அண்மைய செய்திகள்

recent
-

பரப்புக்கடந்தான் மேற்கு கிராமத்தில் காணி சுவீகரிப்பினை தடுத்து நிறுத்தக்கோரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிப்பு

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரப்புக்கடந்தான் மேற்கு கிராமத்தில் காணி சுவீகரிப்பு இடம் பெற்று வருவதாகவும்,அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி பரப்புக்கடந்தான் மேற்கு கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் சி.பிரான்சிஸ் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர அவர்களுக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.


குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,

இடப்பெயர்விற்கு முன் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 750 குடும்பங்களை உள்ளடக்கியதாக எமது கிராமம் காணப்பட்டது.

இதில் 110 குடும்பங்கள் மட்டுமே யுத்த இடப்பெயர்வுகளின் பின் மீண்டும் மீள் குடியேறியுள்ளனர்.மீதி 640 குடும்பங்களும் 4 மடங்குகளை அதிகரித்த நிலையில் இந்தியாவில் அகதி முகாமில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது சொந்த மண்ணிற்கு வருவதற்கு எண்ணியுள்ளனர்.இவர்களுக்கு 1988 ஆம்,1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பரப்புக்கடந்தான்- மடு வீதியின் இரண்டாம் கட்டைப்பகுதியில் வடக்கு,தெற்கு பகுதியில் யு.என்.எச்.சி.ஆர் அமைப்பின் திட்டம் மூலம் காணி வழங்கப்பட்டு வீடுகளும் அமைக்கப்பட்டன.அதற்கான ஆதாரம் அந்த இடங்களில் கிணறு,வீட்டு அத்திவாரம் ஆகியவை காணப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது மன்னார் வங்காலையைச் சேர்ந்த தனியார் ஒருவர் மேற்படி இடத்தில் தன்னிடம் கிட்டத்தட்ட 500 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்புக்காணிக்கான அனுமதிப்பத்திரம் உள்ளதாக கூறி அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

தலைமுறை,தலைமுறையாக பரப்புக்கடந்தானில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு காணி தொடர்பான வரலாறு நன்கு தெரியும்.5 மீற்றருக்கு உயரமான மரங்கள் காணப்படும் பகுதி வனப்பகுதிக்கு சொந்தமானது என வர்த்தமானி அறிவித்தலில் அறிந்தோம்.வனப்பகுதிக்குள் அத்துமீறுவது சட்டப்படி குற்றம் என்பதையும் நன்கு அறிவோம்.

இவ்வாறான நிலையில் தனியார் ஒருவர் எமது மக்களுக்கு சொந்தமான பெருமளவிலான நிலத்தை சுவீகரிப்பதை நன்கு ஆராய்ந்து தடுத்து நிறுத்தி எமது இடம் பெயர்ந்த மக்களுக்கும்,இங்கு வசிக்கும் மக்களுக்கும் தங்களின் நடைமுறைக்கு அமைவான முறையில் காணி வழங்குவதற்கோ அல்லது தனியார் சக்திகளின் அடாவடியான அத்துமீறல்களை உடன் நிறுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மகஜரின் ஒரு பிரதி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


பரப்புக்கடந்தான் மேற்கு கிராமத்தில் காணி சுவீகரிப்பினை தடுத்து நிறுத்தக்கோரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிப்பு Reviewed by Admin on June 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.