மன்னாரில் இடம்பெறும் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா
தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மன்னார் தமிழ்ச் சங்கம் மன்னாரில் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் விழாவின் முதல் நாள் நிகழ்வுகள் வெள்ளிக் கிழமை (02.08.2013) மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெறுகின்றன. தொடக்க விழா, இலக்கிய அரங்கு, கலை அரங்கு என மூன்று அரங்குகளாக முதல் நாள் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. 'பேராசிரியர் சு. வித்தியானந்தன்' அரங்கு எனப் பெயரிடப்ட்டுள்ள அரங்கில் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் காலை 9.00 மணிக்கு தொடக்க விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.
மன்னார் மாவட்ட செயலகத்தின் முன்பாக ஊர்வலத்துடன் இவ்விழா ஆரம்பமாகும். ஊர்வலம் ஆரம்மாவதற்கு முன்னர் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள தனிநாயகம் அடிகளாரின் உருவச் சிலை மன்னார் ஆயர் இரா. யோசேப்பு ஆண்டகை அவர்களினால் திறந்துவைக்கப்படும். தொடக்க விழாவில் முதன்மை விருந்தினராக மன்னார் அரசாங்க அதிபர் திரு. எம். வை. எஸ். தேசப்பிரிய அவர்கள் கலந்துகொள்கிறார்.
சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகர பிதா திரு. எஸ். ஞானப்பிரகாசம் அவர்களும், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச. மோகநாதன் அவர்களும், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி; திருமதி றதனி யூட் அவர்களும், துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றன் அவர்களும் கலந்துகொள்கின்றனர். கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் யாழ் அமதிகள் முதல்வர் இல்லப் பொறுப்பாளர் அருட்திரு. ஜெறோம் லெம்பேட் அவர்களும் மலயகத்தின் மூத்த எழுத்தாளர் திரு. அந்தனி ஜீவா அவர்களும், திருகோணமலையின் மூத்த எழுத்தாளர் திரு. நந்தினி சேவியர் அவர்களும் கலந்துகொள்கின்றனர்.
சர்வமதத் தலைவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகும் இவ்விழாவில் இறைவணக்கம், மங்கள இசை ஆகியவற்றைத் தொடர்ந்து மன்னார் வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் (தமிழ்) திருமதி. பெப்பி விக்ரர் லெம்பேட் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகின்றார். இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் குழந்தைக் கலைஞர்கள் வழங்கும் 'யார் குழந்தை' என்ற நாட்டுக்கூத்து நாடகம் இடம்பெறும். 'தமிழாழி' என்ற பெயரில் நூற்றாண்டு விழா மலரும் வெளியிடப்படும்.
பாடசாலை மாணவ மாணவர்களின் நடன நாட்டிய நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. மன்னார் தமிழ்ச் சங்க நிர்வாகச் செயலாளர் மன்னார் அமுதன் நன்றியுரை வழங்குகின்றார். மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகும் இலக்கிய அரங்கு 'வித்துவான் ரகுமான் அரங்கு' என பெயரிடப்பட்டுள்ளது. மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு எம். சிவானந்தன் தலைமையில் இடம்பெறும் இவ்வரங்கில் முதன்மை விருந்தினராக மன்னார் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு எம். ஏ. ஜே. துரம் அவர்கள் கலந்துகொள்கின்றார். சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் வைத்தியர் எம். கதிர்காமநாதன் அவர்களும், மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாக அலுவலர் ஜனாப் எஸ். எம். என். சஜானி அவர்களும் கலந்துகொள்கின்றனர்.
கௌரவ விருந்தினர்களாக பேசாலையைச் சேர்ந்த இளைப்பாறிய அதிபர் கலாபூசணம் எஸ். அந்தோனி மிராண்டா அவர்களும், முருங்கனைச் சேர்ந்த இளைப்பாறிய அதிபர் கலாபூசணம் குழந்தை செபமாலை அவர்களும் கலந்துகொள்கின்றனர். விருந்தினர் கௌரவம், மங்கள விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றைத் தொடர்ந்து வரவேற்புரையை திருக்கேதீச்சரம் சிவனருள் இல்லப் பணிப்பாளர் திரு. வே. பொ. மாணிக்கவாசகர் நிகழ்த்துகின்றார். இந்நிகழ்வுக்கான ஆசியுரையை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு விக்ரர் சோசை அவர்கள் வழங்குகின்றார்.
இந்த அமர்வின் சிறப்பு நிகழ்வாக 'தனிநாயகமானார்' என்ற தலைப்பில் கவியரங்கம் இடம்பெறுகின்றது. கலாபூசணம் மன்னார் அமுது (அ. அந்தோனிமுத்து) அவர்களின் தலைமையில் இடம்பெறும் இக்வியரங்கில் மன்னார் மாவட்ட பாடசாலை மாணவர்கள் பங்கேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தினால் 'சுழலும் சொற்போர்' நிகழ்வு இடம்பெறுகின்றது. இதற்கு நடுவராக சிவஹீ மஹா தர்ம குமார குருக்கள் கடமையாற்றுகின்றார்.
தொடர்ந்து நடன நாட்டிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. நன்றியுரையை மன்னார் தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர் திரு. அமல்ராஜ் றெவல் வழங்குகின்றார். மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும் கலையரங்கு 'கவிஞர் நாவண்ணன் அரங்கு' என பெயரிடப்பட்டுள்ளது. மன்னார் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் ஜனாப் மக்கள் காதர் அவர்கள் இவ்வரங்கிற்கு தலைமை தாங்குகின்றார். மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரன்லி டி மெல் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்கின்றார்.
சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு. எம் ஸ்ரீஸ்கந்தக்குமார் அவர்களும், மடு பிரதேச செயலாளர் திரு. எவ். சி. சத்தியசோதி அவர்களும் கலந்துகொள்கின்றனர். கௌரவ விருந்தினர்களாக வங்காலையைச் சேர்ந்த எல். சி. லெம்பேட் அவர்களும் தாழ்வுபாட்டைச் சேர்ந்த கலைஞர் த. பர்னாந்து அவர்களும், பேசாலையைச் சேர்ந்த நாவலாசிரியர் எஸ். ஏ. உதயன் அவர்களும் கலந்துகொள்கின்றனர். விருந்தினர் கௌரவம், மக்கள விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றை தொடர்ந்து வரவேற்புரையை மன்னார் பிரதேச சபைத் தலைவர் திரு. எஸ் மாட்டீன் டயஸ் அவர்கள் வழங்குகின்றார்.
இவ்வரங்கின் சிறப்பு நிகழ்வுகளாக மன்னார் இளம் கலைஞர் மன்றம் வழங்கும் கர்நாடக இசைக்கச்சேரி இடம்பெறுகின்றது. அத்துடன் நானாட்டான், ஆவணம் கிராமத்தைச் சேர்ந்த புனித கார்மேல் அன்னை கலாமன்றத்தினால் 'தாவீதின் வெற்றி' என்ற நாட்டுக்கூத்து நாடகம் இடம்பெறுகின்றது. தொடர்ந்து பாடசாலை மாணவியர்களின் பல்வேறு நடன நாட்டிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றது.
நன்றியுரையை மன்னார் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த திரு. சதீஸ் என்பவர் வழங்குகின்றார். மன்னாரில் இடம்பெறும் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மன்னார் நகரின் நுழைவாயில் மிகப்பெரும் பதாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நகரமெங்கும் பல வர்ணக் கொடிகள் கட்டப்பட்டு மன்னார் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இடம்பெறும் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா
Reviewed by Admin
on
August 01, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment