தொடரும் சிங்கள குடியேற்றம்; மன்னாரில் 1300 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்ற 400 ஏக்கர் காடுகள் அழிப்பு [ படங்கள் ]
அனுராதபுரத்தில் இருந்து 1300 சிங்களக் குடும்பங்களை மன்னார் மாவட்டத்தில் உள்ள கொண்டைச்சிக்கும் கொக்குப்படையானுக்கும் இடையில் குடியேற்றும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சிறப்பு மீள்குடியேற்றத் திட்டம் என்ற பெயரில், 4 கி.மீ பிரதேசத்தில் இடம்பெற்று வரும் இந்த சிங்களக் குடியேற்ற நடவடிக்கை முசலிப் பிரதேச மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குடியேற்றத்துக்காக சுமார் 400 ஏக்கர் வரையிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.இந்த நிலத்தில் சிங்களக் குடும்பங்களுக்கு தலா அரை ஏக்கர் காணியும், வீடு ஒன்றும் விரைவில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இவர்களை முசலியில் பதிவு செய்வதானால், அதற்கு முன்னர் அனுராதபுரத்தில் தற்போதுள்ள பதிவுகளை நீக்க வேண்டும் என்று அதிபர் செயலணியிடம் பிரதேச செயலகம் கோரியுள்ளது.
ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.இந்தநிலையில், பதிவுகளை இடைநிறுத்தி வைக்க, பிரதேசசெயலர் கேதீஸ்வரன் மறுத்துள்ளார். இதனால் அதிகாரிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, பிரதேச செயலருக்கு இடமாற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வை.எஸ்.தேசப்பரிய, இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.வழக்கமான மீள்குடியேற்றத் திட்டமே இது என்றும் அவர் கூறியுள்ளார். அனுராதபுரத்தில் இருந்து பேருந்துகளில் மக்கள் முசலிக்கு கொண்டு வரப்பட்டதாகவும், பிரதேச செயலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார். அதேவேளை, முன்னர் பிரதேச செயலராக இருந்த சரத் ரவீந்திரன், இந்த சிறப்பு மீள்குடியேற்ற முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், ஏற்கனவு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முசலிப் பிரதேசத்தில் பதிவுகளை மேற்கொள்வதற்காக அனுராதபுரத்தில் இருந்து மக்கள் கொண்டு செல்லப்பட்டதையும், காடுகள் அழிக்கப்படுவதையும் அங்குள்ள தேவாலயங்களும், மசூதிகளும் உறுதிப்படுத்தியுள்ளன. சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்படவுள்ள பகுதி கடற்கரையை அண்டிய பகுதி என்று கொண்டைச்சியில் உள்ள பொதுமக்கள், தெரிவிக்கின்றனர்.முன்னர், கஜுவத்தை என்ற பெயரில் மரமுந்திரிப்பண்ணை அமைந்திருந்த, இந்தப் பகுதி போரின் போது கைவிடப்பட்டிருந்தது. தற்போது, மீளவும் இந்தப் பண்ணையைத் திறந்து புத்தாக குடியேற்றப்படும் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
1990களில் போரின் போது, இடம்பெயர்ந்த 2500 முஸ்லிம் குடும்பங்கள், தற்போது பல்கிப் பெருகி, 6000 குடும்பங்களாக மீளத் திரும்பியுள்ளன. முசலிப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமது நிலத்தை இழந்து வருவதாக கூறுகின்றனர். தமக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் திட்ட நிலம் சிங்களக் குடியேற்றங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நன்றி
தொடரும் சிங்கள குடியேற்றம்; மன்னாரில் 1300 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்ற 400 ஏக்கர் காடுகள் அழிப்பு [ படங்கள் ]
Reviewed by Admin
on
August 12, 2013
Rating:

No comments:
Post a Comment