பருவ மழை இன்மையால் விவசாயிகள் திண்டாட்டம்
பருவகால மழை இல்லாமையால் நெற் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியாமல் கவலையோடு காத்திருக்கும் விவசாயிகள் விதைத்து முளைத்த பயிரைப் பாதுகாக்க முடியாமலும் விதைக்காத வயலை உழுது விதைக்க முடியாமலும் திண்டாடுகின்றனர். இந்த வருடம் நெல் விதைப்புக்கு ஏற்ற முறையில் பருவ மழை பெய்யவில்லை.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடாநாட்டின் எந்தப் பகுதியிலும் மழை பெய்யவில்லை. இதனால் கடும் வறட்சியும் வெப்ப நிலை வீச்சும் அதிகரித்துள்ளது. இறுதியில் பெய்த மழையை நம்பி தாழ் நில வயல்களில் வருடாந்தம் விதைக்கும் மரபுவழி நெல்லினங்களான மொட்டைக்கறுப்பன், நாட்டு வெள்ளை, பச்சைப் பெருமாள் போன்ற 4-5 மாத நெல் விதைக்கப்பட்டது.
ஆனால் அது முளைத்துள்ள போதிலும் வயல் உரிய ஈரப்பதன் இன்றி காய்ந்து வருவதால் பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன. அதே நேரம் மேட்டு நில வயல்களில் காலம் தாழ்த்தி விதைப்புச் செய் யப்படும் மூன்றுமாத நெல்லினங்களை உழுது விதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் காலம் தப்பிய மழைவீழ்ச்சி வெள்ளப்பெருக் கால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் அறுவடை செய்த நெல்லை வயலில் இருந்து எடுக்க முடியாத நிலையால் யாழ்.மாவட்ட விவசாயிகள் எதிர்பாராத பாதிப்புக்கு உள்ளாகினர்.
இந்த வருடம் விதைப்பு மழை இல்லாமல் காலம் கடந்து செல்வதால் நெல் விதைப்பு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் நவராத்திரி ஆரம்பமாகிய போதிலும் கோடை காலம் போன்று வானிலை மற்றும் காலநிலை காணப் படுவதும் மழைக்குரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் வானம் பார்த்திருக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளாகி இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பருவ மழை இன்மையால் விவசாயிகள் திண்டாட்டம்
Reviewed by Admin
on
October 07, 2013
Rating:

No comments:
Post a Comment