போரில் மாயமான தமிழ் பெண்களை கண்டுபிடிக்க வேண்டும்: இலங்கை எம்.பி.யோகேஸ்வரன் பேட்டி
மதுரையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த யோகேஸ்வரன் எம்.பி., பனூர்காஷ்மீர் அமைப்பு தலைவர் அஸ்வனிகுமார் சருங்கோ ஆகியோர் வந்திருந்தனர்.
பின்னர் யோகேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
இலங்கையில் போரின் போது ஏராளமான இளைஞர்கள், பெண்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களை கண்டுபிடிக்கக் கோரியும் இதுவரை இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது ஐ.நா. பிரதிநிதி நவநீதம்பிள்ளையின் அறிக்கை சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசு நீக்க வேண்டும்.
இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிட்டால் சுமுக தீர்வு காணமுடியும்.
போருக்குப் பின் ஏற்பட்டுள்ள தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தங்களை தாங்களே சுயாட்சி செய்யும் நிர்ணய உரிமையை இலங்கை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும்.
ஆரம்ப காலத்தில் இருந்து துணையாக இருப்பதால் இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியாது.
வருகிற 21ந் தேதி இலங்கை வட மாகாண தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தல் முறையாக நடக்குமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக ஆட்சியை கைப்பற்றும். அதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு குளறுபடிகளை செய்ய திட்டம் தீட்டியுள்ளது.
எனவே இந்த தேர்தலை சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அஸ்வனிகுமார் சருங்கோ கூறுகையில், இலங்கை தமிழர் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினைகளில் மத்திய அரசு தவறான வெளியுறவுக் கொள்கையை கடைபிடித்து வருகிறது.
கடந்த மாதம் காஷ்மீர் கிஸ்துவார் கலவர சம்பவத்தில் ஏராளமான இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரம் குறித்து ஆளுநர் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
காஷ்மீரை தொடர்ந்து இந்தியா முழுவதும் தீவிரவாதம் பரவி வருகிறது. மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை இதற்கு உதாரணமாக கூறலாம் என்றார்.
போரில் மாயமான தமிழ் பெண்களை கண்டுபிடிக்க வேண்டும்: இலங்கை எம்.பி.யோகேஸ்வரன் பேட்டி
Reviewed by Admin
on
September 10, 2013
Rating:

No comments:
Post a Comment