதன்மையான அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இப்போது பரிணமித்து நிற்கின்றது.
முன்னெப்போதும் இருந்திராத வகையான அரசியல் வெளி ஒன்றில் தமிழ் தேசிய இனம் தற்போது நின்றுகொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இருந்து எமது இனம் அடுத்து நகர்ந்து செல்ல வேண்டிய சரியான திசையையும், அந்தப் பணயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நுட்பங்களையும் தெளிவாகக் கண்டறிந்து தீர்மானிக்க வேண்டிய முக்கிய பணியில், ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து எமது கட்சியும் ஈடுபட்டிருக்கின்றது.
2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததன் பின்பு, இனங்களுக்கு இடையில் நல்லுறவை வலுப்படுத்தும் செயற்பாடுகளை இந்த நாட்டின் அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை எல்லாத் தரப்பினரிடமும் இருந்தது.
ஆனால், இலங்கை வாழ் மக்கள், புலம்பெயர்ந்;த தமிழ் சமூகம், அனைத்துலக சமூகம் என அனைவரிடமும் இருந்த அந்த நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் வகையிலான செயற்திட்டங்களை சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
தற்போதைய சூழல்
ஆண்டு தோறும் யுத்த வெற்றி விழாக்களைச் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டாடுவதில் மட்டுமே அரசாங்கம் ஆர்வம் காட்டுகின்றதே அல்லாமல், தமிழ் மக்களின் மனங்களில் இருக்கும் ஆதங்கங்களைப் பூர்த்தி செய்வதற்குப் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
நடந்து முடிந்த போரில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு ஈடான நீதியை வழங்கவும், நீண்ட கால இனப் பிரச்சனைக்கு நிலையான முடிவாக நியாயமான ஒரு அரசியற் தீர்வைக் காணவும், இந்த அரசாங்கம் அர்த்தமுள்ள எந்த நடவடிக்கைகளையும் இன்னும் எடுக்கவில்லை. மாறாக, ஏற்கெனவே இருக்கும் இன விரிசலை மேலும் அதிகமாக்கும் காரியங்களிலேயே சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது.
•ழூ மிகக் கடுமையான இராணுவப் பிரசன்னம் தமிழர் தாயகப் பகுதியான இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருக்கின்றது. ஏறக் குறைய 10 பொது மக்களுக்கு ஒரு படை வீரன் என்ற அடிப்படையில் படையணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அது தவிர, படைப் புலனாய்வு ஆட்களின் மிகத் தீவிரமான செயற்பாடும் தமிழர் வாழ்விடங்களில் இருக்கின்றது.
•ழூ நடமாடுவதற்கான சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், மனச் சாட்சிப்படி பேசுவதற்கான சுதந்திரம் போன்ற அடிப்படை மனித உரிமைகள் மிகக் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்வு கடுமையான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பொது நிர்வாக நடவடிக்கைகளில் பாதுகாப்பு அமைச்சினதும் படைகளினதும் முழுமையான தலையீடும் இருக்கின்றது.
• தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான வீடுகள், காணிகள், விவசாய நிலங்கள், வழிபாட்டு இடங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் என ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலங்கள் படைகளால் கையகப்படுத்தப்பட்டு படைத் தளங்களும் உயர் காப்பு வலயங்களும்; உருவாக்கப்பட்டுள்ளன.
• தமிழர் வாழ்விடங்களில், பூர்வீகமாகப் பௌத்த சிங்களவர்கள் வாழாத பிரதேசங்களில், அரச காணிகளிலும் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட காணிகளிலும் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர். அவர்களுக்கான அடிப்படை வாழ்வு வசதிகளுடன் பொளத்த விகாரைகளும் அங்கு எழுப்பப்படுகின்றன. இவ்வாறாக விகாரைகள் எழுப்பப்படும் இடங்கள் எல்லாம் பௌத்த புனிதப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றன.
•போர் நிகழ்ந்த காலத்தில் கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான அரசியற் கைதிகள் இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர். போரின் முடிவில் சரணடைந்த ஆயிரக் கணக்கான போராளிகள் கூட விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், அரசியற் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் அடைக்கப்பட்டுள்ளார்கள். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கூட திரும்பத் திரும்ப கைது செய்யப்படுவதுடன், அவர்களும் அவர்களது குடும்பங்களும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள்.
இவை எதுவுமே இன நல்லிணக்கத்திற்கான அறிகுறிகள் இல்லை என்பதனையும், இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டு மக்களின் அமைதியான வாழ்வுக்கோ அல்லது பொருளாதார மேம்பாட்டுக்கோ எவ்வகையிலும் வழி செய்யாது என்பதையும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு நினைவுபடுத்த தமிழீழ விடுதலை இயக்கம் விரும்புகின்றது.
•தமிழர் தாயகப் பிரதேசங்களில் குவிக்கப்பட்டுள்ள ஆயுதப் படைகளை வெளியேற்றி,
•அரசாங்கப் பின்னணியுடன் மேற்கொள்ளப்படுகின்ற செயற்கையான சிங்கள மயமாக்கலை நிறுத்துவதுடன், ஏற்கெனவே செய்யப்பட்ட குடியேற்றங்களை மீளப்பெற்று,
•சிங்கள பௌத்தர்கள் வாழாத ஏனைய இனங்களின் பூர்வீக வாழ்விடங்களில் பௌத்த விகாரைகள் எழுப்புவதனை நிறுத்தி,
•போர்க் காலக் காரணங்களிற்காகக் கைது செய்யப்பட்ட அனைத்து அரசியற் கைதிகளையும் நிபந்தனைகள் ஏதும் இன்றி விடுவித்து,
•போர் நிகழ்ந்த காலத்தில் காணாமற் போனவர்கள் மற்றும் போரின் முடிவில் சரணடைந்தவர்கள் பற்றிய விபரங்களையும், அவர்களது தற்போதைய நிலை பற்றிய ஆதாரங்களையும் வெளிப்படுத்தி,
•மீன்பிடித்தல் விவசாயம் செய்தல் போன்ற வாழ்வாதாரத் தொழில்களைச் செய்வதற்கு இடப்பட்டிருக்கும் தடைகள் அனைத்தையும் நீக்கி,
காத்திரமான இன நல்லிணக்க முயற்சிகளை எடுப்பதுடன், நேர்த்தியானதும் நிலையானதுமான ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கும் சிறீலங்கா அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.
அரசியற் தீர்வு
தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபைகள் முறைமை, நேர்த்தியானதும் நிலையானதுமான ஒரு அரசியற் தீர்வு அல்ல. கடந்த ஏழு தசாப்தங்களாக, குறிப்பாகக் கடந்த 30 வருடங்களாக, எமது இனம் கொடுத்த விலைகளுக்கு மாகாண சபைகளின் அதிகாரங்கள் ஈடானவை இல்லை. சிறீலங்கா அரசியலமைப்பில் செய்யப்பட்ட 13வது திருத்தம், தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகளுக்கான ஒரு வலுவான பதிலாக அமைந்திருக்கவில்லை என்பதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடு.
ஆனால், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிட்டதும், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிட வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ளது. அவ்வாறாக மாகாண சபைத் தேர்தல்களில் நாம் போட்டியிடுவதனை, எமது மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடமையிலிருந்து நாம் தவறிவிட்டோம் என யாரும் கருதிவிடக் கூடாது.
செல்லும் திசை தெளிவாக இல்லாத ஒரு அரசியற் சந்தியில் தற்போது நின்றுகொண்டிருக்கும் தமிழ் தேசிய இனத்தின் சமூக - பொருளாதார - அரசியல் இருப்பை மீள உறுதிப்படுத்துவதற்கான ஒரு படியாக மாகாண சபைத் தேர்தல்களில் நாம் பங்கேற்க வேண்டிய தேவை தற்போது உள்ளது. இது, இறுதித் தீர்வை நோக்கிய நீண்ட பயணத்தில் ஒரு படியே அல்லாமல், தமிழீழ விடுதலை இயக்கம் முன்வைக்கும் இறுதித் தீர்வு தற்போது உள்ள மாகாண சபை முறைமை அல்ல. தமிழினம் ஒரு தேசிய இனம்.
ஓவ்வொரு தேசிய இனத்திற்கும் இருப்பதைப் போல, எமது இனத்திற்கும் இலங்கைத் தீவிற்குள் ஒரு தேசம் உண்டு. நீண்ட கால அடக்குமுறைகளுக்கும், இனப் பாகுபாட்டிற்கும், வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட நிலையில், அவற்றிலிருந்து மீளுவதற்கான ஒரே வழியாகவே எமது இனத்திற்கென தனியாக ஒரு நாட்டை உருவாக்கும் இலட்சியத்தோடு நாம் எல்லோரும் போராடினோம்.
ஆனாலும், கால மாற்றத்திற்கு ஏற்ப வழிவிட்டும், வேறு மார்க்கங்களை முயன்று பார்க்கும் நோக்குடனும், இலங்கை என்பது ஒரே நாடு என்ற வரையறைக்குள் தீர்வு தேடும் முயற்சியில் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக நாம் ஈடுபட்டு வருகின்றோம்.
இலங்கை என்ற ஒரு ஐக்கிய நாட்டிற்குள் எமது தேசத்திற்கென ஒரு தனியாக சுயாட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதே இலங்கை இனப்பிரச்சனைக்குப் பொருத்தமான ஒரு தீர்வாக, தற்காலச் சூழலில் அமையும் என்றே தமிழீழ விடுதலை இயக்கம் கருதுகின்றது.
அந்தவகையில், எமது இனத்திற்கான எமது தேசத்தில், எம்மை நாமே ஆளுவதற்கு ஏற்றதான ஒரு பூரண சுயாட்சிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு ஆகும்.
நிலப் பகிர்ந்தளிப்பு, நீதி ஒழுங்கு, கல்வி வளர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கிய விடயங்களில் நாமே முடிவெடுத்து, எமது தேசத்தில் எம்மை நாமே ஆளுகை செய்யக்கூடிய அதிகாரங்களுடனான ஒரு சுயாட்சிக் கட்டமைப்பாக அது அமைய வேண்டும்.
அந்த வகையில், மிக அடிப்படையான தமது அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதான ஒரு சுயாட்சிக் கட்டமைப்பு நிறுவப்படாது போனால், தமிழினத்திற்கென ஒரு தனி நாட்டை உருவாக்குவதே ஒரே வழி என்ற முடிவை தமிழினத்தின் எதிர்காலச் சந்ததி எடுக்கும் நிலை வரலாம். மூன்றாம் தரப்பு இந்த நாட்டின் அரசாங்கத்தினது தற்போதைய போக்கை உற்று அவதானிக்கும் போது, அர்த்தம் மிக்க எவ்வகையான ஒரு தீர்வையும் அது தானாகவே முன்வந்து தமிழ் மக்களுக்கு வழங்கும் என்று நாம் கருதவில்லை.
அதனால், தமிழ் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றின் நேரடியான ஈடுபாடு அவசியம் என்றே நாம் கருதுகின்றோம். அத்தகைய ஒரு மூன்றாம் தரப்பாக, இந்தியாவும் இருக்கலாம், அல்லது வேறு ஒரு நாடும் இருக்கலாம். அதே நேரம், தமிழ் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் விடயத்தில் தான் வகிக்க வேண்டிய முக்கிய பாத்திரத்தை இந்தியா மறந்துவிடக்கூடாது என்பதுடன், தனக்கிருக்கும் தார்மீகக் கடமையிலிருந்தும் இந்தியா விலகிவிடக்கூடாது என்பதனையும் தமிழீழ விடுதலை இயக்கம் நினைவுபடுத்த விரும்புகின்றது. தமிழக மக்களுக்கும், தமிழக அரசியற் கட்சிகளுக்கும், இந்தியாவின் ஏனைய மாநில அரசுகளிற்கும் கூட இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றோம்.
தமக்கு இடையேயான உள் நாட்டு அரசியற் கருத்து வேறுபாடுகளை மறந்து, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஒரே குரலாக அவர்கள் செயற்பட வேண்டும். கடந்த கால கசப்புணர்வுகள் ஏதும் இருப்பின் அவற்றை மறந்துவிட்டு, எதிர்கால நன்மையை முன்னிறுத்தி அவர்கள் செயலாற்ற வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வு ஒன்றுதான் இந்திய நாட்டின் நலன்;களுக்குப் பாதுகாப்பாக அமையும் என்பதையும் சிந்தித்து அவர்கள் செயற்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மாதம் அமெரிக்க அரசாங்கத்தினால் சமர்க்கப்பட்டு, 26 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை - பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரித்தது.
5-அந்தத் தீர்மானம் வலுவானதா, இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்லாமல், 'எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஐக்கிய நாடுகள் சபை வரை எடுத்துச்செல்லப்பட்டுள்ளது' என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமேனும் எமது கட்சி அதனை ஆதரித்தது. வேறு எந்த ஒரு நாடுமே இத்தகைய ஒரு நகர்வினைச் செய்வது பற்றிச் சிந்திக்காத, அல்லது அவ்வாறு செய்வதற்குத் துணியாத நிலையில் அமெரிக்கா அதனைச் செய்தது. அமெரிக்காவின் இந்த முயற்சி, 'இலங்கைத் தீவில் தமிழ் தேசிய இனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டது' என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்று ஏட்டில் பதிவு செய்த இரண்டாவது நிகழ்வாக அமைந்தது. அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம், 'தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்டது என்பதனையும், அவர்களது அரசியல் அபிலாசைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை' என்பதனையும் 26 நாடுகள் அந்த அனைத்துலக மன்றத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன.
அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தினது முழுமையின்மை காரணமாக, அதனைப் பூரணமாக ஏற்றுக்கொள்ளுவதில் எமது கட்சிக்கும் தயக்கங்கள் இருந்தன. ஆனாலும், வெறும் விமர்சனங்களை முன்வைக்காமல், அத்தகைய ஒரு வரலாற்றுப் பணியைச் செய்ததற்காக அமெரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க எமது கட்சி கடமைப்பட்டுள்ளது.
அதே வேளையில், அமெரிக்கா ஏற்கெனவே கொண்டுவந்த தீர்மானங்களும், எதிர்காலத்தில் கொண்டுவரக்கூடிய தீர்மானங்களும், தவறு இழைத்தவர்களைச் சர்வதேச நீதிமன்றம் வரை கொண்டு செல்லும் என ஒர் அதீத எதிர்பார்ப்பு எம்மிடையே இருந்தாலும், சர்வதேச நாடுகள் அதனைச் செய்வற்கு ஏற்ற உந்து சக்தியாக நாங்கள் செயற்பட வேண்டும். அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 26 நாடுகளையும் தொடர்ந்தும் எமது பக்கம் வைத்திருப்பது மட்டுமல்லாமல், நடுநிலை வகித்த நாடுகளுக்கும் எமது நியாயப்பாடுகளை எடுத்துவிளக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கு, எம்மிடையேயான ஒற்றுமையும், ஒருங்கிணைந்த வேலைத்திட்டமும் அவசியமானது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் சமூகமும், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களும், எமது தமிழகத்து உறவுகளும் ஒரே நேர் கோட்டில் பயணிக்க வேண்டும். எம்மிடையேயான சமூக மற்றும் மதப் பிரிவுகளைக் கடந்து, மாறுபட்ட பொருளாதார நிலைகளையும் மறந்து, கட்சி பேதங்களையும் நடைமுறைக் கொள்கை வேறுபாடுகளையும் துறந்து, அர்த்தமற்ற முரண்பாடுகளுக்குள் சிக்குண்டு நிற்காமல், நாம் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். அத்தகைய ஒர் ஒற்றுமையின் அவசியம் கருதியே 12 ஆண்;டுகளுக்கு முன்னர் எமது கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்துமே மக்களுக்காக உருவானவை.
அவற்றில் பெரும்பான்மையானவை எமது மக்களுக்காக ஆயுதப் போராட்ட இயக்கங்களாக உருவெடுத்தவை. ஆனாலும், காலத்தின் தேவை கருதி தத்தமது தனித்துவங்களில் விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒரே அணியாக நாம் இணைந்தோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை இன்னும் இறுக்கமானதாக ஆக்கி வைத்திருக்க வேண்டியதே எம் அனைவருக்கும் இன்று அவசியமானதாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, அதற்குப் புதிய ஒரு காத்திரமான வடிவத்தை நாம் கொடுக்க வேண்டும்.
வெறும் தேர்தல் கூட்டு என்ற நிலையில் இருந்து, தமது மக்களை உண்மையாகவே பிரதிநிதித்துவம் செய்யும் பதிவு செய்யப்பட்ட ஓர் அதிகாரபூர்வமான அரசியற் கட்சி என்ற புதிய வளர்ச்சியை உருவாக்க வேண்டும். அதனை அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளாகிய நாம் எல்லோருமாகச் சேர்ந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும். அத்தகைய ஒரு வளர்ச்சியை நோக்கிய நகர்வில், எமது இனத்தின் ஒற்றுமைக்காக, நாம் மேலும் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டி ஏற்படலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக, தன்னால் முடிந்த எந்தகைய விட்டுக்கொடுப்பைச் செய்வதற்கும் தமிழீழ விடுதலை இயக்கம் தயாராக இருக்கின்றது. அதே சமயத்தில், அதே ஒற்றுமை மனப் பாங்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளும் செயற்பட வேண்டும் என எமது கட்சி எதிர்பார்க்கின்றது.
6 -ஆனால், ஒற்றுமைக்கான விட்டுக்கொடுப்புகள் என்பவை எல்லாத் தரப்புக்களினாலும் சமமாகச் செய்யப்படுவதே பொருத்தமானதாக இருக்கும். குறிப்பிட்ட சில தரப்புக்கள் மட்டுமே விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான நிர்ப்பந்த சூழல்களை உருவாக்கவதோ பொருத்தமானதாக அமையாது. அவ்வாறாக, ஒரு நிர்ப்பந்த சூழலில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாடு நின்று நிலைக்கக்கூடிய ஒரு ஒற்றுமையாகவும் அமையாது. அனைத்துலக சமூகத்தை மையப்படுத்தியே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பின்னணியில், கூட்டமைப்பின் இறுக்கமான ஒற்றுமையையே அனைத்துலக சமூகம் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளாகிய நாம் அனைவருமே, சக பங்காளிக் கட்சிகளைச் சமமாகக் கருதி, நிகராக நடாத்தி, தலைமைத்துவப் பண்புடன் செயலாற்றும் முதிர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும்.
அந்த முதிர்ச்சியின் வெளிப்பாடாக, கூட்டமைப்பின் கட்டமைப்பைச் சரிவர எமக்குள் பகிர்ந்தளித்து அனைவரும் அனைவரையும் கௌரவத்துடன் நடத்த வேண்டும் என்பதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் எதிர்பார்ப்பு. ஒட்டுமொத்தமான தமிழ் தேசிய இனத்தின் அரசியற் சுபீட்சத்தை நோக்கிய பயணத்தில், எமது அடுத்த நகர்விற்கு அடிப்படையான தேவையாக இருப்பது எமக்கு இடையிலான இறுகிய ஒற்றுமை தான் என்பதை எம்மில் எவருமே மறந்துவிடக் கூடாது.
செல்வம் அடைக்கலநாதன்
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்(TELO)
முன்னெப்போதும் இருந்திராத வகையான அரசியல் வெளி ஒன்றில் தமிழ் தேசிய இனம் தற்போது நின்றுகொண்டிருக்கின்றது - அடைக்கலநாதன்
Reviewed by Admin
on
April 08, 2013
Rating:
No comments:
Post a Comment