அண்மைய செய்திகள்

recent
-

புதிய பள்ளிவாசலை மூடி பழைய பள்ளிவாசலை பெருப்பிப்பதற்கும் தீர்மானம்: பிரதமர் தலைமையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஆராய்வு

கொழும்பு கிராண்ட்பாஸ், சுவர்ணசைத்திய வீதியில் அமைந்துள்ள மஸ்ஜித் துல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. பௌத்தசாசன கலாசார அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முஸ்லிம் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் குறித்த இடத்திலிருந்து பள்ளிவாசலை அகற்றுவதென்ற பேச்சுக்கே இடமில்லை என்று வலியுறுத்தியுள்ளனர். பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றது. ஆனால் அரசாங்கமானது இந்த விடயத்தில் பாராமுகமாக செயற்படுகின்றது என்றும் அமைச்சர்கள் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். கிராண்ட்பாஸ் மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல் புதிய கட்டடத்தில் இயங்குவதனை பௌத்த தேரர்கள் தலைமையிலான குழுவினர் எதிர்த்து வருகின்றனர். இதனால் பழைய பள்ளிவாசலை பெருப்பித்து அதனை பயன்படுத்துவது என்றும் புதிய பள்ளிவாசல் கட்டிடத்தை மூடுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கூட்த்திற்கு முன்னர் சிரேஷ்ட அமை்சசர் ஏ.எச்.எம். பெளசியின் இல்லத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஒன்றிணைந்து அறிக்கை விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த முஸ்லிம் அமைச்சர்கள் இதுவரை 24 பள்ளிவாசல்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. பள்ளிவாசல்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றபோதிலும் அரசாங்கம் மௌனம் சாதித்து வருகின்றது. இதனைத் தடுத்துநிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறிலங்கா தௌபிக் ஜமாத் இயக்கத்தின் பிரதிநிதிகள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றோபதிலும் முஸ்லிம் அமைச்சர்கள் உரிய நடவடிக்ககைள. எடுக்கவில்லை. பொறுத்துப் பொறுத்து நாம் பொறுமை இழந்துவிட்டோம். இவ்வாறான நிலை தொடருமானால் நாம் முஸ்லிம் அமைச்சர்களை நம்புவதில் பயனில்லாது போகும் என்று கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்தையடுத்து அமைச்சர்களின் ஆதரவாளர்கள் சிலருக்கும் சிறிலங்கா தௌபிக் ஜமாத் அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் கைகலப்பும் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசலை அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, பைசர் முஸ்தபா ஆகியோர் நேற்று முற்பகல் சென்று பார்வையிட்டுள்ளனர். இவர்கள் கூட்டமொன்றினையும் நடத்தியுள்ளனர். எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அபள்ளிவாசலை அந்த இடத்திலிருந்து அகற்றுவதில்லை என்ற இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
புதிய பள்ளிவாசலை மூடி பழைய பள்ளிவாசலை பெருப்பிப்பதற்கும் தீர்மானம்: பிரதமர் தலைமையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஆராய்வு Reviewed by Admin on August 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.