வடக்கில் சுமார் ஒரு இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை!
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் பெப்ரல் அமைப்பு நடத்திய நடமாடும் சேவைகளின் மூலம் சுமார் 15000 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே சுமார் ஒரு இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லாத நிலைமை உள்ளதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் மொத்தம் 36 உறுப்பினர்களை தெரிவு செய்யும் நோக்கில் 7 இலட்த்து 14 ஆயிரத்து 488 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
2012 ஆம் ஆண்டு முழுமைப்படுத்தப்பட்ட வாக்காளர் இடாப்பின் பிரகாரம் வடக்கில் சுமார் ஒரு இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. இந்த எண்ணிக்கை ஒருவேளை சரியான தொகையாக இல்லாமல் இருக்கலாம். காரணம் தேசிய அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யாமல் சிலர் விட்டிருக்கலாம். எவ்வாறெனினும் இந்த தொகையை அண்மித்த வகையில் அடையாள அட்டை இல்லாதோர் இருக்கலாம் என்று அறியப்படுகின்றது.
வடக்கின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு அடையாள அட்டை இல்லாதவர்கள் சுமார் ஒரு இலட்சம் பேர் உள்ளனர்.
கடந்த காலங்களில் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் பெப்ரல் அமைப்பு நடத்திய நடமாடும் சேவைகளில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு நடமாடும் சேவைகளிலும் 1000 பேர் அளவில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் தேர்தல் நெருங்குகின்றமையின் காரணமாக தேசிய அடையாள அட்டைகள் இல்லாதோர் விரைவாக மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளவேண்டும் என்று பெப்ரல் கோரிக்கை விடுக்கின்றது.
தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் திணைக்களத்தினால் அனுமதியளிக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாதோர் விரைவாக தேர்தல் திணைக்களத்தின் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
வடக்கில் சுமார் ஒரு இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை!
Reviewed by Admin
on
July 17, 2013
Rating:

No comments:
Post a Comment