அழிந்துபோகிறது வெடிவைத்தகல் கிராமம் -
தமிழர்கள் நிலம் இழந்து கொண்டிருக்கும் காலத்தில் வன்னியில் வெடிவைத்தகல் என்ற ஒரு கிராமம் அழிந்து கொண்டிருக்கிறது. இடுகாட்டைப்போல ஆளரவமற்ற ஒரு கிராமமாக மாறிக் கொண்டிருக்கிறது வெடிவைத்தகல். தமிழ் கிராமங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு தமிழ் கிராமம் மக்கள் இன்னமும் திரும்பாமல் அழிந்துகொண்டிருக்கிறது.
காடு மண்டி பாழடைந்த ஒரு கிராமத்தில் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளாக போரில் உடைந்த வீடுகளும் துர்ந்த கிணறுகளும் இன்னமும் இருக்கின்றன. வெடிவைத்த கல் கிராமத்தை அழிவடையச் செய்வதன் பின்னால் பெரும் அரசியல் இருக்கின்றது என்பதற்கு ஆதரமாக அங்கு இராணுவத்தினரே தற்பொழுது உள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் வெடிவைத்தகல் கிராமம் காலம் காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்த இடம். இக் கிராமத்தில் பல நூற்றுக்ணக்கான மக்கள் வாழ்ந்து வந்ததாக அருகில் இருக்கும் கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்தக் கிராமத்தில் 1985இல் 45 குடும்பங்கள் வசித்திருக்கின்றன. கடந்த பல வருடங்களாக தொடர் போர் காரணமாக இக் கிராம மக்கள் பல்வேறு இடங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்றிருந்தார்கள்.
இப் பகுதியை அண்டிய கொச்சன்குளம், கருங்காலிக்குளம், கருவேப்பம்குளம் பட்டிக்குடியிருப்பு முதலிய கிராமங்கள் இராணுவத்தின் தேவைக்காக அபகரித்துள்ள நிலையில்தான் வெடிவைத்தகல் அழிந்து கொண்டிருக்கிறது. இக் கிராமங்களை அண்டி அரச கட்டுப்பாட்டில் இருந்த வவுனியாக் கிராமங்கள் சிங்களக்குடியேற்றக் கிராமமாக மாறியுள்ளன. இன்று அக் கிராமங்கள் சிலவற்றுக்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் பாரம் பரியமாக வாழ்ந்து வந்த கொச்சன்குளம் கிராமத்தின் பெயர் கலாபோவசே என்று சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளதுடன் அக் கிராமத்தில் 700 சிங்களக்குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். வெடிவைத்தகல் கிராமம் ஒரு விவசாயக் கிராமம். அங்கு உள்ள வயல்களில் இராணுவத்தினரே விதைக்கின்றனர்.
எமது வயலில் யார் விதைப்பது என்று அக் கிராமவாசியொருவர் இராணுவத்தை கேட்டபொழுது இது இப்பொழுது மகாவலி எல் வலயத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது எமக்குச் சொந்தமானது என்று தெரிவித்துள்ளனர். கிராமத்தில் இருந்த வீடுகள், கிணறுகள், மரஞ்செடி கொடிகள் எல்லாம் யுத்தத்தில் அழிந்துவிட்டன. ஏ-9 வீதியிலிருந்து சுமார் 24 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இக்கிராமத்திற்கு வீதி புனரமைக்கப்படவுமில்லை. மின்சார இணைப்பு வழங்கப்படவுமில்லை.
காடு மண்டி இக்கிராமத்தில் இராணுவத்தினரை அடுத்து யானைகளும் சுகந்திரமாக உலாவருகின்றன. போரில் அழிந்து எஞ்சியவற்றை யானைகளும் அழித்துக் கொண்டிருக்கின்றன. தாம் வாழ்ந்த கிராமம் அழிந்து கொண்டிருக்கிறது என்று குமுறும் இப்பகுதி மக்கள் அரசாங்கம் தமிழ் மக்களை மீள்குடியேற்றுவதன் விசித்திரம் தமது கிராமத்தில்தான் அப்பட்டமாக வெளிப்படுகிறது எனத் தெரிவிக்கின்றனர்.
தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக பேசுபவர்களோ, தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பாகப் பேசுபவர்களோ, தமிழ் மக்களின் வசந்தம் தொடர்பாக பேசுபவர்களோ யாருமே தம்மை மீள்குடியேற்றவோ அழிந்துபோகும் தமது கிராமத்தை உயிர்பிக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே இந்த மக்களின் ஆதங்கம்.
வெடிவைத்தகல்லுக்கு திரும்புவதற்கான எந்த வசதிகளையும் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்காமலிருப்பது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை. அடிப்படை வசதிகள் ஏதுவும் கொடுக்காவிட்டால் மக்கள் அக் கிராமத்திற்குத் திரும்ப மாட்டார்கள் என்பதே இக் கிராமத்தை அபகரிக்க நினைப்பவர்களின் நோக்கம்.
இராணுவத்தினரோடு தமது கிராமத்தை அழித்து நாசம் செய்யும் யானைகளை வெளியேற்றுவதுடன் தமது கிராமத்திற்குச் செல்ல வழி அமைக்க வேண்டும் என்பதுதான் வெடிவைத்தகல் என்ற தமிழ்கிராம மக்களின் அங்கலாய்ப்பு. வெடிவைத்தகல் கிரா அழிவை தடுத்து நிறுத்தி அக்கிராமம் மீண்டும் உயிர் பெற அவசரமாக நடவடிக்கை எடுங்கள் என்கிறார்கள் இக்கிராம மக்கள். ஏனெனில் அழிவிலிருந்து தமிழர் தாயகத்தை காப்பாற்ற வேண்டும்.
அழிந்துபோகிறது வெடிவைத்தகல் கிராமம் -
Reviewed by NEWMANNAR
on
August 21, 2013
Rating:

No comments:
Post a Comment