தமிழ், முஸ்லிம்கள் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ள அசாத் சாலி கைது!- சிவசகதி ஆனந்தன்.
மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவர்களை, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களை ஒடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஒன்றாகவே இதனை நாம் பார்க்கின்றோம். ஊடகத்துறை, நீதித்துறை மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஒடுக்கும் வகையில் அரசாங்கம் ஏற்கனவே தமது செயற்பாடுகளை மேற்கொண்டது.
இப்போது தம்மை விமர்சிப்பவர்களையும் அரசாங்கம் இலக்கு வைக்கின்றது" எனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய சஞ்சிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி தொடர்பாகவே அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேட்டியில் சில விடயங்கள் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக அசாத் சாலி உடனடியாகவே குறிப்பிட்ட சஞ்சிகைக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையிலும் குறிப்பிட்ட பேட்டியைக் காரணம்காட்டி அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கலாகவே கருத வேண்டியுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைக்காலங்களில் பெருமளவு வன்முறைகள் ஏவிவிடப்பட்டன. அவர்களுடைய மத ஸ்தலங்கள் தாக்கப்பட்டன. வர்த்தக நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டன. ஹலால் இல்லாதொழிக்கப்பட்டது.
தமிழர்களுக்கு எதிராக பௌத்த - சிங்கள பேரினவாதிகள் முன்னெடுத்த தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே முஸ்லிம்கள் தற்போது இலக்குவைக்கப்படுகின்றார்கள். இவை அனைத்தையும் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்த அரசாங்கம், இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த அசாத் சாலியைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
தமிழர்கள் மட்டுமன்றி முஸ்லிம்களும இன்று ஒடுக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பொது பல சோனா என்ற அமைப்பின் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதற்கு எதிராக எந்த நடவடிக்கையை எடுக்கவும் அரசாங்கம் தயாராகவில்லை. இன நல்லுறவைச் சீர்குலைக்கும் அவாகளுடைய செயற்பாடுகளைத் தடுக்க முடியாதுள்ள அரசாங்கம், இன உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அசாத் சாலியைக் கைது செய்திருப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
அதேவேளையில், தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தையும் இச்சம்பவம் உணர்த்தியுள்ளதாகவே நாம் கருதுகின்றோம். இவ்வாறு சிவசக்தி ஆனந்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ், முஸ்லிம்கள் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ள அசாத் சாலி கைது!- சிவசகதி ஆனந்தன்.
Reviewed by Admin
on
May 07, 2013
Rating:

No comments:
Post a Comment