அண்மைய செய்திகள்

recent
-

ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்சி செய்யும் அரசுக்கெதிராக குரல் கொடுக்கவேண்டும்T .N. A

அரசின் சிறந்த முகாமைத்துவமின்மையால் அரச திணைக்களங்களிலும் பொதுத் துறைகளிலும் ஊழல் நிறைந்த ஊதாரித்தனமான செயல்களினால் வரிச்சுமை அதிகரித்து, உற்பத்தி குன்றி, கடன்கள் அதிகரித்து மக்கள் வதைக்கப்படுவதற்கு எதிராக போராடவேண்டியுள்ளோம். எனவே மனித உரிமைகளுக்கெதிராக ஜனநாயக விரோதமாக ஆட்சி செய்யும் இந்த அரசுக்கு எதிராக ஒருமித்துக் குரல் கொடுக்க ஜனநாயக வழிகளில் அணிதிரண்டு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மே தின நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே நாள் நிகழ்ச்சி தொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சோனாதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகத் தொழிலாளர் விடுதலை பெற்ற நாளாக உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் “மே” முதலாம் ஆம் நாள் தொழிலாளர் விழாவாகக் கொண்டாடுவது வழமையானதே.

 பல நாடுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள், புரட்சி நடவடிக்கைகள் காரணமாக ஆட்சிகளே மாற்றியமைக்கப்பட்டுள்ளமையும் வரலாறுகளாகும். இலங்கையிலும் தொழிலாளர் வர்த்தக்கத்தின் போராட்டங்களை பெரும்பாலும் இடதுசாரி அரசியல் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் நடத்தி வந்துள்ளன. அந்நாளில் ஒரு சதத்தால் பாண் விலை அதிகரித்தாலும் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இப்பொழுது இன்றைய அரசாங்கத்தில் இடதுசாரிக் கட்சிகள் அமைச்சர்களாகிவிட்டனர்.

 பாணின் விலை  அதிகரித்தாலும், விலைவாசி மலையென உயர்ந்தாலும் அன்றைய போராட்டங்கள் இன்று ஏற்படுவதாயில்லை. அவை நியாயப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் நீண்டகால யுத்தம் மற்றும் போராட்டங்கள் காரணமாக மக்கள் அரசியல் உரிமைகள் அற்றவர்களாக மட்டுமன்றி பொருளாதார ரீதியில் மிகமோசமாக வீழ்ந்து கிடக்கிறார்கள். அவர்களில் பல இலட்சம் மக்கள் நிலமற்ற, வீடற்ற, வேலையற்ற, உழைப்பற்ற ஏதிலிகளாகப் பேரவலத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

விவசாய நிலங்கள், மீன் பிடிக்கக்கூடிய வளமுள்ள கடல் பகுதிகள், குடியிருப்பு நிலங்கள் உள்ளிட்ட இடங்களிலிருந்து சொந்தக் காரர்கள் அகற்றப்பட்டு சீரழிக்கப்படுகிறது. குறிப்பாக வலி.வடக்கிலிருந்து ௨௩ ஆண்டுகளாகியும் அந்த மக்கள் பூரணமாக மீளக்குடியேற்றப்படவில்லை. வடக்கிலும் கிழக்கிலும் நூற்றுக்கணக்கான காணிகளும் பல ஆயிரம் ஏக்கர் தமிழ் மக்களின் நிலங்கள் இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படுவதற்கு என அறிவித்தல் கொடுக்கப்பட்டிருக்கின்றது. பௌத்த குடிமக்களே இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளும் விகாரைகளும் கட்டப்படுகின்றன.

தமிழ் இன அடையாளங்கள் அழிக்கப்பட்டு தமிழ்த்தேசிய இனம் ஒன்றில்லை என்னும் நிகழ்ச்சி நிரல் அரசினால் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்த் தேசிய இனக் கட்டமைப்பையும் ஒரு தேசிய இனத்துக்குரிய சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தையும் அழித்துவிட்டு இனப்பிரச்சினையே இல்லை என்று சொல்லவே அரசு திட்டமிடப்பட்டு செயலாற்றுகின்றது. அதற்காக தமிழ் விவசாயிகளை அவர் நிலத்திலிருந்து வெளியேற்றிவிட்டு சிங்கள விவசாயிகளின் குடியேற்றமும் தமிழ் மீனவர்களைக் கடல் பிரதேசத்திலிருந்து வெளியேற்றிவிட்டு சிங்கள மீனவர்களின் குடியேற்றமும் நடக்கின்றது.

தமிழர் பிரதேசங்களை இராணுவ மயமாக்கி, சிங்கள மயமாக்கி, பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சி நிரலே அரசினால் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தனை செயற்பாடுகளும் முஸ்லிம் மக்களுக்கும் பொருத்தமானதே.
ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்சி செய்யும் அரசுக்கெதிராக குரல் கொடுக்கவேண்டும்T .N. A Reviewed by Admin on May 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.