தமிழர்களிடமும் பொதுமன்னிப்பு கோருமா அரசு? வெலிவேரிய சம்பவம் குறித்த அமைச்சர் பஸிலின் அறிவிப்பையொட்டி சுரேஷ் எம்.பி. கேள்வி
வெலிவேரிய சிங்கள மக்கள்விவகாரம்;முள்ளிவாய்க்காலோ தமிழ் மக்கள் விவகாரம் என்றபடியால்தான் அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என்றும் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சுத்தமான குடிதண்ணீருக்காக போராட்டம் நடத்திய வெலிவேரிய மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியமைக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் ஊடகங்கள் மூலமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிர்களையும், உடமைகளையும் இழந்தவர்களுக்கு முழு மனதுடன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துத்துக்கொள்வதாக அமைச்சர் பஸில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் இந்தக் கூற்றுத்தொடர்பில் நேற்று கருத்துத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கு, கிழக்கில் அரச படைகளின் திட்டமிட்ட தாக்குதலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில் மட்டும் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டன. சர்வதேச சமூகத்தினர் மட்டுமல்ல இலங்கை அரச தரப்பினர் கூட அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், இதற்கு இலங்கை அரசு இதுவரை மன்னிப்புக் கோரவில்லை.
தமிழருக்கு நியாயம் கிடைக்கவில்லை; தீர்வு எட்டப்படவில்லை. இந்தநிலையில் வெலிவேரியா ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு அரசு பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம். ஆனால், வடக்கு, கிழக்கில் படையினரின் தாக்குதலால் உயிரிழந்த பாதிக்கப்பட்ட தமிழருக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என்றார் சுரேஷ் எம்.பி.
தமிழர்களிடமும் பொதுமன்னிப்பு கோருமா அரசு? வெலிவேரிய சம்பவம் குறித்த அமைச்சர் பஸிலின் அறிவிப்பையொட்டி சுரேஷ் எம்.பி. கேள்வி
Reviewed by Admin
on
August 11, 2013
Rating:

No comments:
Post a Comment