பத்திரகாளியம்மன் ஆலயம் இரவோடு இரவாக தரைமட்டம்
மாத்தளை மாவட்டம் தம்புள்ள நகர பிரதேசத்திலுள்ள மகா பத்திரகாளியம்மன் ஆலயம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழ் தமிழர்கள் தெரிவிப்பதாக பிபிசி செய்தி சேவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்திருந்த இந்த ஆலயம் அந்த பிரதேசத்திலுள்ள இந்துக்களுக்கான ஒரேயொரு வழிபாட்டுத் தலமாக அமைந்திருந்தது.
பல வருடங்களாக தங்களது வழிபாட்டு தலமாக விளங்கிய ஆலயம் தற்போது முற்றாக அகற்றப்பட்டுள்ளமை தொடர்பாக அவர்கள் கவலையடைந்துள்ளார்கள்.
அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி நாடு நகர அபிவிருத்தி வாரியத்தினால் புனித பூமியாக அடையாளப்படுத்தப்பட்ட எல்லைக்குள் இந்த ஆலயம் அமைந்திருந்தது.
அந்தப் பகுதிக்குள் வாழ்ந்த தமிழ் குடும்பங்கள் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட போதிலும் ஆலயத்தில் தொடர்ந்தும் பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
ஆலயத்தை அந்த இடத்திலிருந்து அகற்றுமாறு பௌத்த விகாரையின் பிரதம பிக்குவினால் ஆலய பரிபாலகர்களுக்கு அழுத்தங்களும் நெருக்குதல்களும் இருந்ததாக அங்கு வாழும் தமிழர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஆலயத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு பொருத்தமான காணி வழங்குமாறு மத விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதம மந்திரி தி.மு ஜயரத்ன, காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் உட்டபட பலருக்கும் தங்களால் நேரில் கேரிக்கை முன்வைக்கப்பட்டும் சாதகமான பெறுபேறுகள் தங்களுக்கு கிடைக்க வில்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
ஆறு மாத காலத்திற்குள்வே 3-4 தடவைகள் தாக்கப்பட்ட இந்த ஆலயம் இறுதியாக கடந்த புதன்கிழமையும், தாக்கப்பட்டு ஆலயத்தின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு முன்பாக பறக்கவிடப்பட்டிருந்த நந்திக் கொடி கொடிக் கம்பத்துடன் பிடுங்கி வீசப்பட்டிருந்தது.
தற்போது ஆலயம் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய ஆலய பரிபாலகரான கே.லட்சுமி, ஆலயத்திலுள்ள உடமைகளை அகற்றுவதற்கு நாளை புதன்கிழமை வரை கால அவகாசம் தான் கேட்டிருந்ததாகக் கூறுகின்றார்.
நேற்று திங்கட்கிழமை குறித்த விகாரையின் பிரதம பிக்குவினால் இது தொடர்பாக தமக்கு அறிவிக்கப்பட்ட போது அதனை அகற்றுவதற்கு முன்னதாக சமய கிரியைகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கி இந்தக் கால அவகாசத்தை தான் கேட்டிருந்தாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
ஏற்கனவே அம்மன் விக்கிரகம் அகற்றப்பட்டு சேதமாக்கப்பட்டதையடுத்து, புதிய விக்கிரகமொன்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜனினால் வழங்கப்பட்டிருந்தது.
அதனைக் கூட வைத்து வழிபாடு செய்ய முடியாத நிலை தற்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.
பத்திரகாளியம்மன் ஆலயம் இரவோடு இரவாக தரைமட்டம்
Reviewed by Admin
on
October 30, 2013
Rating:

No comments:
Post a Comment