அண்மைய செய்திகள்

recent
-

முஸ்லிம் அதிகார சக்திகளால் பாதிக்கப்படும் தமிழர்கள் பற்றியும் பேசவும்: சம்பந்தனுக்கு கடிதம்


சிங்கள அமைப்பினால் பாதிக்கப்படும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் பேசும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முஸ்லிம் அதிகார சக்திகளால் பாதிக்கப்படும் தமிழ் மக்கள் பற்றியும் பேச வேண்டும் என தெரிவத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு மிள்குடியேறியோருக்கான நலன்பேணும் அமைப்பினர் தொலைநகல் மூலம் கடிதம் ஒன்றினை இன்று சனிக்கிழமை அனுப்பி வைத்துள்ளனர்.


இக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகிய தாங்கள் கடந்த 09-04-2013 செவ்வாய்க்கிழமை அன்று பாராளுமன்றத்தில் முஸ்லிம் மக்கள் மீது அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து ஆற்றிய உரை தொடர்பில் வவுனியா மாவட்ட மீளக்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பினராகிய நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சிறுபான்மை இனம் ஒன்று ஒடுக்கப்படும் போது இன்னொரு சிறுபான்மை இனமானது வெறும் பார்வையாளராக இருக்க முடியாது என்ற தங்களது நியாயமான கருத்தையும நாம்; வரவேற்கின்றோம.; ஏனெனில் அது கண்டிக்கத்தக்க விடயம் என்பதில் எமக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே வேளை சிங்கள அமைப்பினால் பாதிக்கப்படும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் பேசும் தாங்கள் முஸ்லிம் அதிகார சக்திகளால் பாதிக்கப்படும் தமிழ் மக்கள் பற்றியும் பேச வேண்டும் என வினயமுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை ஒரு பக்க அடியினையே தாங்கிய தமிழ் மக்கள் யுத்த நிறைவின் பின்னர் இரு பக்கமும் அடிவாங்கும் மத்தளத்தின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாற் போல போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் முஸ்லிம் அதிகார சக்திகளாலும் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் தாங்கள் பேச வேண்டும் என எதிர்பார்த்து நிற்கின்றோம். தமிழ் மக்கள் மீதான முஸ்லிம் அதிகார சக்திகளின் ஒடுக்குமுறைகள் பலவற்றை நாம் குறிப்பிட்டுக் கூற முடியும்.

எடுத்துக் காட்டாக எமது வவுனியா மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டம் வழங்கலில் கிராமத்தையும் பயனாளிகளின் எண்ணிக்கையினையும் தீர்மானிக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் செயற்பாட்டால் தமிழ் மக்கள் பாரபட்சத்திற்கும் பாதிப்பிற்கும் உள்ளாகியுள்ளனர்.

போரால் முழுமையாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு வீடுகள் வழங்கப்படுவதற்கு பதிலாக முஸ்லிம் மக்களிற்கே இங்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் கடந்த 30-01-2013 அன்று வவுனியா கச்சேரி முன்றலில் ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டிய போதும் அமைச்சர் தொடர்ந்தும் அவ்விதமாகவே செயற்பட்டு வருகின்றார். மக்களால் இவ் விடயம் வெளிப்படுத்தப்பட்டு 3 மாதங்களாகின்ற போதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் இது வரை தாங்கள் பேசவில்லையே அது ஏன்?

கடந்த 21-03-2013; அன்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்கள் தனது உரையில் இந்திய வீட்டுத் திட்ட உதவிகள் முஸ்லிம் மக்களிற்கும் வழங்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் தலைவராகிய இரா.சம்பந்தன் அவர்கள் இந்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்ததாக குறிப்பிட்ட போது அமைச்சர் ரிசாத்பதியுதீன் அவர்கள் தனது உரையில் அவ்விதம் கடிதம் எழுதியமைக்காக தங்களிற்கு நன்றியினையும் தெரிவித்திருந்தார் என்பதையும் இங்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

முஸ்லிம் மக்களிற்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக முஸ்லிம் மக்களிற்கு முழுமையாக வழங்கிய பின்னரே மீதமிருந்தால் தமிழ் மக்களிற்கு வழங்கப்படும் என்ற நிலையே எமது மாவட்டத்தில் காணப்படுகிறது. இவ்வாறு பாரபட்சமானதும் தகுதியற்றதுமான தெரிவுகள் இடம்பெற்று மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை முடிவுற்றதும் தமிழ் மக்களிற்கு மிஞ்சப் போவது தான் என்ன?

போரால் முழுமையாக பாதிப்புற்று வெய்யில், மழை என்பவற்றிற்கு முகம் கொடுத்து மண் குடிசைகளில் சொல்லொணாத் துன்பங்களை தமிழ் மக்களாகிய நாம் அனுபவித்து வரும் நிலையில் இத்தகைய பாரபட்சம் தொடர்பில் ஏற்கனவே புள்ளி விபரங்களுடன் நாம் வெளிப்படுத்தியிருந்த போதும்; இது வரை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் தாங்கள் எதுவும் பேசவில்லை என்பதும் எமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.

மேலும் வவுனியா மாவட்டத்தில் பம்பைமடு, ஆண்டியா புளியங்குளம், பாவற்குளம் படிவம்2 ஆகிய கிராமங்களில் 800 ஏக்கர் வரையிலான காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்களிற்கு மட்டும் காணிகள் வழங்கும் வேலைத்திட்டம் இவ் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் குடும்பங்கள் காணியற்று உள்ள போது முஸ்லிம் மக்களிற்கு மட்டும் காணிகள் வழங்கப்பட்டு மீள் குடியேற்றம் செய்யப்படுவது எந்த விதத்தில் நியாயமாக அமைய முடியும்?

முள்ளியவளைப் பிரதேசத்தில் 40 வருடங்களிற்கு மேலாக காட்டை வெட்டி குடியிருந்த தமிழ் மக்களை அக்காணிகளில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றி விட்டு 1400 ஏக்கர் காடு அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்களிற்கு மட்டும் காணி வழங்கும் செயற்பாடு குறித்த அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் தாங்கள் அறிவீர்கள். முஸ்லிம் மக்கள் மீதான சம்பவங்கள் குறித்து தாங்கள் உரையாற்றிய இரு நாட்களிற்கு முன்னர் தான் பாதிக்கப்பட்ட முள்ளியவளை மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை தாங்கள் அறிந்திருந்தும் இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றி தாங்கள் இதுவரை பேசியதாகவும் தெரியவில்லையே.

வீடமைப்புத் திட்டம், காணி வழங்கல் என்பவற்றில் மட்டுமன்றி கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற அபிவிருத்திச் செயற்பாடுகளிற்கு வளங்களை ஒதுக்குவதிலும், வேலை வாய்ப்புகளை வழங்குவதிலும்; முஸ்லிம் அதிகார சக்திகளால் தமிழ் மக்கள் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அமைச்சர் மற்றும் அமைச்சரது இணைப்பாளர்களின் ஆணைகளிற்கமையவே மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகளும் செயற்பட்டு வருகின்ற நிலமையே காணப்படுகின்றது.

இவ்வாறாக பல ஒடுக்கு முறைகளும் பாரபட்சங்களும் முஸ்லிம் அதிகார சக்திகளால் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்டு வருகின்றது. பெரும்பாலான தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகிய தாங்கள் முஸ்லிம் மக்கள் மீதான ஒடுக்கு முறைகள் பற்றி பேசுவதோடு மட்டும் நின்று விடாது முஸ்லிம் அதிகார சக்திகளால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இத்தகைய ஒடுக்குமுறைகள் பற்றியும் பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதையும் அத்துடன் எமக்கு நியாயம் கிடைக்க ஆவன செய்யுமாறும் அத்தகைய ஒடுக்கு முறையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் சார்பில் நாம் தங்களை பணிவன்புடன் வேண்டி நிற்கின்றோம் என இக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.bx
முஸ்லிம் அதிகார சக்திகளால் பாதிக்கப்படும் தமிழர்கள் பற்றியும் பேசவும்: சம்பந்தனுக்கு கடிதம் Reviewed by NEWMANNAR on April 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.