13ஆவதை ஏற்றிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது: ரிசாட்
வட-கிழக்கு பிரிந்துவிட்ட நிலையில், அதனைப் பாதுகாப்பதற்காக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் செல்ல வேண்டியிருக்கின்றது. எனவே 13 ஆவது திருத்தத்தை மனச்சாட்சியுடன் நாம் அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது என கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
வன்னி தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கிவைக்கும் நிகழ்வு வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
'இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவர்தான் டக்ளஸ் தேவானந்தா. அவர் அதே நிலைப்பாட்டில் தான் அன்றில் இருந்து இன்றுவரை இருக்கின்றார். சகல அதிகாரங்களும்; நிறைந்த வடக்கு, கிழக்கு இணைந்த அந்தத் தீர்வை அன்று ஏற்றுக்கொண்டிருந்தால் இத்தனை உயிர்களையும் உடைமைகளையும் உறவுகளையும் இழந்திருக்க தேவையில்லை. அத்துடன், சிறையில் இருக்கும் எத்தனையோ உறவுகள் எம்மோடு இருப்பதையும் கண்டிருக்கலாம்.
ஆனால் இன்று நடக்கும் போராட்டம் என்ன? வடக்கும் கிழக்கும் இணைந்த அல்லது அத்தனை அதிகாரங்களையும் கொண்ட 13ஆவது திருத்தத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதாகத் இருக்கின்றது.
வட, கிழக்கு பிரிந்துவிட்ட நிலையில் அதனைப் பாதுகாப்பதற்காக இந்தியாவுக்கு செல்ல வேண்டியிருக்கின்றது. அமெரிக்காவுக்கு செல்ல வேண்டியிருக்கின்றது. எனவே நாம் அன்றே 13ஆவது திருத்தத்தை மனச்சாட்சியுடன் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது.
எனினும், இவ்வாறான நிலையில் வடமாகாணத்தில் கடந்த சில தினங்களாக நல்ல சில நியமனங்களை நாம் வழங்கி வருகின்றோம். இந்த நியமனங்கள் உங்களுக்கு கிடைத்ததனால் நீங்கள் எவ்வாறு குடும்பத்துடன் சந்தோஷமாக நாட்களை கழிக்கின்றீர்களோ அதுபோல் இந்த மாகாணத்தில் கஷ்டப்பட்ட, துன்பப்பட்ட மக்கள் சிறப்பாக வரவேண்டும். அந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக நாம் நிற்கின்றோம்.
எனினும், இவ்வாறு சேர்ந்திருப்பவர்களை பார்த்து சமூகத்தை காட்டிக்கொடுப்பவர்கள், துரோகம் செய்பவர்கள், மண்ணைக் காட்டிக்கொடுப்பவர்கள் என சில ஊடகங்களும் கல்விமான்களும் அரசியல்வாதிகளும் சொல்கின்றார்கள்.
மேலும், சிதைவடைந்திருந்த வடமாகாணத்தை மனச்சாட்சி உள்ள எந்த மனிதன் பார்த்தாலும் கடந்த சில வருடகால அபிவிருத்திகளையும்; மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தையும் ஏற்றுக்கொள்வார்கள்.
நாங்கள் ஆயிரக்கணக்கான நியமனங்களை வழங்குகின்றபோது கட்சி, இனம், மதம் எதுவும் பார்க்காது எமது பிரதேசத்தவர்கள், இந்த மண்ணின் மைந்தர்கள் இவர்களது எதிர்காலம் நிம்மதியாக அமைய வேண்டும் என்ற இலட்சியத்தை மையமாக வைத்து தான் வழங்கிவருகின்றோம்.
13ஆவதை ஏற்றிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது: ரிசாட்
Reviewed by NEWMANNAR
on
June 26, 2013
Rating:

No comments:
Post a Comment