கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் இன்னும் தெரிவாகவில்லை: சம்பந்தன்; மாவையைப் பரிந்துரைத்தது
நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் அதன் பொதுச் செயலாளருமான மாவை சோனாதிராஜாவை நிறுத்துவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட கிளைத் தீர்மானித்துள்ளது. இதனை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் மாநகர சபை ஆணையாளருமான சீ.வீ.கே. சிவஞானம் நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றுக்காலை தமிழரசுக் கட்சியினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இத்தீர்மானத்தைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதற்கு அக்கட்சியின் யாழ்.மாவட்டக் கிளை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தலை கட்சியின் ஏனைய மாவட்ட கிளைகளுக்கும் அறிவித்துள்ளோம். அதேபோல் இத்தீர்மானத்தை தமிழரசுக் கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருக்கும் பதிவுத் தபால் மூலம் அறிவித்துள்ளோம்.
வடமாகாண சபைத் தேர்தல் நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம் எனினும் தேர்தல் நடைபெற்றால் அதற்கான முதலமைச்சராக யாரை நிறுத்த வேண்டும் ஏனைய வேட்பாளர் தேர்வுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தின் போது வடக்கு மாகாணத் தேர்தல் குறித்து மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதில் வேட்பாளர் தெரிவுகள் தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளைகளுக்கு வழங்கப்படவேண்டும்.
வடமாகாணம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் என ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிருப்பதால் முதலமைச்சர் தவிர்ந்த ஏனைய வேட்பாளர் அந்தந்த மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். வேட்பாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் நிரந்தர வாசியாகவும் தற்போது அங்கு வசிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
முதலமைச்சர் வேட்பாளர்களாக இலங்கை தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பொதுச் செயலாளரும் நீண்டகாலமாக தமிழர்களின் அரசியலில் தேசிய உணர்வோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஏனைய கட்சிகளோடும் இணைந்து செயற்பட்டுவரும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டும் என தீர்மானம் எடுத்தோம்.
மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ஆரம்பத்திலிருந்து அதனுடைய தலைமைத்துவத்தை தாங்கி வந்தவர். வடக்கு, கிழக்கு உள்ளடங்கலாக தமிழ் மக்களோடு மிக நெருக்கமாகப் பழகியவர். எனவேதான் இவரை முதலமைச்சராக அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற அடிப்படையில் எமது கட்சி தீர்மானித்தது.
கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் இன்னும் தெரிவாகவில்லை: சம்பந்தன்; மாவையைப் பரிந்துரைத்தது
Reviewed by NEWMANNAR
on
July 02, 2013
Rating:

No comments:
Post a Comment