வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டியது அவசியம்: சம்பந்தன்
வட புலத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டுமெனும் தனது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.
கடந்த மாதம் 21 ஆம் திகதி வடமாகாண சபைக்கென முதன் முதலாக நடத்தப்பட்டிருந்த தேர்தலில் அமோக வெற்றியைத் தனதாக்கிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,
வட புலத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் பிரசன்னமானது சிவில் செயற்பாடுகளுக்கு உதவாத நிலையிலும் வரவேற்கப்படாத நிலையிலுமே உள்ளது. எனவே இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படுவதுடன் அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என்றார்.
நடைபெற்று முடிந்த மேற்படி மாகாணசபைத் தேர்தல்களின் போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த இடையூறு விளைவிக்கும் வகிபாகத்தைச் சுட்டியுரைத்த சம்பந்தன், வாக்காளர் பெருமக்களை சாதுரியமான முறையில் அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் அடாவடித்தனங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தமைக்கு மேலாக தேர்தல்கள் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவினரின் கடும் தொனியில் அமைந்திருந்த கருத்துரைகளைக் கவர்ந்திருந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் வீடு தாக்கப்பட்டமை குறித்த சம்பவத்துடன் இராணுவத்திற்கு தொடர்பு இருந்ததாகவே பெரிதும் நம்பப்பட்டதெனவும் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி தனது கூடுதல் கவனஞ் செலுத்தி வடமாகாண மக்களின் ஜனநாயக ரீதியிலான விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டுமென தாங்கள் அவரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக கூறினார். முன்னாள் இராணுவ அதிகாரியாகக் கடமையாற்றிய தற்போதைய வடமாகாண ஆளுநருக்குப் பதிலாக சிவில் நிருவாக அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ‘‘புளொட்’’ அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இராணுவ மயப்படுத்தலின் தாற்பரியம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,
இராணுவத்தினரின் தொடர்ச்சியான அடக்கியாளும் நடவடிக்கைகள் மக்களைப் பீதியடைய வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இது குறித்து யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவிக்கையில்,
கடந்த 2009 டிசம்பரில் தான் பதவியேற்றபோது 26,400 ஆக காணப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கையானது தற்போது கிட்டத்தட்ட 13,200 ஆக குறைந்துள்ளதாகக் கூறினார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கையில் தங்கியிருந்த மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோரால் இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்த அவர் ஓரிரு சம்பவங்கள் அங்குமிங்குமாக நடந்திருக்கலாமெனவும் இராணுவத்தை தனியே விட்டு விடுமாறும் இந்த நாட்டில் தாங்கள் அரசியல் வகிபாகம் எதனையும் கொண்டிருக்கவில்லையெனவும் மேலும் குறிப்பிட்டார்.
வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டியது அவசியம்: சம்பந்தன்
Reviewed by Admin
on
October 02, 2013
Rating:
Reviewed by Admin
on
October 02, 2013
Rating:


No comments:
Post a Comment