தமிழர் காணிகளை மீள ஒப்படைக்கும்வரை தொடர் போராட்டங்களை கூட்டமைப்பு நடத்தும்
இதன் முதற்கட்டமாக சட்ட நடவடிக்கை எடுக்கவும், காணி சுவீகரிப்பு விவகாரத்தை சர்வதேசமயப்படுத்தவும், மக்களின் பங்களிப்புடன் குடாநாட்டில் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும் 5000 வரையிலான வழக்குகளைத் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
வட மாகாணத்தில் இப்போது ஒன்றரை இலட்சம் படையினர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையில் கடற்படையினர், விமானப் படையினர் உள்ளடக்கப்படவில்லை.
வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கில் 6381 ஏக்கர் பொது மக்களது காணிகள் இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்தபோதும் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இக்காணி பலாலி விமான நிலையம் விஸ்தரிப்புக்காகவும் காங்கேசன்துறை துறைமுக விஸ்தரிப்புக்காகவும் சுவீகரிக்கப்பட்டதாக இந்திய சஞ்சிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறானது. இது விடயத்தை திசைத்திருப்பும் கூற்றாகும். இராணுவ முகாம் விஸ்தரிப்புக்கும் இராணுவ குடியிருப்புக்களை அமைப்பதற்காகவுமே இக்காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன.
வட மாகாணத்தை இராணுவ மயமாக்குவதுடன் சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகளையே அரசாங்கம் இப்போது மேற்கொண்டு வருகின்றது.
சமீபத்தில் வவுனியா கொக்கச்சான்குளம் என்ற தமிழ் கிராமம் கலாபோகஸ்வெவ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர போன்ற பிரதேசங்களிலிருந்து ஆயிரம் குடும்பங்கள் கொண்டு வந்து குடியேற்றப்பட்டுள்ளன. நாமல் ராஜபக் ஷ எம்.பி நேரடியாக இப் பிரதேசத்துக்கு வந்து குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கான உதவிகளைச் செய்து கொடுத்துள்ளார். இதே போல் மடு ரோட், முருங்கன் ஆகிய பகுதிகளிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் வலி. தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இராணுவத்தினரின் காணி ஆக்கிரமிப்பு மற்றும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக மேற்படி பிரதேச சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். வலி. வடக்கிலும் இதே போன்று மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதைப் போல வலி.தெற்மேற்கு பிரதேசத்திலும் வழக்கு தொடர உள்ளதாகவும் மேற்படி சபையின் உறுப்பினர் கௌரிகாந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ.; ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். வலி.தென்மேற்கு பிரதேசம் உட்பட மாவட்டம், மாகாணம் என தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவத்தின் காணி மற்றும் நில ஆக்கிரமிப்புகளும், அபகரிப்புகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதன் தொடராக வலி.தென்மேற்குப் பகுதியிலும் பிரதேச சபைக்கு சொந்தமான காணியை படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.
இதே போன்று பொது மக்களது காணிகள் மற்றும் வீடுகளையும் அபகரித்தும் ஆக்கிரமித்தும் வைத்திருக்கின்றனர். பொலிஸாரும் பொது மக்களது காணிகள் மற்றும் வீடுகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அதாவது இப்பிரதேச சபைக்குட்பட்ட இளவாலைப் பகுதியில் பத்து வீடுகளும், மானிப்பாயில் இரண்டு வீடுகளுமாக பொலிஸார் வைத்துள்ளனர். இவ்வாறு இராணுவமும் பொலிஸாரும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற அல்லது அபகரித்து வைத்திருக்கின்ற காணிகள் மற்றும் வீடுகளைத் திரும்ப வழங்க வேண்டுமென கோரி வருகின்ற நேரத்தில் அதனை நிரந்தரமாக கைப்பற்றுகின்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மானிப்பாய் கூழாவடியில் இராணுவத்தினர் அமைத்து வைத்திருக்கின்ற முகாம் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை. இதற்கு உறுதிகளும் இருக்கின்ற நிலையில் இதனை அபகரிப்பதற்கான அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவ்விடயங்கள் பிரதேச சபையின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
தமிழர் காணிகளை மீள ஒப்படைக்கும்வரை தொடர் போராட்டங்களை கூட்டமைப்பு நடத்தும்
Reviewed by Admin
on
May 05, 2013
Rating:

No comments:
Post a Comment