அண்மைய செய்திகள்

recent
-

வன்னி மாவட்டத்தின் 10 உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கூட்டமைப்பின் பதிவை வலியுறுத்தி சம்பந்தனுக்கு அவசர கடிதம்!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவை வலியுறுத்தி வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுமையிலுள்ள பத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு ஒருமித்தகுரலில் தீர்மானக் கடிதங்களை அந்த அந்த மன்றங்களின் சார்பில் அனுப்பிவைத்துள்ளார்கள்.


வவுனியா நகர சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச சபை ஆகியவற்றின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளும் கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் இவ்வாறு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்கள்.

இக்கடிதப் பிரதிகள் ஈ.பி.ஆர்,எல்.,எஃப் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பிரதேச, நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாகிய நாம் கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக தங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.

இலங்கைத்தமிழ் மக்கள் தம்மை ஆளும் உரிமைகளைப் பெற்று தலை நிமிர்ந்து வாழவும், தமிழ் மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தி வழிகாட்டிச் செல்லவல்ல தலைமை ஒன்றை தமிழ் மக்களுக்கு வழங்கிடவும் எமது கோரிக்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோருகிறோம்.

தமிழ் தலைமைகள் பிரிந்து நின்று தமிழ் மக்களின் வாக்குகளும் பிரிக்கப்பட்டு தமிழ்ப்பிரதிநிதித்துவங்கள் பெருமளவுக்கு பறிபோன சூழ்நிலை உணரப்பட்டதன் விளைவாகவும் – பிரிந்து நின்று கோரிக்கைகளை வைப்பதை இன மேலாதிக்கவாத அரசாங்கங்கள் தமக்குச் சார்பாக பயன்படுத்துவது உணரப்பட்டதன் விளைவாகவுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது.

எனவே, தமிழ் மக்களுக்கான தீர்வு விடயம் தொடக்கம் அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரே கொள்கையாக ஒரே குரலில் பேசவல்ல உறுதியான ஒரே கட்சியாக வளர்வதற்கான ஆரம்ப படியாகவே கூட்டமைப்பின் ஆரம்பத்தை நாமும் மக்களும் நோக்கினோம்.

எனினும் கூட்டமைப்பு உருவாகி 12 வருடங்கள் கழிந்த நிலையிலும் அது உருவான காலத்தைவிட இன்று பல மடங்கு பொறுப்புகளை திறம்பட ஆற்றி முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு 4 வருடங்கள் கடந்தும் – கடந்த 4 ஆண்டுகளாக கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளும், மக்களும், ஊடகங்களும் வலியுறுத்தியும் கூட்டமைப்பை ஓர் கட்சியாக பதிவு செய்வதற்கு தாங்கள் காலம் கடத்தி வருவது எமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் எதிர்நோக்கிவரும் அரசியல் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகள் திட்டமிட்ட வகையிலும் உறுதியாகவும் கையாளப்பட வேண்டுமாயின் கூட்டமைப்பு ஓர் கட்சியாக பதிவு செய்யப்பட்டு பொருத்தமான குழுக்களிடம் முக்கிய பிரச்சினைகளைக் கையாளும் பொறுப்புக்கள் கையளிக்கப்பட வேண்டும். இதற்கு கூட்டமைப்பு ஓர் கட்சியாகப் பதிவுசெய்யப்படுதல் அடிப்படைத் தேவையாகும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய நகர்வுகள் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும். சுர்வதேச சமூகத்தின் கரிசனை இலங்கைத் தமிழர் போராட்டத்தின் மீது அதிகரித்துவரும் நிலையில் – சர்வதேச ஆதரவுத் தளத்தை அதிகரிக்கவும்.

அவ் ஆதரவுத் தளமானது வலிமை குன்றாமலும், திசை மாற்றப்பட்டு போகாமலும் தமிழ் மக்களின் தீர்வுவரை வழி நடத்திச் செல்ல கூட்டமைப்பின் ஒன்றுபட்ட தொடர்ச்சியான செயற்பாடு அவசியம் என நாம் கருதுகிறோம்.

இக்கடமை செவ்வனே செய்யப்பட கூட்டமைப்பு ஒரு வலுமிக்க கட்சியாக இயங்குதல் அடிப்படைத் தேவை என நாம் கருதுகின்றோம். இதற்கு கூட்டமைப்பு ஓர் கட்சியாக பதிவு செய்யப்படுவது அத்தியாவசியமாகும்.

கூட்டமைப்பு ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்படாமல் இருப்பதாலும் – தமிழரசுக் கட்சி தனியாக தன்னை வளர்த்துக்கொள்ளும் செயற்பாடுகளில் அதிகம் மூழ்கியிருப்பதாலும் அதன் அங்கத்துவக் கட்சிகள் அண்மைய ஆண்டுகளில் அரசியல் ரீதியாக ஒவ்வோர் விதமான கருத்துக்களை முன்வைக்கும் போக்கு அதிகரித்து வருவது ஆரோக்கியமானதல்ல.

கூட்டமைப்பை காலம் தாழ்த்தாது பதிவு செய்வதன் மூலமே ஒரே குரலில் ஒரே கருத்தை தமிழ் மக்களின் கருத்தாக ஒலிக்கமுடியும். எமது விடுதலைக்கு இது அத்தியாவசியமாகும். இதற்கு கூட்டமைப்பு பதிவு செய்யப்படுதல் அவசியமாகும்.

அனைத்துக்கும் மேலாக எதிர்காலம் பற்றிய கேள்விக் குறியுடன் அவநம்பிக்கைகள், விரக்திகளின் மத்தியில் வாழும் நம் மக்களுக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தி எமது இலக்கினை வென்றிட ஒன்றுபட்ட வலுவான தலைமைத்துவத்தினை எதிர்பார்த்து வாக்களித்த மக்கள் காத்திருக்கையில் தனிக்கட்சி வளர்க்க முனையும் தமிழரசுக்கட்சியின் செயற்பாடு காலப்பொருத்தமோ தேவைப்பொருத்தமோ அற்ற ஒன்றாகவே நாம் கருதுகின்றோம்.

எனவே தமிழ் மக்களுக்கு நிலையான தீர்வொன்று எட்டப்படும் வரை கூட்டமைப்பு ஒரே கட்சியாக செயற்பட்டாக வேண்டும் என உரிமையுடன் கோருகின்றோம் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கபட்டிருந்தன.



வன்னி மாவட்டத்தின் 10 உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கூட்டமைப்பின் பதிவை வலியுறுத்தி சம்பந்தனுக்கு அவசர கடிதம்! Reviewed by NEWMANNAR on May 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.